Thursday, March 26, 2015

காலண்டர் கதைகள் - பெயர்க்காரணம்

நாம் காணும் எல்லாவற்றையும் பெயரிட்டழைக்கிறோம். பெயரில்லாத ஒன்றை நான் சந்தித்ததாக எனக்கு நினைவில்லை. பெயருக்கும் - பெயரிடப்பட்டவற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒன்றின் தோற்றம், குணம், செயல் போன்ற காரணிகளில் இருந்தோ அல்லது அவற்றைக் குறிக்கும் பொருட்டோதான் பெயரிடப்படுகிறது. 
“எங்க ஊர்ல ‘சிரஞ்சீவி’ன்னு ஒருத்தர் இருந்தாரு.. சின்ன வயசிலயே செத்துப்போயிட்டாரு, இதுக்கு என்ன சொல்றன்னு எல்லாம் நீங்க கேட்கக்கூடாது – (அவர் இன்னும் உங்கள் நினைவறையில் சிரஞ்சீவியாக இருக்கிறார் அல்லவா?) ” அது போக, கருப்பாயிருப்பவருக்கு வெள்ளச்சாமி என்ற பெயர், என்பன போன்ற முரண்கள் இங்கு பேசு பொருள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து மனிதன் என்று பெயர். இங்கு மனிதன் அல்லாதவற்றின் பெயர்களைப் பேசுவோம். அவற்றின் பெயர்களுக்கு மேற்சொன்ன காரணிகளே, காரணங்கள்! அது போல்தான் காலண்டருக்கும்.
இக்கட்டுரைத் தொடரில் நாட்காட்டி என்பதிற்குப் பதிலாக காலண்டர் என்ற பதத்தை பயன்படுத்தியதைப் பற்றிப் பேசுவோம் என்றிருந்தேன். அதாகப்பட்டது, நாட்காட்டி என்ற பதம் வெறுமனே ‘நாட்களை சுட்டும் பட்டியல்’ என்பதாகப் படுகிறது. ஆனால், காலண்டர் என்பது - மணித்துளி, நாழிகை, ஓரை, குளிகை, பொழுது, யோகம், நோக்கு, லக்னம், சூலம், கரணம், பட்சம், நாள் (அ) திகதி, திதி, நாள்மீன் (நட்சத்திரம்), பிறை, வாரம், மாதம் மற்றும் ஆண்டு உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஆகவேதான் ‘தமிழ் நாட்காட்டி’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்க்காலண்டர்’ என்ற பதத்தை பயன்படுத்துகிறேன்.
காலண்டர் - என்பது ஆங்கிலச் சொல்லும் அல்ல. அது ‘காலண்ட்’ kalend எனப்படும் இலத்தீன் மொழிச்சொல்லாகும். ‘காலண்ட்’ என்றால், ‘கணக்கில் எடுத்துக் கொள்வது’ எனவும் ‘ஆரம்பம்’ எனவும்; பொருள். ஆரம்பகால காலண்டரின் முதல் தேதிக்கும் ‘காலண்ட்’ என்பதே பெயராகும். சுலபமாக சொல்வோமானால் End என்றால் முடிவு. Kalend என்றால் ஆரம்பம். ஆக, ‘காலண்ட்’ ல் துவங்குவதே காலண்டர். 
மாதத்தில் முக்கிய நாட்கள் மூன்று. –(உடனே, அந்த மூன்று நாட்களை நினைக்கக் கூடாது. இது வேறு)– அதாவது, ‘காலண்ட்’ Kalend , ‘நோநஸ்’ Nonus மற்றும் ‘இடஸ்’ Idas.
1. ‘காலண்ட்’ என்பது மாதத்தின் முதல் நாள்.
2. ‘நோநஸ்’ என்றால் இலத்தின் மொழியில் ‘ஒன்பது’ Nine(9) என்பதைக் குறிக்கும். காலண்டர் நடைமுறையில், 30 நாட்களைக் கொண்ட மாதங்களில், 6-ம் தேதியையும், 31 நாட்களைக் கொண்ட மாதத்தில் 7-ம் தேதியையும் குறிக்கும்.
3. 30 நாட்களைக் கொண்ட மாதத்தில் 15-ம் தேதியும், 31 நாட்களைக் கொண்ட மாதத்தில் 16-ம் தேதியும் - ‘இடஸ்’ என்னும் இடை நாள். கணக்கின்படி, ‘இடஸ்’க்கு முந்தைய 9ம் நாள் ‘நோநஸ்’. 
இம்மூன்று நாட்களைக் கொண்டுதான் மீதி நாட்களையும் குறிப்பிட்டனர். நிகழ்வுகளைப் பதிந்து கொண்டனர். ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் சீசர்’ காவியத்தில், ‘சீசருக்கான இறுதி எச்சரிக்கை’ ஒரு மார்ச் மாத நோநஸ் தினத்தில் வரும் என்பது குறிப்பிடத் தகுந்த காட்சி. 

