Wednesday, April 29, 2015

நாள் - வாரம் - மாதம் - ஆண்டு!

காலண்டர் கணக்கீட்டினைத் பல்வேறு வகையாகவும் தொகுத்தலென்பது, தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. இக்கட்டின் அடிப்படைக் கண்ணி ‘நாள்’ என்பதாகும். ஒரு பகலும், ஒரு இரவும் ஒரு நாள். ஒரு நாளுக்குள்ளும் மணிநேரமென்றும், நிமிடமென்றும், நொடிகளென்றும் உட்பிரவுகள் உள்ளன. இந்திய, தமிழமுறையில் நாளென்பது நாழிகையால் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வழக்கத்திலிருக்கும் ஆங்கில கணக்கீட்டின் படி நாளென்பது நள்ளிரவில் துவங்கி நள்ளிரவில் முடிகிறது. ஆனால், தமிழ்சார் காலக்கணக்கில் ஆதவன் உதிக்கும் நேரத்தில் துவங்கும் முழுப்பகலும், தொடரும் முழு இரவும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஆங்கிலத்தைப் போல், ஒரு அரையிரவும் பின் வரும் பகலும் மறு அரையிரவும் அல்ல.

மீண்டும் கவனிக்கவும், சூரியனின் துவக்கத்திலேயே தமிழரின் நாள் துவங்குகிறது. இரவின் நடுவில் அல்ல. ஏன் இதை கவனத்தில் கொள்ளச்சொல்கிறேன் என்றால், ஆண்டுத்துவக்கத்தைப் பற்றிய உறுதிப்படுத்தலிலும் தமிழனின் ஆரம்பத்தில், ஆரம்பிக்கும் இக்குணத்தைக் கொண்டே, இறுதியில் நாம் ஒரு முடிவுக்கு வர இருக்கிறோம். (பின்னே, இறுதியில் முடிவுக்கு வந்துதானே ஆக வேண்டும்!)

- மாதங்களை மாதர்கள் பயன்படுத்தத் துவங்கியதை அறிந்தோம். இந்த மாதங்கள் பன்னிருமுறை சுழல ஒரு முழு ஆண்டு நிறைவடைகிறது. இம்மாதங்கள் சூரிய அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது. உண்மையில், சந்திர அடிப்படையான மாதங்கள், சூரியனைச் சுற்றும் பூமியின் பாதையின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சந்திரமாதங்கள், சூரிய மாதங்களாக பொருத்திச் சொல்லப்படுகிறது. இந்தப் பொருத்துதலின் அடிப்படையில்தான் ஆண்டுதுவங்கும் மாதத்திற்கான கணக்கீடும் உள்ளது.

அதாகப்பட்டது சந்திர மாதங்கள், சூரியச்சுற்றில் பன்னிரு முறை வருகிறது. எனவே, பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப்பாதையை பன்னிரு பிரிவுகளாகப் பிரித்து, பெயரிட்டு அவை சூரிய மாதங்களாக்கப்படுகிறது. இதில் ஆரம்பகால (மூட) நம்பிக்கையான பூமியை சூரியனும், சந்திரனும் சுற்றிவருகின்றது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். பூமியில் இருந்த மனிதன் தானிருக்கும் புள்ளியை (அதாவது பூமியை) மையமாகக் கருதி, தன்னிலிருந்து பிற கோள்களின் பெயர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதால் இந்த தோற்றப்பிழை.

இதன்படியும், பூமியை சூரியன் சுற்ற எடுத்துக்கொளும் கால அளவும் ஓராண்டு. இந்த ஓராண்டுச்சுற்றுத்தளம் 30 டிகிரி பாகையாக (30 x 12 =360 டிகிரி) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் இராசியாக குறிக்கப்படுகிறது. எனவே, ஒரு ஆண்டு முழுமைக்காக சூரியன் இந்த பன்னிரு இராசிகள் வழியாகவும் நுழைந்து பயணிக்கிறது. இவ்வாறு சூரியன் ஒவ்வொரு இராசியையும் கடக்கும் காலமே ‘சூரிய மாதம்’ என்றழைக்கப்படுகிறது.

