Wednesday, October 7, 2015

இறுதித் தீர்ப்பு நாள்

உண்மையில் மாயன்கள் என்றொரு பெரும் கலாச்சாரம் கொண்ட ஆதிஇனம் இருந்தது என்பதைப்பற்றிய உலகின் கவனம் குவிந்தது, நாமும் இதுவரை அவர்களைப்பற்றிப் பார்த்து வந்தது எல்லாம், அவர்களின் ஆச்சரியம் மிக்க கணிப்புகளால்தான். அதையும் அவர்கள் கல்வெட்டுக்களாக, தங்களின் பிரம்மாண்டக் கட்டிடங்களில் குறித்து வைத்திருந்ததனால்தான்.

இம்மாதிரிக் குறிப்பெடுத்தல் என்பதைச் செய்யாமல் விட்டுவிட்ட எத்தனையோ அமைதியான, அழகான, அறிவார்ந்த, இன்றைய நமது பலகேள்விகளுக்கு விடைசொல்லக்கூடிய இனக்குழுக்கள் அன்றைக்கே உலகில் பலபகுதிகளில் பரந்து விரிந்து இருந்து இருக்கலாம். அவர்களை நாம் இழந்திருக்கலாம்.

ஒரு வாழ்வாங்கு வாழ்ந்த சமுதாயத்தின் எச்சமாக, என்றென்றும் இருக்கும் மச்சமாக, இல்லாதபோதும் இருக்கும் மிச்சமாக அடையாளமாவது அவர்களின் அறிவாற்றலைப் பதிந்து வைத்திருக்கும் தன்மையே. அதனால்தான், ஒரு சமுதாயத்தையே அழிக்க நினைக்கும் நச்சுமனம் கொண்டோர் முதலில் அச்சமுதாயத்தின் அறிவுசார் பதிவுகளை அழிக்க முனைகின்றனர். ‘யாழ்’ நூலகத்தின் அழிப்பு என்பதும் இத்தன்மைத்தான முன்னெடுப்புத்தான்.

எல்லோரும் அழியப்போகிறவர்கள்தான். ஆனால் இப்புவியை அழியாமல் நீண்டநாள் காக்கும் வழியில் வாழ்ந்த, இயற்கையை நேசித்த சமுதாயமும்.. இந்த இயற்கைக்கு எதிர்மறையான சமுகத்தால் அழிக்கப்படுவதும், மாறுபட்ட குணமுடையோரின் பழக்கவழக்கங்கள் சிறந்த நாகரீகமாகக் கருதப்படுவதும் தான் காலத்தின் கொடுமை.

அழிவைப்பற்றிய பயம் எங்கும் வியாபித்து இருக்கிறது. அழிவைப் பற்றிய பயமே, உலகில் கொஞ்சமேனும் இருக்கும் அறச்செயல்களுக்கு உள்ளார்ந்த காரணமாக இருக்கிறது. அழிவைப்பற்றிய பயமே நடக்கும் நன்மைகளுக்கும், நடந்துவிடாத தீமைகளுக்கும் ஆழமாக யோசித்தால் அடிப்படையான விடையாக இருக்கிறது. இந்த அழியும் பயத்தை போதிக்காத மதங்களே இல்லை எனலாம்.

ஒவ்வொருவரும் அவர்கள் வாழும் காலத்தில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் மரணத்திற்குப் பின்பு சென்றடைகிறார்கள் என்றும், மறபிறப்பு எய்துகிறார்கள் என்றும், இறுதிநாளின் தீர்ப்புப்படி இறைவன் தண்டிக்கிறார் என்றும் இயம்புகின்றன மதங்கள். கிருஸ்துவ மதமோ மரணமே பாவத்தின் சம்பளம்தான் என்கிறது. இவையெல்லாம் தனிமனிதனுக்கான இறுதித்தீர்ப்பு நாட்கள்.

