Tuesday, May 17, 2016

சுமேரியர்கள் 4

முன்னோர்களின் பகல் சிறியது. இரவு பெரியது. பகலில் உணவுத்தேவைக்காக உழைத்த மனிதன் இரவில் சிந்தித்தான். இரவு நீண்டு பெருத்தது. மாலை மயங்கியதும் மற்ற விலங்கினங்கள் உறங்க.. மனிதனின் சிந்தனை விழித்துக்கொண்டது. தான் பகலில் கண்ட ஒவ்வொன்றையும் மறுயோசனை செய்ய ஆரம்பித்தான். புதிதாக தான் கண்ட ஒவ்வொன்றும் அவனை ஆச்சரியப்படுத்தியது. மனதின் ஆச்சர்யத்தை, உணர்வை அவனால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டான். மொழி அவனுக்கு உதவியது.
மனித வளர்ச்சியானது அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிக்கையில் துவங்கியது என்கிறார்கள். உண்மையில் அவன் சிந்திக்கத்துவங்கிய கணத்தில் தான் துவங்கியது. அந்த சிந்திக்கத்துவங்கிய கணம் என்பது இரவுதான். மாலை மங்கியதும் மனிதனின் உடலுக்கான வேலை நின்றுவிடுகிறது. அவன் படுக்கைக்குச் செல்கிறான். மனிதன் படுத்தவுடன் தூங்கிவிடுவதில்லை. அவன் படுத்தவுடன் அவன் சிந்தனை விழிக்கத்துவங்குகிறது. தூக்கமற்ற மனிதன்தான் தன் தேவைக்கேற்ப புதுப்புது கண்டுபிடிப்புகளைத் துவங்கினான். புதுப்புது சிந்தனைகளை முன்வைத்தான். இப்போதும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் இசையை இரவில் அமைப்பதை காண்கிறோமே!
இப்படி இரவில் யோசிக்கத்துவங்கிய மனிதன் அவன் கண்ணெதிரே விரிந்து பரந்து கிடக்கும் வானத்தைக் கூர்ந்து நோக்க தவறினான் இல்லை. அதன் அசைவுகளை கவனித்தான். ஒவ்வொன்றையும் குறிப்பெடுக்கும் பழக்கமும் அவனுக்கு அதிக வலிமை சேர்த்தது. அதிசயங்கள் நிறைந்த வானமண்டலம் மனிதனிக் குறிப்புகளில் பதிவேறத்துவங்கியது.
சுமேரியர்களும், விவசாயத்தைக் கண்டனர். கட்டிடங்களைக் கண்டனர். வாழ்கை நடைமுறைகளைக் கண்டடைந்தனர். எழுத்தையும் கணக்கையும் கண்டனர் என்பதையும் தாண்டி அவர்கள் வான சாஸ்திரத்திலும் தங்கள் பங்கை உலகிற்கு அளிக்கத் தவறவில்லை. அவர்கள் சூரியனின் சுற்றுப்பாதையைக் கணக்கில் கொண்டு ஒரு மண் பாட்டித்தில் குறிப்பேற்றப்பட்ட ஏடுகளைக் கொண்டிருந்தனர்.
கி.மு.1330 வாக்கில் ஏழுத்துருவாக்கப்பட்ட ஒரு சுமேரியர்களின் சூரியநாட்காட்டி இப்போதைய ஈரான் ஈராக் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதில் சூரியனின் சுற்றுப்பாதை, அதன் வெய்யில் பாதிக்கும் பகுதியின் நீளம் வெய்யிலின் கோணம் போன்றவற்றை துல்லியமாக கணித்து குறிப்பெடுத்திருக்கின்றனர்.
இது அவர்களின் சூரியனின் பாதைகளைப் பற்றிய குறிப்புத்தானே தவிர அவர்கள் அதனைக் முறையானா நாட்காட்டியாக பயன்படுத்தினார்களா? என்பதைப் பற்றிய தெளிவான குறிப்புக்கள் காணப்படவில்லை. அவர்கள் சூரிய வழிபாட்டு முறைகளும் சந்திரவழிபாட்டை விட குறைவாகவே காணப்படுகிறது.