அந்தக்கால ஆங்கிலேயர்கள், நாட்களையோ நேரத்தையோ குறிப்பிட, அதன் முக்கிய பிரிவிலிருந்து.. இவ்வளவு தூரத்தில் உள்ளது எனக் குறிப்பிடுவது சம்பிரதாயம். உதாரணமாக, தற்பொழுது 11.30 மணியை Eleven Thirty என்று கூறுகிறோம். அவர்களோ, Half Past Eleven என்று குறிப்பிடுவார்கள். 11.45 மணிக்கு Eleven Fortyfive என்று குறிப்பிடாமல்  Quarter to Noon என்றோ Quarter to Midnight என்றோதான் குறிப்பிடுவார்கள். பள்ளிப்பாடத்தில் ஆங்கிலத்தில் நேரங்களைப் பற்றிப் படித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே வழக்கப்படி நாட்களையும்..
-முதல் தேதியை காலண்ட் என்றும்
-இரண்டாம் தேதியை நோநஸ்க்கு முந்தைய 5ம் நாள் என்றும்
-மூன்றாம் தேதியை நோநஸ்க்கு முந்தைய 4ம் நாள் என்றும்
….
-ஆறாம் தேதியை நோநஸ் என்றும்
-ஏழாம் தேதியை இடஸ்க்கு முந்தைய எட்டாம் நாள் என்றும்
-புதினாறாம் தேதியை இடஸ் என்றும்
பதினேழாம் தேதியை காலண்டிற்கு முந்தைய பதினைந்தாம் நாள் என வரிசையாக தொடர்ந்து மீண்டும் காலண்ட் இல் ஆரம்பமாகும் இப் பட்டிலை ‘காலண்டர்’ எனவும் குறிப்பிட்டனர்.

