Thursday, July 9, 2015

நூடுல்ஸின் தாயகம்

பூமியில் மனிதன் தோன்றி பன்னெடுங்காலமானாலும், நாகரீகமடைந்த, அதிகாரப்பூர்வமான வரலாற்றினைத் துவங்கி வைத்த மனிதன் ஆற்றங்கரைகளில்தான் தன் முதற் குடியிருப்புகளை அமைத்தான். ஆறுகள் தான் அவன் கண்டு செய்த விவசாயத்திற்கு நீராகவும், அவன் வாழ்விற்கு வேராகவும் இருந்தது. ஆக, ஓடும் நதிகள்தான் நாடோடியாகத் திரிந்த மனிதனை ஓரிடத்தில் உறைந்து வாழ வைத்தவை.

நாடோடியாக என்ற பதம் கூட தவறுதான். காடோடி என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், ஓரிடத்தில் உறைய ஆரம்பித்த மனிதன்தான் இது என்னுடைய இடம் என உரிமை கொண்டான். தன்னாடு, தன்மக்கள் என சொந்தம் கொண்டாடினான். அத்தகு இடத்தில் தன் வாழ்வாதார வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சமைத்துக்கொண்டான். 

அலைந்து திரிந்த மனிதனுக்கு அனுதினமும் தனக்கு ஏற்படும் இடர்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதே வேலையாய் இருந்தது. ஓரிடத்தில் உறைந்து வாழத்துவங்கிய மனிதனுக்கு ஓய்வு நேரம் அதிகமிருந்தது. ஆனால் அவன் ஓய்ந்திருக்க வில்லை. கட்டிடம் கண்டான். கலைகள் கண்டான். மொழியும் மரபும் கண்டான். மனிதனுக்கான எல்லாமும் கண்டான். காலண்டரையும் கண்டுபிடித்தான்.

அத்தகு பண்டைய நாகரீகங்களில் குறிப்பிடத்தகுந்தது சில. நமது நாட்டில் இருந்து சிறந்த சிந்து சமவெளி நாகரீகம், எகிப்தின் நைல் நதி நாகரீகம், யூப்ரடிஸ் மற்றும் டைகரீஸ் நதிகளுக்கு இடையேயான சுமேரிய நாகரீகம் அல்லது மெசபடோமிய நாகரீகம், சீனத்தின் மஞ்சளாற்று நாகரீகம், ஆகியவை.



தற்போது இந்த வரலாற்று நாகரீகங்களின் சுவடுகள் நினைவாகக் கிடைத்த பழம் கட்டிடங்கள், அவற்றின் சிதைவுகள் மற்றும் சில பயன்படுத்தப்பட்ட ஓடுகளாகத்தான் இருக்கின்றன். அவர்கள் வாழ்ந்த நடைமுறைப் பண்பாடுகள் சடங்குகள் ஏடுகளின் வாயிலாக அறியக்கிடைக்குமேயன்றி.. எள்ளவும் நடைமுறையில் இல்லை. இதில் ஓரளவேனும் விதிவலக்கு என்றால் அது சீன நாகரீகமே! சீனத்தின் மஞ்சளாற்று நாகரீகத்தின் சுவடுகள் வெறும், நினைவாகக் கிடைத்த பழம் பொருட்களாக மட்டுமல்லால்.. தற்போதைய பழக்க வழக்கங்களிலும், சடங்குகளிலும் அவர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது அவர்களின் தனிச் சிறப்பு! அது மட்டுமல்லாமன் சீனாவிற்கு என்று பல சிறப்புக்கள் உண்டு.

பட்டென்றால் பட்டென்று நினைவுக்கு வருவது, வரவேண்டியது போத்தீஸோ.. ஆர்.எம்.கே.வியோ அல்ல. சீனதேசம்தான். சீனர்கள் தான் பட்டுப்புழுவிலிருந்து இழையெடுத்து பட்டாடை செய்வதெப்படி என்பதை கண்டடைந்தவர்கள். பட்டு மட்டுமா? பட்.. பட.. பட்டென்று.. பண்டிகைக்கு நாம் வெடித்துக் கொண்டாடும் பட்டாசையும் அவர்கள் தான் கண்டுபிடித்தனர். காகிதமும் அவர்கள் கண்டுபிடிப்புத்தான். தினம் பருகும் தேனீரும் அவர்கள்; தேடலின் விளைவுதான்.

