Friday, August 28, 2015

சீனக்காலண்டர் 5

பண்டைய சீனப்பழக்க வழக்கங்களை மூடநம்பிக்கைகளின் நிலவரையாகப் பார்க்கும் அறிவுலகம், சீனக்காலண்டரை மட்டும் விண்ணறிவின் தோரணவாயிலாகப் பார்க்கிறது. சீனக்காலண்டர் நிலவின் தன்மைத்தான மாதச்சுற்றுக்கும், சூரியனின் பின்செல்லும் ஆண்டுச்சுற்றிற்குமான கால வித்தியாசத்தை சரியாகக் கணிக்கிறது. பிரபல கிரிகோரியன் காலண்டரில் கூட இந்த கணிப்பு மிகத்துல்லியமாக இல்லை.

அதாவது, பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் நாட்கள் 365.25 என சொல்லப்பட்டாலும் உண்மையில் மிகச்சரியாக 365.25 நாட்கள் இல்லை. நுட்பமான உண்மை என்னவெனில், பூமி சூரியனை ஒரு முழுச்சுற்று சுற்றிவரும் நேரமானது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் மற்றும் 46 நொடிகள் ஆகும். 365 நாட்கள் கழித்த மீதி நேரத்தை நாட்களாக கணக்கெடுத்தால் 0.23 நாட்களாகிறது. இந்தக்கணக்கும் இருபின்னங்களுக்கு திருத்தப்பட்ட வடிவமாகும். 

இதன்படி ஒரு ஆண்டுக்கு 365.23 நாட்கள்தான். இந்த 0.23 நாட்களைத்தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழுநாளாக மாற்றி கிரிகோரியன் ஆண்டுடன் சேர்த்துக்கொள்கிறோம். இதன்படி ஒரு லீப் இயர்க்கு உண்மையான ஆண்டுச்சுற்றை விட 0.08 நாட்கள் அதிகமாக சேர்த்துக் கொள்கிறோம். இந்த அதிகப்படியான நாட்சுற்றை கிரிகோரியன் காலண்டர் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் டே இல்லாத லீப் இயராக நேர் செய்ய முயற்சிக்கிறது. எனினும் இதில் சற்றுக் குறைபாடே உள்ளது. 



இந்த கணக்கை சீனக்காலண்டர் வேறுமாதிரி கையாளுகிறது. அதுதான், 60 ஆண்டுகளுக்கான சுற்று (sexagenary cycle). 

சீனத்தின் காலண்டர் நம்பிக்கையைப் பொறுத்த மட்டில் அவர்கள் ஆண்டுகளை அவற்றின் தன்மையை வைத்து 12 ஆண்டுகளாக தொகுத்துள்ளனர் என்பதை நாம் ஏற்கெனவே அறிவோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளையும் 10 விதமான அடிப்படை தெய்வீக தன்மைகளின் ஆட்சியில் அமைவதாகக் கருதுகின்றனர். இந்த பத்து அடிப்படை தெய்வீகத்தன்மைகளும் ஒவ்வொரு தன்மையும் ஒவ்வொரு ஆண்டை ஆட்சிசெய்வதாக கருதுகின்றனர். 

இந்தக்கணக்கில் வரும் போது முதல் பத்து ஆண்டை வரிசையாக பத்து தெய்வீக தன்மைகள் ஆளுகின்றன். பதினோறாவது ஆண்டை, மீண்டும் முதல் தெய்வீகத்தன்மை ஆளுகிறது.  புனிரெண்டாவது ஆண்டை இரண்டாவது தெய்வீகமும் அடுத்;துவரும் முதல் ஆண்டை மூன்றாவது தெய்வீகத்தன்மையும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டை நான்காவது தன்மையும்.. இப்படியாக வரிசையாக இவை இரண்டும் (10ம், 12ம் )பூர்த்தியாக 60 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த அறுபது ஆண்டுச்சுற்றில், 29 நாட்களைக் கொண்ட மாதங்களாக 12 மாதங்கள் nPகாண்ட சாதா ஆண்டுகள் 45ம், 13 மாதங்களைக் கொண்டு சீன லீப் ஆண்டுகள் 15 ஆண்டும் சேர்ந்து, நாளின் சுற்றில் மாதத்தின் சுற்றிற்கான பாக்கியையும், மாதத்தின் சுற்றில் ஆண்டின் சுற்றிற்றகான பாக்கியும் எந்த பாக்கியும் இல்லாமல் நிறைவாகிறது. 