Friday, March 20, 2015

காலெண்டர் கதைகள் - ஆங்கில காலெண்டர்

காலண்டர்களைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆரம்பிக்கையில், நாம் முதலிலும் முக்கியமாவுகம் தெரிந்து கொள்ள வேண்டியது, நாம் முக்காலே முழுவீதம் அன்றாடம் புழங்கும் ஆங்கிலக்காலண்டர்கள் தானல்லவா?
மாநகரத்தின் பிரதான சாலையாகட்டும்.. மாநில நெடுஞ்சாலையிலிருந்து கிளைத்து நீளும் மண்சாலையின் முடிவில், தனித்திருக்கும் குறுங்கிராமமாகட்டும்.. இரவெல்லாம் விழித்திருந்து.. நேரம்பார்த்து.. என் இனிய தமிழ் மக்கள் அனைவரும் Happy New Year சொல்லி வரவேற்று வாழ்த்துப்பாடி ஜனவரி முதல் தேதியில் துவங்கும் ஆங்கிலப்புத்தாண்டு துவங்கியது கிரேக்கத்தில்.
கிரேக்கர்கள் பயன்படுத்திவந்த ஆரம்பகால காலண்டர்களில் பல்வேறு சீர்திருத்தங்களைப் புகுத்தி.. தற்போது நடைமுறையில் இருக்கும் காலண்டர்களுக்கு நெருங்கிய வடிவத்தில் கொண்டு வந்தவர்கள் ரோமானியர்கள். கிரேக்கர்களின் கடவுள் பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்த மாதங்களுடன் ரோம சாம்ராஜ்யத்தின் மாமன்னர்களான அகஸ்டஸ் சீசரும், ஜுலியஸ் சீசரும் உள் நுழைந்ததெல்லாம் அவர்களின் தாங்களே அமைத்துக்கொண்ட சீர்திருத்தங்களினால்தான்.
தத்துவ விசாரங்களிலும், வீரத்திலும் மேம்பட்டிருந்த கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த காலண்டரின் ஆரம்பவேர் உண்மையில்… அதிசயமான கட்டுமானங்களையும், வியத்தகு வானியல் அறிவையும், மனிதன் இறந்தும் கூட ஆயிரம் ஆண்டுகளாய் உடல் கெடாமல் ‘மம்மி’யாக வைத்து காக்குமளவிற்கு அறிவியலும், மருத்துவ அறிவையும் பெற்றிருந்த எகிப்திய நாகரீகத்தில் தான்.
நமது சிந்துவும், சீனாவின் மஞ்சளாற்று நாகரீகமும் இருந்த காலத்தில் தோன்றி.. இன்றளவும் நிலைத்து நிற்கும் ஸ்பிங்ஸ், பிரமிடு என பிரமிக்க வைக்கும் கட்டுமானங்களை நமக்களித்த எகிப்து நாகரீகம்தான், பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட காலண்டரின் ஆரம்ப வித்தை விதைத்தது.
எகிப்து நாகரீகத்தின் அடிப்படை வாழ்வாதாரமான நைல் நதி, மிகுந்த வெள்ளத்தை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் எகிப்தியர்கள் வாழிடங்களில் பெருக்கி.. வாழ்வின் சோதனைக் கலனாகவும் விளங்கியது.  இதனை உணர்ந்த எகிப்தியர்கள் நதி பெருக்கெடுக்கும் கால கட்டங்களில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பருவகாலங்களை குறித்துக் கொண்டார்கள். பருவ காலங்கள்; சுழற்சியில் வருவதை உணர்ந்து குறித்துக்கொண்ட எகிப்தியர்கள் ஆரம்பகால காலண்டர்களை நமக்கு வழங்கினர். இக்காலண்டர்கள் நான்கு பருவங்கள் கொண்டதாகவும் சூரியனை அடிப்படையாக (Solar Calendars) கொண்டதாகவும் ஆகும்.