இவைபோக, நாம் இருக்கும் இந்த உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்து போகும் நாள் வரும் எனவும் மதங்கள் பறைசாற்றுகின்றன. அந்த நாள் உண்டு என்பதிலும், அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதிலும் எல்லா மதங்களுக்கும் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக என்சிற்றறிவுக்கு எட்டியவரை தெரியவில்லை. அதுவும் மதம்சார் குழு நிறுவனங்கள் - இஸ்கான், பிரம்மகுமாரிகள் சபை, தேவ ஆராதனைக் கூடங்கள், இதர அனைத்து மதங்களின் சிறு வழிபாட்டுக்கூடங்கள் யாவிலும் உரக்க ஒலிப்பது.. உலகம் அழியும் நாள் சமீபித்து விட்டது என்ற கோஷமே! ( இது சரி-தவறு என்ற கணிக்கும் திறனெல்லாம் எனக்கு இல்லை -  இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்கிறேன். )

இந்து நம்பிக்கை, காலத்தை நான்கு யுகங்களாகப் பிரிக்கிறது. சத்திய, திரேத, துவாபர, கலி என நான்கு யுகங்கள். கலி என்பது இறுதியுகம். அதுவும் முடியும் தருவாயில் நாம் இருக்கிறோம். ‘காலம் கெட்டுப்போச்சு.. கலிமுத்திப் போச்சு’ன்னு எனக்கு விவரம் தெரியாத காலத்தில் இருந்து எங்கள் பாட்டி சொல்லிக்கொண்டுதான் வருகிறார்கள். ஏன் இப்படி அடிக்கடி சொல்கிறீர்கள் என அழுத்திக் கேட்டதில் கிடைத்தது ‘அவர்கள் பாட்டிகாலத்திலும் அவர்களை அப்படித்தான் சொன்னார்களாம்’.

கிருஸ்துவ நண்பர்களும் உலகின் அழிவும் இறைவனின் வருகையும் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டு விட்டதென்று நெடுநாளாகச் சொல்கிறார்கள். காலண்டர் கட்டுரைக்காக அவற்றையும் அனுகியிருக்கிறேன். நாம் பெரும்பாலும் புலங்குவதெல்லாம் கிரிகோரிஸ் பாதிரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட கிருஸ்துவக்காலண்டர் தானே! ‘அந்திக்கிருஸ்துவின்’ வருகை அறிவிக்கும் இறுதித் தீர்ப்புநாள் பற்றி நாம் பேசத்தானே போகிறோம்.



உயிரோடு இணைந்த அன்புறவான இஸ்லாத் சகோதரர்களும் உலகம் அழியும் என்பதை இயம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். உலகம் அழியும் அந்த நாளை தீர்மானிக்க வல்லவர் இறைவன் ஒருவரே. இறைத்தூதர் நபிகளுக்கு கூட நம்மிடம் இறுதிநாள் நெருங்கும் என அறிவுறுத்தும் பொறுப்பை மட்டுமே இறைவன் அளித்துள்ளார்.

படைத்தவனாலேயே இந்த உலகம் அழிக்கப்படும். அது எந்த நாளில் என்பதை மனிதர்களான நாம் அறிய முடியாது. அதன் ஞானம் அல்லாஹ்-னிடத்திலேயே இருக்கிறது. அதை விட்டு விட்டு இந்த நாளில் உலகம் அழிந்து விடும் என்று கூறுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

'(நபியோ) மறுமையின் நிகழ்வுநேரம் பற்றி உம்மிடம் அவர்கள் 'அது எப்போது வரும்?' என்று கேட்கிறார்கள். அந்த நேரம் பற்றிக் குறிப்பிட உமக்கு என்ன இருக்கிறது? உமது இறைவனிடமே அதன் முடிவு உள்ளது. நிச்சயமாக நீர்இ அதைப் பயப்படுவோருக்கு நீர் எச்சரிக்கை செய்பவர்தான்' (அல்குர்ஆன் 79:42-45).

மறுமை நாள் எப்போது ஏற்படும் என்ற ரகசியத்தை அல்லாஹ் தன் கையில் வைத்திருப்பதாக கூறுகின்றான். 'அது வரும்' என்பதைக் கூறும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்களே தவிர, அந்த நாள் வரும் காலம் பற்றி அவர்கள் கூறவில்லை.

மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஓதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். (அல் குர்ஆன் 78:17-18) ( Information courtesy to : yenadhumarkkam  Blogspot )