இந்த பாக்கியற்ற நிறைவுச்சுற்றுக்களை பூமியோடு இணைந்து தானும் சுற்றிய மனித வாழ்வைத்தான் நாமும் ச~;டி யப்த பூர்த்தியாக கொண்டாடுகிறோம். ஏனெனில் 60வருடங்களில்தான் ஒரு மனிதனும் தன் வாழ்நாளில் அனைத்து கிரகங்களின் திசை, பார்வை, பெயர்ச்சிகளையும் சந்தித்து முழுமையாக அனுபவித்து முடிக்கிறான் என நமது ஜோதிடமும் சொல்கிறது.

ஆக, நமக்கும் சீனாவிற்குமான பல்வேறு தர்க்கரீதியான ஒற்றுமைகளைப் பார்த்தோம். சீனர்களின் காலண்டர் இன்னும் ஆயிரம் ஆயிரம் நுட்பங்களைக் கொண்டது. இதில் நமக்குத் தேவையான பலவற்றையும், சுவாரசியமான சிலவற்றையும் அறிந்து கொண்டோம். அதாவது, நமக்கும் அவர்களுக்குமான பாரம்பரிய தொடர்பு, தொன்று தொட்டு கொண்டாடிவரும் விழாக்களில் அவர்களுக்கும் நமக்குமான சம்மந்தங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் ஆண்டுத்துவக்கம் நமது தைமாத திகதிகளில் ஆரம்பிக்கிறது என்பது.

சீனர்களை மட்டும் கொண்டு நாமும் அப்படித்தான் என்று சொல்லி விட முடியாது. உலகின் பண்டைய காலண்டர்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று பார்த்து விடலாம் என்றுதான் இந்த உலகின் காலண்டர்களைத் தேடி சுற்ற ஆரம்பித்தோம்.  அந்த வரிசையில் நாம் அடுத்துக் காணப்போவது ‘மாயன் காலண்டர்கள்’.

2012-ல் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்திப்பரப்பரப்பு ஏற்படுத்தியே அதே மாயன் காலண்டரைத்தான் காணப்போகிறோம். 

Saturday, August 15, 2015

சீனக்காலண்டர் 4

சீனக்காலண்டர், சீனாவில் மட்டுமல்லாது தைவான், ஹாங்காங், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், மாகே, தென்கொரியா, இந்தோனிசா, புருனே, டாயோ, வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ( ஏனோ, கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறது ) அதனால்தான் சீனக்காலண்டரை அதிகம் கவனிக்க வேண்டும்.

சீனக்காலண்டரின் நாள் என்பது, நாம் ஏற்கெனவே சொன்னது போல், நள்ளிரவில் துவங்குகிறது. நள்ளிரவு 12 மணிமுதல் மருநாள் இரவு 12 மணிவரை ஒரு நாள். 

வாரக்கணக்கு, அவர்கள் வரலாறு மாற மாற மாறிவந்திருக்கிறது. பொதுவாக ஒரு தொடர்ந்த உழைப்பின் நாட்களும், ஒரு ஓய்வுநாளும் அவர்களின் ஆரம்பகால வாரம். மிங் வம்ச ஆட்சிக்காலத்தில் பத்துநாட்கள் கொண்ட வாரம், பதினைந்து நாட்கள் கொண்ட வாரம், இருபது நாட்கள் கொண்ட வாரம் எல்லாம் அந்த அந்தப் பகுதிகளின் விவசாய நடைமுறைக்கேற்ப புழக்கத்தில் இருந்தது. 

நிலவின் அடிப்படையில் அமைந்த காலண்டர்கள் மெல்ல மெல்ல நிலைபெற்ற பிறகு பதினைந்து நாட்கள் கொண்ட வாரங்கள் இரண்டாகப்பிரித்து (பதினைந்தில் சரிபாதி ஏழரை தானேன்னு ஏழரையப் பண்ணாதீங்க!) ஏழுநாட்களைக் கொண்ட உழைப்பின் வாரத்தை உருவாக்கினார்கள். 

ஏழு நாட்களின் பெயர்கள் எண்களின் வரிசைக் கிரமத்தில் அமைந்தது. முதல்நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள், ஆறாம் நாள் என்பவைதாம் அவை. 