கடவுள் நம்பிக்கையும், யூக அறிவும், வலிமையும் பெற்றிருந்த கிரேக்கர்கள் தற்போதைய நாற்காட்டியின் வழிகாட்டியாக இருந்ததில் வியப்பில்லைத்தானே! நாம் தற்போது பயன்படுத்தி வரும் காலண்டருக்கு சற்றேரக்குறைய ஒரே மாதிரியான காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.  ஏகிப்தியர்களின் சூரிய காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தாலும் அவர்களின் காலண்டரில் பருவகாலங்கள் மட்டுமின்றி, மாதங்களும் இருந்தன.
‘மார்ட்டியஸ்’ என்பதில் துவங்கி ‘பிப்ரவோரியஸ்’ மாதத்தில் முடிவடைந்த ஒவ்வொரு மாதத்திற்கும் கடவுளரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.
ரோமானியர்களும், கிரேக்கர்களும் - கி.மு. 146 இல் 'ரோமர்' முழுவதுமாக கிரேக்கத்தை கைப்பற்றும் வரை - அடிக்கடி போரிட்டுக்கொண்டனர். போர் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் நடந்தது. பருவகாலங்களின் அடிப்படையில் போரிடும் முறையில் மாற்றங்களும் ஏற்பட்டன. போர்முறைகளில் தந்திரங்களும் பெருகிவந்தன. அவற்றில் தலையாயது காலங்கருதி போரிடுவதுதான். இதனால் பல நுட்பான குறிப்புகளும் கால அட்டவனையில் ஏறின. வானியல் சாஸ்திர அறிவும் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அதிகரித்து வந்த காலத்தில் அதன் அனைத்து மாற்றங்களையும் காலண்டர் ஏற்றிக்கொண்டது.
ரோம சாம்ராஜ்யம் ஐரோப்பா முழுமையையும் தன் ஆளுமைக்கு உட்படுத்தியிருந்த காலகட்டத்தில் இப்போதைய காலண்டரின் இறுதிவடிவம் எட்டியது எனலாம். தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் தங்களின் அனைத்து சம்பிரதாயங்களையும் நடைமுறைப்படுத்திய ரோமானியர்கள் தாங்கள் உருவாக்கிய காலண்டரையும் அன்றாட மக்களின் புழக்கத்தில் வழக்கப்படுத்தினர். ரோமானியர்களே ஜெருசலம், பெத்தகேமில் தோன்றிய புதிய மதமான கிருஸ்தவ மதத்தையும் ஐரோப்பா முழுவதும் பரப்பியது.
கிருஸ்தவமதம் காலண்டர் கணக்குகளையும் தனது வழிபாடுகளையும் ஒரு சேர கணித்துக்கொண்டது. இயேசு கிருஸ்து வாழ்ந்த காலத்தை கொண்டு கி.மு., கி.பி. என ஆண்டினை குறியிடத்துவங்கியது. காலண்டரின் வளர்ந்து வரும் போக்கினை எல்லாம் உள்வாங்கி ஒரு இறுதி வடிவம் தந்தது. தற்போதைய திருத்தப்பட்ட காலண்டரை அறிவித்தது கிறிகோறிஸ் என்ற பாதிரியார் தான். தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஆங்கில காலண்டருக்கு ‘கிறிகோறிஸ் காலண்டர்’ என்ற பெயரும் உண்டு. ரோம் பரப்பிய கிருஸ்தவம் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும், பிறகு உலகெங்கும் வியாபித்தது போல காலண்டரும் பரவி நமது பயன்பாட்டிற்கு வந்தடைந்தது.