நாம் முன்பே பார்த்ததுமாதிரி “நன்னா“ என்னும் சந்திரக்கோவிலைக் கட்டி வழிபட்டனர். இந்த சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்வின் அடிப்படையில் மாதங்களைக் கணக்கிட்டனர். அவர்களின் மாதத்தின் துவக்கமானது அம்மாவாசைக்குப்பிறகு முதலில் பிறை தெரியும் நாளில் துவங்குகிறது. சந்திரப்பிறையின் அடுத்த சுற்று வரும்வரை ஒரு மாதம். அதுவும் சுமேரியர்களின் மாதங்களுக்கான பெயர்களும் *குறிப்பில்லை. பொதுவாக சுமேரியர்களின் பெரும் பண்பாட்டைப் பின்பற்றியவர்கள் பாபிலோனியர்கள். அவர்களின் காலண்டர் மாதங்களே சுமேரியர்களின் காலண்டர் மாதப்பெயர்களாக கருதுவதற்கு இடமிருக்கிறது.
ஆண்டுகள், மாதங்கள் பற்றிய சுமேரியர்களின் கணக்குகள் இவ்வாறு இருக்க, வாரங்கள் கிழமைகள் பற்றிய அவர்களின் பதிவுகள் ஆச்சர்யமளிக்கின்றன. உண்மையில் பதியப்பட்ட அனைத்து பழங்கால நாகரீக ஆவணங்களில் மிகப்பழமையானதாக இப்போது கருதப்படுவது சுமேரியன் நாகரீக படிமங்கள்தான்.
அவர்களின் அந்த ஆச்சர்யமான வாரச்செய்தி அவர்கள் 5 கிரகங்களை அறிந்து இருந்ததுதான். அவர்கள் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுப்பிடர் மற்றும் சாட்டர் ஆகிய ஐந்து கிரகங்களையும் அறிந்து இருந்தனர். ஆனால், இவற்றின் இயக்கங்களைப் பொருத்து இவர்கள் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. இந்த கிரகங்கள் அனைத்தும் பூமியைச் சுற்றிவருவதாக அவர்கள் கருதினர். இந்த ஐந்து கோள்களுடன் சேர்த்து அவர்களின் நம்பிக்கையின் படி பூமியைச் சுற்றி வரும் சந்திரனும், சூரியனையும் சேர்த்து ஏழுநாட்கள் கொண்ட வாரத்தை முதன்முதலில் சுமேரியர்களே உருவாக்கினர்.

மற்றபடி அவர்களின் முழுமையான காலண்டர் கணக்குகள், இன்னபிற பெயர்கள் எல்லாம் சுமேரியர்களைப் பின்தொடர்ந்த பாபிலோனிய நாகரீகத்தில் இருந்துதான் நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Monday, May 9, 2016

சுமேரியர்கள் 3

ஆரம்ப கால நதிக்கரை நாகரீகங்கள் உலகின் பலபகுதியிலும் பரவி இருந்து இடத்தால், மொழியால், வாழ்ந்த மனிதர்களின் நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகளில் பலவற்றில் ஓரளவிற்கு சம அறிவினர்களாகவே இருக்கிறார்கள் என்பது அவர்தம் எச்சமிச்சங்களைக் கொண்டு நாம் அறிகிறோம்.



உலகமுழுவதும் உள்ள நாகரீகங்கள் அனைத்தும் சற்றேரக்குறைய சமகாலத்தில் ஆற்றங்கரைச் சமவெளியில் காலூண்றியவையே. இவை ஆற்றங்கரையில் அமைந்ததன் காரணம் விவசாய வசதிக்காகத்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்களின் வற்றாத உணவுத்தேவை வேட்டையாடி சமூகத்தில் முழுமையாக நிரம்பப்படவில்லை, மேலும் பருவகால மாற்றங்களில் உணவுகிடைப்பது துர்லபமாய் இருந்தது. உணவு கிடைக்காத சமயங்களுக்காக சேமிக்கத்துவங்கினர். சேமித்த தாவர வித்துக்கள் திரும்ப முளைக்கத்துவங்கின. இதனைக் கூர்ந்து நோக்கிய மனிதன் விவசாயத்தை அறிந்தான். இந்த விவசாயத் தேவையே அவர்களை இன்ன பிற கண்டுபிடித்தலுக்கும் முன்னெடுத்துச் சென்றது எனலாம்.
நாகரீகத்தைக் கண்டடைந்த மக்கள், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்வதற்காக ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தனர். தங்குவதற்கு சிறு குடில்கள் முதல் பெரும் கட்டிடங்கள் வரை கட்டிக்கொண்டனர். குழுக்களாக பிரிந்த வாழ்ந்த அவர்கள் தங்களுக்கென அரசு முதல் அரண்கள் வரை அமைத்துக் கொண்டனர்.
விளைச்சலை எதிர்நோக்கும் பொருட்டு இயற்கையை கண்காணித்தனர். இயற்கையினை தொடர்ந்து கண்காணிக்க அவர்கள் காணும் ஒவ்வொரு பொருளி்ற்கும் அளவீடு தேவை
தான் கண்காணித்ததை ஏனையோருக்கு பகரும் பொருட்டுப் குறிப்பெடுத்தனர். இந்த கணக்குகள் குறிப்புகள் காலண்டராயின.
சுமேரியர்கள் புராதணசின்னங்களையும், நம்மைப்போலவே புராணங்கள் பலவற்றையும் கொண்டவர்கள் எனக்கண்டோம். அவர்களின் “ஊர்“ எனும் ஊர் மிகப்பெரிய நகரமாக இருந்தது. அந்த நகரில் தான் பைபிலில் குறிப்பிடப்படும் “ஆபிரகாம்“ எனும் ஆதிகால மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த நகரில் கி.மு.2100 வாக்கில் “நம்மு“ என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனது காலத்தில் சந்திரனுக்கு என “சிகுரத்“ என்னும் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. சுமேரியர்கள் சந்திரனை “நன்னா“ என்று அழைத்தனர். இந்த நன்னா எனும் சந்திரனுக்கான கோவிலே.. லுனார்காலண்டரினைப் பிரதிபலிப்பதுபோன்ற தோற்றத்தில் உள்ளது. மேலும் இக்கோவிலின் கட்டுமானங்கள் சற்று எகிப்திய மற்றும் இந்திய பாரம்பரியங்கள் இணைந்த கட்டிட அமைப்பில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர்களில் வியக்கவைக்கும் சித்திர கலை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.



