Thursday, November 5, 2015

நல்லவை நான்கு

மாதங்கள் சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்தலை ஒட்டி ஆரம்பிக்கவும் முடியவும் செய்கின்றன. இப்படிச் சரியாக 29 அல்லது 30 நாட்கள் ஒரு மாதத்திற்கு. ஆண்டுக்கு 354 அல்லது 355 நாட்கள்.

அப்படியானால் கிரிகோரியன் காலண்டருக்கும் இஸ்லாமிய காலண்டருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் வருமே என்று கேட்கிறீர்களா? ஆமாம் வரும்தான். ஆனாலும் இப்படித்தான் இஸ்லாமிய காலண்டர் இயங்குகிறது. 

இந்த முன்னூற்றி அறுபத்து ஐந்தேகால் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவரும் காலம். மாறிமாறி வரும் பருவநிலை மாற்றங்கள் – இதைப்பற்றி யெல்லாம் இஸ்லாத்காலண்டர் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், ஹிஜ்ரத் எனப்படும் ஆண்டுக் கணக்கானது முழுக்க முழுக்க தனித்துவமானது, நிலவைப் பின்பற்றியே செல்லக்கூடியது. நிலவு எல்லாப்பருவத்திலும் எந்நாளும் போல் தன் வளர்ந்து தேயும் பணியைச் செவ்வனே செய்வது போல், ஹிஜ்ரத்தும் தன்வழி செல்கிறது.

ஒரு காலண்டர் என்பது பண்பாட்டின் வெளிப்பாடு. பயன்பாட்டின் காலக்கோடு. அப்படித்தான் உலகின் எல்லாப்பாகங்களிலும் காலண்டர்கள் குறிக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் நைல்நதியின் வெள்ளப்பெருக்கை கணக்கில் கொள்வதற்காகத்தான் எகிப்தியர்கள் பருவநிலை மாற்றங்களை குறித்துக்கொண்டார்கள் எனப்பார்த்தோம். இதில் அவர்களின் அத்தியாவசிய தேவை குறித்தும், அவர்கள் வாழ்வாதாரம் குறித்தும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.


அதே போல்தான் விவசாயம் சார்ந்த நாடுகளில், சூரியனின் அடிப்படையிலான காலண்டர்களும் தோன்றின. ஏனெனில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயமானது முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களுக்கு உட்பட்டது. பருவநிலை மாற்றமோ பூமி சூரியனைச் சுற்றிவரும் செய்கையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவேதான், விவசாய நாடுகளில் – நிலவின் சுற்றுக்களை மாதமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் – நிலவின் மாதத்திற்கும், சூரிய தொடர்புடைய ஆண்டிற்கும் சமன் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வாரக்கணக்கை ஆண்டுக்கணக்குடன் நம்மைப்போன்ற விவசாய நாடுகள் சமன் செய்ய முயற்சிக்கவில்லை. வாரங்கள் தன்போக்கிற்கு வந்துகொண்டேயிருக்கிறது.


அத்தகைய நிர்ப்பந்தங்கள் ஏதும் இஸ்லாமிய காலண்டர்களுக்கு இல்லை. இஸ்லாமிய காலண்டர்களின் உற்பத்தி ஸ்தானமான அரபுநாடுகள் பெரும்பாலும் பாலை வனத்தால் ஆனவை. அவற்றில் விவசாயம் நடத்துவது எளிதல்ல. (தற்போதைய துபாய் உட்பட்ட அரபுநாடுகளில் நவீன முறைகளைப்பின்பற்றி பெரும் தோட்டங்களை உருவாக்கி பாலை நிலத்தில் சோலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது வேறு விசயம்). 

ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரபு பாலைவனங்களில் விவசாயம் இல்லை. வணிகமே பிரதான தொழில். ஒட்டகம் போன்ற கால்நடைகளை மேய்ப்பதும் தொழிலாக இருந்திருக்கிறது. பெட்ரோல் கண்டுபிடிப்பெல்லாம் பிற்காலத்தியவை.