Wednesday, March 11, 2015

காலண்டர் கதைகள் - அறிமுகம் 2

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு.. அப்போதைய முதல்வர் கலைஞர் சட்டப்பேரவையில் தமிழர்களின் ஆண்டுத் துவக்கம் தை மாதமே. சித்திரை மாதமல்ல என அறிவித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களும் விவாதங்களும் மேடை தோறும் நிறைவேறின. தையே என்போரும் சித்திரையே என்போரும் மாறிமாறிச் சொற்போர் தொடுத்துவந்த சூழலில், நாமும் சும்மா நிற்போர் என்றிராமல், ஏற்போர் ஏற்க்கட்டும் எனத்துணிந்து, எளிமையாய்க் கற்போரும் உணர இவ்விவாதங்களை ஆதாரங்களுடன் அடுக்கி அளிக்கலாம் என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. 
பொதுவாக, தினம் தினம் எதைக் கிழிக்கிறோமோ இல்லையோ காலண்டர் தாளைக் கிழிக்கிறோம். அதற்கு ஈடாக காலண்டரும் நம் வாழ்வின் சிறு பகுதியை நாள்தோறும் கிழித்து விடுகிறது. 
- சூரியன் மற்றும் சந்திரனின் அடிப்படையில் கொண்ட நாள் காட்டிகள், மக்கள் தங்கள் ஆதிகாலப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட நாள்காட்டிகள், இதர இயற்கை மற்றும் வானியல் குறிப்புகளை உடைய நாள்காட்டிகள் என உலகெங்கிலும் மக்கள் தங்கள் தங்கள் சூழல்களுக்கும் தேவைகளுக்கேற்ப பல்வேறு விதமான காலண்டர்களைப் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டைப் பொருத்த மட்டிலோ சொல்ல வேண்டியதே இல்லை. வேற்றுமையிலும் ஒற்றுமை என விந்தை பொங்கும் எந்தையர் நாட்டில் மொழிக்கு ஒரு காலண்டர். இனத்திற்கு ஓரு காலண்டர். தினத்திற்கு ஒரு காலண்டர். பயன்பாட்டின் அடிப்படையில் பேர் பெற்ற காலண்டர்களும் உண்டு. பேருக்கு என்றிருக்கும் காலண்டர்களும் உண்டு.
நமது வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளும் காலண்டர் எண்களுடன் பின்னிப் பினைந்தே இருக்கின்றன. ஒரு நன்நாளில் தான் குழந்தை பிறக்கிறது. அடுத்தடுத்த தேதியின் படியே பெற்றெடுத்த குழந்தையின் வளர்ச்சிப் படி. பள்ளி செல்வதும் நல்லதொரு நாளில். கல்லூரிக் காலமும், வேலையில் சேருவதுவும் சுபவேளையில் அல்லவா? சுபயோக சுபதினத்தில் தானே திருமணம்? பின் யாதொரு நிகழ்வையும் காலண்டர் கணக்கில் காட்டாமல் குறிப்பிட இயலாதல்லவா? மரணித்துப் போவதையும் மார்க் செய்து கொள்கிறது காலண்டர். 
விஞ்ஞானமும், விவசாயமும் காலண்டரை விட்டு விட்டா கணக்குத் துவங்குகிறது? மழை மாரியும், மறிகடற் சீற்றமும், மண்ணுள்ள பிறவும் காலண்டரின் கட்டங்களுக்குள் தானே நாம் கட்டி வைத்துக் கொள்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் இசைவாயுள்ள காலண்டரைப் பற்றித்தான் என்னென்ன கதைகள்? என்னென்ன செய்திகள்? 
அத்தகு கதைகளில், செய்திகளில் தான் என்னென்ன சுவாரசியங்கள்? 
நம்ஊர் காலண்டரில் துவக்கப் பிரச்சனை என்றால்.. அமெரிக்க ஆதி வாசிகளான மாயன் இனத்தவரின் காலண்டரில் முடிவதில் பிரச்சனை. 
ஐரோப்பியர்கள் செல்ல விலங்குகளுக்கு நாட்களின் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்றால்.. சீனர்களோ வருடங்களுக்கு விலங்குகளின் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
உலகெங்கும் ஒரே காலண்டர் பயன்படுத்தபட்டு வரும் அதே வேளையில்.. தனி ஒரு மனிதருக்கான செயல்பாட்டுச் சுழற்சிக் காலண்டரும் உண்டு.
இன்னும் இன்னும் விழி விரிய சுவாரசியங்களை விவரித்துக்கொண்டே போகலாம்.. ‘ஏப்ரல் ஃபூல்’  முதல் ‘டிசம்பர் கூல்’ வரை ஏராளமாக சரக்கிருக்கிறது இக் காலண்டர் கதைகளின் ஊடே.  அவற்றையெல்லாம் இனி ஒவ்வொன்றாக இறக்கிவைக்கிறேன். தொடர்ந்து நீங்களும் நன்றென்றால் தட்டிக்கொடுத்தும், தவறென்றால் சுட்டிக்கொடுத்தும் என்னோடும் இக்கட்டுரை முழுக்க பயணிப்பீர்கள் எனும் நம்பிக்கையில்..