கணக்குகளைப் பொருத்தவரையில், அதற்கு முன்பு இருந்தவர்களுக்கு மாற்றாக. தங்கள் கைவிரல்களின் அடிப்படையில் பத்து பத்து எண்களாக பலவற்றைக் கணக்கிட அறிந்து வைத்திருந்தனர். ( மாயன்களின் அடிப்படை எண்கள் இருபத்திநான்காகவும், சீனர்களின் அடிப்படையெண்கள் 12, 15 என பலவாறு வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்) இந்த கணக்குகளின் முதன்மைபோல.. எழுத்து உருவம் கண்டுபிடிப்பிலும் முதன்முதலாக அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் பதிவுறு சாதனையைப் புரிந்தது.. சுமேரியர்களே ஆவர்
இவர்களது எழுத்து அமைப்பு “ஹாப்பு“ என்று அழைக்கப்படுகிறது. இதன் வடிவமும் இந்தய அமைப்பை ஒத்து இருப்பதாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் எழுத்து அமைப்பை ஒத்ததாக உள்ளது. மேலும் குறிப்பாக.. சுமேரியர்களின் ஆதிமனிதர்கள் வாக்கியமான  “கி ரி கி பட் டு ரி யா“  என்ற வாக்கியமே குமரிக்கண்டம் எனும் தமிழர் பகுதியைக் குறிப்பது ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு “ ரி ட“ ஆகும். சுமேரியர்கள் ஒருசமயம் நமது குமரிக்கண்டம் எனும் லெமூரியா கடல் மூழ்கியபோது வடமேற்கிற்கில் நகர்ந்து குடியமர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருது கோள்களும் உள்ளது. எது எப்படியாயினும் உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன்பிற்காலத்திலும் சுமேரியர்கள் நாவாய்கள் மூலம் இந்திய கடல் பரப்பில் கோலோச்சினர் எனவும்.. இந்தியர்களுடன் குறிப்பாக தமிழர்களுடன் கடல்சார் வாணிபத்தில் ஈடுபட்டனர் எனவும் குறிப்புகள் உள்ளன.
இதையெல்லாம் கொண்டு ஒப்பு நோக்கும் போது, தமிழர்கள்களாகவோ அல்லது தமிழர்களுக்கு இணையானவர்களாகவோ.. சுமேரியர்களைக் கருத வாய்ப்பிருக்கிறது. கலாச்சார அடிப்படையிலும் வாழ்க்கை முறை அடிப்படையிலும் சுமேரியர்கள், ஆதித்தமிழர்களுடன் ஒத்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். மாடுகளை ஏர் என்னும் உழவுக்கருவியில் இணைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தியது முதல்.. விவசாய விளைபொருளை முதல்முதலாக இனிப்புடன் சேர்த்து சமைத்து சூரியக்கடவுளுக்கு படைக்கும் பழக்கமும் அவர்களுக்கு இருந்து இருக்கிறது.

இவ்வளவு இணைந்த அவர்கள்.. காலண்டரை எப்படிக் கணக்கிட்டார்கள்? அவர்கள் காலண்டரின் முதல்மாதம் எது?