இந்;த சூரியமாதத்தையும் (இராசிகளையும்), சந்திரமாதத்தையும் நட்சத்திரங்கள் இணைக்கிறது. பொதுவாக நட்சத்திரங்கள் எண்ணிறைந்து உள்ளது. எனினும்;, ஆதிமனிதன் அவதானிப்பின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் முக்கியமானதாக குறிக்கப்படுகிறது. இந்த நட்சத்திரத் தொகுப்பிற்கும் புவியில் உலவும் ஜீவராசிகளின் உருவ அமைப்பிற்கும் உள்ள பொருத்தத்தின் அடிப்படையில் இராசிகளுக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மேசம், ரிசபம் முதல் மீனம் வரை. (என்னா.. கிரியேட்டிவிட்டி!)

சந்திர மாதங்களுக்கான பெயர்கள், ஒரு சூரிய மாதத்தில் அதாவது ஒரு இராசியின் காலத்தில் சந்திர (முழுநிலவின் போது) பௌர்ணமி அன்று உதிக்கும் நட்சத்திரத்தைப் பொருத்து அமைகிறது. உதாரணமாக சூரிய மாதமான மேச இராசியில், பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரமான ‘சித்திரை’ என்பது குறிப்பிட்ட சந்திர மாதத்திற்கான பெயராகும். இதற்கான பட்டியில் பின்வருமாறு.
thanks : wikipedia.

இவையெல்லாம் மாதங்களைப் பற்றிய மேலெருந்த வாரியான குறிப்புகள். தவிரவும், காலண்டர் கணக்கீட்டில் மாதம் எனும் கட்டினைவிட சிறுபிரிவான வாரங்கள் எனப்படும் கிழமையும் உண்டு. கிழமை என்பது ஒளிரும் கோள் வரிசையான் அமைந்த முழுமை எனப் பொருள்பெறும். கிழமைகள் பெரும்பாலும் மதச்சடங்குகளும், அதற்கொப்ப வானியல் அறிவும் தொடங்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது. மாதத்திற்கான தேவையும், அதன் வானியல் தொடர்பும் வெளிப்படையானது. ஆனால், கிழமை எனப்படும் வாரத்திற்கான தேவையென்பது சற்று நுட்பமானது.

கோள்களைக் கண்டது மட்டுமல்லாது அவற்றின் குணங்களையும், அவை மனிதன் மீதான தாக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துகின்றன எனும் அறிவையும் ஆரம்ப கால மனிதன் பெற்றிருந்தான் என்பதும், அவற்றையே வழிபடு பொருளாக அமைவு செய்து, தன் உணர்விற்கும், உணர்ந்தவற்றிற்குமான தூரத்தை அறிவினால் தைத்தான் என்பதையும் உணர்ந்து, உணர்ந்து மெச்சலாம். அதுமட்டுமில்லாமல் இவையெல்லாம் உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படும், இந்திய தேசத்தின் அறிவுசார் கொடையென்பது உள்ளபடியே, நம் பெருமை!

- ஆதிமனிதன் கிரகங்களையும் அதன் சுழற்சிப் போக்கையும் யுகித்து அறிந்திருந்தான். அவன் கண்ட ஒளிரும் கிரகங்கள் ஐந்தும் யாதெனின், செவ்வாய், அறிவன்(புதன்), குரு(வியாழன்) சுக்கிரன்(வெள்ளி), அடுத்தது காரி அல்லது மந்தன்(சனி). இவற்றோடினைந்த பகற்கோள் சூரியன். இராக்கோள் சந்திரன். ஆக ஏழும் சேர்ந்தது ஒரு வாரம். இவ்வாரக்கட்டுக்கள் மாதங்களை ஒட்டாமல் மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக சுழன்று கொண்டிருக்கிறது.

 இச்சுழற்ச்சியின் அடிப்படையில் ஐம்பத்தியிரண்டு வாரங்கள் அல்லது கிழமைகள் கொண்டது, ஒரு ஆண்டு.

ஆக, - சூரியனின் ஒரு முழுச்சுற்று ஓரு ஆண்டு.
-    சந்திரனின் ஒரு முழுச்சுற்று ஒரு மாதம்.
-    கோள்களின் வரிசைக்கிரமம் ஒரு வாரம்.
-    பூமி தன்னைத்தானே சுற்றும் ஒரு சுற்று நாள்.