Wednesday, March 4, 2015

காலண்டர் கதைகள் - அறிமுகம் 1



நன்றி கூறி முடிப்பதுதான் வழக்கமென்றாலும்.. வழக்கமானதைச் செய்வதுதான் நமக்கு வழக்கமில்லையே! எனவே நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். நான் நன்றி கூறுவது திரு.வதிலைபிரபா அவர்களுக்கு. அவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
நான் என்னைக் கண்டுபிடிக்க வைத்தவர் பிரபா அவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பன் ஆனந்தபிரகாஷ்  மூலம் அறிமுகமாகிய தினம் முதல் பல்வேறு காலகட்டங்களிலும் எனது தொய்விலும், எழுச்சியிலும் இன்று வரை உடன் இருப்பவர். எனக்கு சமகால சிற்றிதழ்கள் உலகில் மெல்லிய அறிமுகம் இருக்குமென்றால் அதற்கு முழுமுழுக் காரணம் வதிலைபிரபா அவர்கள் தான்.
பல்வேறு கருத்து வேறுபாடுகளும், சிறுஊடல்களும் எங்களின் நட்பு வெளியில் நட்சத்திரங்களாய்ச் சிதறிக்கிடந்தாலும், அவர் மீதான அன்பெனும் சூரியன் முன் அவை எம்மாத்திரம்?
அது இருக்க, இந்த உரை நான் இனி தொடந்து இங்கே எழுதப்போகும் காலண்டர் கதைகளின் அறிமுக உரை.
காலண்டர் கதைகள் ஏற்கெனவெ 2010 வாக்கில் மகாகவி மாத இதழில் தொடர் கட்டுரையாய் வந்தவைதாம். அதுவும் ஒருமுறை திரு.வதிலைபிரபா அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் நான் கூறிய விசயங்களைக் கொண்டு, இதை ஏன் நீங்கள் தொடர் கட்டுரையாக எழுக்கூடாது எனக்கேட்டு அதற்கு தளமும் அமைத்துக் கொடுத்து, மாத மாதம் நான் எழுதத் தாமதிக்கும் போதெல்லாம் தாயன்புடன் பொறுத்திருந்து அன்பாய் அவர் வெளியிட்ட கட்டுரை தொடர்.
எனவே, நானும் எழுதுவேன் என நம்பிக்கைதந்து, எழுத பயிற்சியும் தந்து, எழுதவும் வைத்து, எழுதியதை வெளியீடும் செய்தளித்த திரு.வதிலைபிரபா அவர்களுக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.
காலண்டர் கதைகள் தொடர் கட்டுரையாக வந்தது என்று சொன்னேன். பல்வேறு காரணங்களாய் ஏழு எட்டு கட்டுரைகளுக்குப்பிறகு அது தொடர்ந்து மகாகவி மாத இதழில் வரவில்லை. சிற்றிதழ்களுக்கான பெருமையே அது விட்டு விட்டு வந்தாலும் ஒரேடியாக விட்டுவிடாமல் இருப்பதுதான். அப்பெருமையே நீண்ட காலம் விட்டு இனி இணையம் வாயிலாக தொடரப் போகும் இக்கட்டுரையும் ஏற்கிறது.
காலண்டர் கதைகள் என்பது, உலகலாவிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரப் பிரிவினரிடையே புழக்கத்தில் இருந்த, இருக்கும் காலண்டர்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றிக் கிடையேயான தொடர்புகளைப் பற்றிய ஆய்வும், நமது தமிழ்க்காலண்டரின் ( நாள்காட்டி தான் அய்யாக்களே.. காலண்டர் என்னும் சொல்லின் பொருள் நாட்காட்டி என்பதைக் காட்டிலும் சற்று விசாலமாக இருப்பதாக தோன்றுவதாலும் ( எவ்வாறு காலண்டர் நாட்;காட்டியை விட விசாலம் என்று கட்டுரையினுள் கண்டிப்பாக ஆயப்படும், அய்யா!)  பெரும்பாண்மை சாமாண்யர்களின் புழக்கத்தில் உள்ளதாலும் - தமிழ்க்காலண்டர் ) ஆண்டு துவங்கும் மாதத்தைப் சர்ச்சையின் ஆழமான.. அறிவியல் ரீதியான.. ஆதாரப்பூர்வமான.. தீர்விற்கான தேடல்; நிகழ்த்தும் தொடர் கட்டுரைகள் ஆகும்.
வதிலைபிரபா போன்றோர் தரும் நம்பிக்கையினாலும், எனது ஆர்வமிகுதியினாலும், சிறிதுகாலம் இது குறித்து கொஞ்சம் அறிதல்களுடன் இருந்த காரணத்தினாலும் இக்கட்டுரைத் தொடரை மீண்டும் இணைத்தில் வாயிலாக எழுத ஆரம்பிக்கிறேன்.

எனது தவறுகள் ஏதுமிருப்பின் அதைத் திருத்தும் முகமாகவும், நான் எழுதியதைக்காட்டிலும் அதிகத்தகவல் இருப்பின் அதனைத் தெரிவிக்கும் முகமாகவும் நீங்கள் இடும் கருத்துரைகளை ஆவலுடன் எதிர்பார்த்து ஆரம்பிக்கிறேன்.