இன்னபிற அன்றாடத் தேவைகளில் நாம் பயன்படுத்தும் ஏகப்பட்ட சாதனங்கள் சீனர்களின் சாதனைகள்தான். நாம்காணும் எல்லாக் கண்டுபிடிப்புகளிலும் ஓரு முக்கிய அத்தியாயம் சீனாவிலிருந்துதான் துவங்கும். இவ்வளவு ஏன்? இன்றைக்கு நம்பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்த உணவாகி.. தற்போது தவறான உற்பத்தி நிறுவனத்தின் போக்கினால் தடைசெய்யப்பட்டிருக்கும் நூடுல்ஸின் தாயகமும் சீனம்தான். சீனர்கள் தங்கள் மூக்கை சற்று சப்பையாக இருந்தாலும் எல்லாத்துறைகளிலும் நுழைத்துவிடுவார்கள். ஒலிம்பிக்ஸில் குவிக்கும் மெடல்கள் முதல்.. ஒரிஜினல் போலவே செய்யப்படும் மாடல்கள் வரை சீனர்கள் முத்திரை பதித்துவருவதே இதற்கு சாட்சி.

சீனர்கள் மக்கள் தொகையில் நமக்கு முன்னதாக இருக்கும் நாடு மட்டுமல்ல, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உட்பட்ட பல்வேறு சாமாச்சாரங்களில் முக்கியம் வகிக்கும் நாடும் கூட. இவ்வாண்டு குடியரசு தினத்திற்கு அமெரிக்க அதிபரே இந்தியா வருகிறார். நம் பிரதமரோ, பன்முறை சீனா சென்று, இருநாட்டு உறவுகளில் ஒரு நன்முறை உருவாக்க பிரயத்தனப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், சீனாவின் முக்கியத்துவத்தை.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் ஆரம்பக்காலம் தொட்டே நெருங்கிய தொடர்பு உண்டு. தென்கடலில் சேர, சோழ, பாண்டியர்கள் கோலோச்சிய காலத்தில் சீனத்தின் வியாபாரம் தமிழர்களோடுதான். சீனத்துப்பட்டும், யவனத்து கலைகளும் தமிழகத்தின் கரையொதுங்கிக் கிடந்தன. புத்த மத தொப்புள்கொடி பற்றி வந்த சீனப்பயணிகள் ‘யுவான்சுவாங்கும், பாஹியானும்’ நமது காஞ்சியின் சிறப்பையும், தமிழக வனப்பையும் மெச்சிச் செல்கின்றனர். கல்விக்கும் கலைக்கும் சொர்க்கபுரியாக அப்போதைய நமது நாகரீகம் சிறந்தோங்கியிருந்தாக அவர்கள் சொல்கின்றனர். (நம்மைப் பற்றி அடுத்தவர்கள் புகழமாறு ஆவண செய்ய வேண்டும் என போன வாரம் சொல்லியிருந்தேன். அதையும் அப்போதே நம்மவர்கள் செய்திருக்கிறார்கள் போல)

சீனத்துப்பயணிகள் தமிழர்களின் நாவாய்கள் மூலமாகத்தான் இந்தியாவிற்கு வந்து புத்த மதம் பயின்றிருக்கின்றனர். புத்தமதத்தையும் தமிழர்கள்தான் சீனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். மதம் மட்டுமா.. மருத்துவமும், இன்றளவும் சீனாவில் மரித்துவிடாதிருக்கும் மார்சியல் ஆர்ட்ஸ்களும் அதாவது தற்காப்புக்கலைகளும் தமிழர்கள் சொல்லிக்கொடுத்ததுதான். ஆதாரம் -  போதிதர்மர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ். (நமக்கு இதுபற்றியெல்லாம் எட்டாம் அறிவுதான்!)

இப்படியெல்லாம் தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் அவ்வளவு பாசப்பிணைப்பு. பண்பாட்டுத் தொடர்பு. காலகாலமாக நம்முடன் நெருங்கிய தொடர்புள்ள சீனர்களின் காலண்டர்கள் சொல்லும் கதைதான் என்ன?