அரபுமார்கள் பெரும் பணம் மிகுந்த பிரபுமார்களாக இருந்திருக்கின்றனர். உலகின் பல தேசங்களுக்கும் சென்று வியாபாரம் செய்து பெரும் பொருள் குவித்திருக்கின்றன். அவ்வாறு வியாபாரம் செய்ய இயலாதவர்கள் – பெரும் தனவந்தர்களின் அடிமையாக இருந்திருக்கின்றனர். .இந்நிலையால்தான் ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு அரபுநாடுகளில் அதிகம் இருந்திருக்கிறது. இந்நிலை அகற்றி ஏழைகளுக்கு அருள்பாலிக்கத்தான் தன் பெரும் போதனைகளை நபிகள்(ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்.

இத்தகைய வாழ்க்கை முறைக்கு சூரிய காலண்டர்கள் அவசியப்பட்டிருக்கவில்லை போலும். அதனால்தான் நிலவினை அடிப்படையான காலண்டர்களை அல்லாஹ் அருளினார் போலும். எனவேதான் சில சமயங்களில் தீபாவளியை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் பொங்கலை ஒட்டி ரம்ஸானும், சில சமயங்களில் ஒரே கிரிகோரியன் ஆண்டில் இரண்டு ரம்ஸானும் வர நேர்கிறது.

ஆக, இஸ்லாத் மாதங்கள் ஆண்டிற்கு பன்னிரண்டு. 

1. முஃகர்ரம்

2. சஃபர்

3. ரபி உல் அவ்வல்

4. ரபி உல் ஆகிர்

5. ஜமா அத்துல் அவ்வல்

6. ஜமா அத்துல் ஆகிர்

7. ரஜப்

8. ஷஃபான்

9. ரமலான்

10. ஷவ்வால்

11. துல் கஃதா

12. துல் ஹிஜ்ஜா

என்பவைதான் அவைகள்.

இஸ்லாமிய மதம் தியாகத்தைப் போற்றுகிறது. தியாகமே இஸ்லாம் சொல்லும் அடிப்படை கருத்து. எனவேதான், இஸ்லாமிய காலண்டர்களும் தியாகத்தைக் குறிக்கும் மாதத்தினில் ஆரம்பித்து தியாகத்தைக் குறிக்கும் மாதத்தில் முடிவடைகிறது.


முதல் மாதமான முஃகர்ரமானது, முகமது நபிகள் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் இமாம் ஹுசைன் ரலி அவர்கள் நாட்டில் பிரபுக்களின் (காஃபிர்கள்) கொடுமை வீழ்ந்து ஏழை எளியோரின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக, கர்பலாக் என்னும் போர்களத்தில் தனது இன்னுயிரை இழந்ததைக் குறிப்பிடும் தியாக மாதமாகும்.


பன்னிரண்டாவது மாதமான துல்ஹிஜ்ஜாவோ – இறை நம்பிக்கையில் தலைசிறந்தவரான இப்ராஹிம் அலை அவர்கள் தனது அருந்தவப்புதல்வனான இஸ்மாயிலை இறைவனுக்கு பலியிடத்துணிந்த தியாகத்தைக் குறிக்கிறது. 


இவ்வாறான தியாகத்தைப்போற்றும் இஸ்லாமியக்காலண்டர்களில் நான்கு மாதங்கள் மிகப்புனிதம் வாய்ந்தவையாக அல்லாஹ் அறிவுறுத்துகிறார். இம்மாதங்களில் பாவங்கள் செய்யாத படிக்கு இஸ்லாமியர்களை ஆணையிடுகிறார்.

“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்'' (ஸஹீஹுல் புஹாரி- -3197)

என்று ஸல் அவர்கள் விளக்குகிறார்.

No comments:

Post a Comment