உலகத்தில் வாரங்களுக்கு முதல் முதலாக கிரகங்களின் பெயரிட்டவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்கும். தற்போது பயன்படுத்திவரும் கிரிகோரியன் காலண்டரின் அடிப்படையால் அமைந்த கிரேக்க காலண்டரில் ஆரம்ப காலத்தில் வாரங்கள் இல்லை. அது பிற்சேர்க்கையே. அதெல்லாம் இருக்கட்டும் நீ எழாம் நாளை சொல்லாமல் விட்டுவிட்டாய் என்கிறீர்களா? ஆம், சீனர்களும்தான். சீனர்கள் ஏழாம் நாளுக்கு மட்டும் ஏழாம் நாள் என பெயரிடவில்லை. அன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை.

மாதங்கள்தான் பொதுவாக காலண்டரின் பெரிதும் பிரச்சனையில்லாத பிசிறில்லாத அமைப்புக்களாக ஆரம்பம் முதல் இருக்கின்றன. நிலா அடிப்படையிலான மாதங்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் நாளைப் பகுக்க மனிதர்களுக்கு உதவியது. 

கிரிகோரியன் காலண்டரிலும், நமது காலண்டர்களிலும் நிலவின் சுற்றான மாதத்தையும் (29.5 நாட்கள்), பூமியின் சூரியனைச்சுற்றி வரும் வருடத்தையும் (365.25) ஒரு முழு வட்டமாக அமைக்க, பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடத்தையும்.. மாதத்தின் நாட்கள் ஒரு 30, 31 நாட்கள் என பிரித்து சமாளித்து லீப் வருடத்தையும் அமைத்தார்கள். அப்படியிருந்தும் அவை இன்றும் பொருந்தாத கணக்குகளாகவே இருக்கின்றன. நமது ஜோதிட அமைப்பு இந்த கணக்கு இடிப்புக்கு, சில தீர்வுகளை முன்வைக்கிறது. ( அதனை நம்நாட்டிற்கு வந்த பின்னர் காணலாம். இப்போது சீனாவில் அல்லவா இருக்கிறோம். )



சீனக்காலண்டரோ இந்த மாத ஆண்டுச்சுற்றுக்கு வேறுமாதிரியான தீர்வை மேற்கொள்கிறது. சீன மாதங்கள் மிகச்சரியாக நிலவின் சுற்றை ஒட்டி இருக்கின்றன. மாதங்கள் 29 நாட்களைக் கொண்டவை. 30,31 என அவர்கள் மாத நாட்களை நீட்டித்துக் கொள்ளவில்லை. மாறாக வருடங்களுக்கான மாதங்களை மாற்றி அமைத்துக்கொண்டனர்.

வழக்கமாக பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடங்கள். பன்னிரண்டு மாதங்களுக்கான வருடம் 348 நாள். வருடத்திற்கு 365 நாட்களுக்கும் இதற்குமான இடைவெளி கிட்டத்தட்ட பதினேழு நாட்கள். இந்த நாட்களை நிறைவு செய்ய சீனர்கள் லீப் வருடங்களை உபயோகித்தனர். 

லீப் வருடங்களுக்கு 13 மாதங்கள். லீப் வருடங்களை அவர்கள் embolismic வருடங்கள் ( மொத்தக்கூட்டு வருடங்கள் ) என அழைத்தனர். இந்த மாதிரியான மாதங்களின் ஏற்ற இறக்கங்ளைக் கொண்ட வருடங்களின் அமைப்பினால் அவர்கள் சுற்றுக்களைச் சமமாக்கினர்.

இம்மாதிரியான கணக்கமைப்புகளினால் என்னவொரு சிக்கல் என்றால், தற்போதைய நடைமுறையில் இருக்கும் கிரிகோரியன் காலண்டருக்கு ஏற்றபடி வருடாவருடம் சீனப்புத்தாண்டு ஆரம்பிக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் ஆரம்பித்துக் குழப்பும். இந்த ஆண்டுத் துவக்கத்தைக் கண்டுபிடிப்பதிலேயே மிகுந்த கணக்குகள் உண்டு. 

ஆயினும் சீன ஆண்டுத்துவக்கமானது, ஒவ்வொரு ஆண்டும் கிரிகோரியன் ஆண்டின் ஜனவரி 17ம் தேதியில் இருந்து பிப்ரவரி 17ம் தேதிக்குள் இருக்கிறது. (நோட் திஸ் பாயிண்ட்.. இது நம்ம தைமாசம் பாஸ்)

இவ்வாறு மாதச்சுற்றுக்களில் உலகில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருக்கும் சீனக்காலண்டர், வருடக்கணக்கைப் பொருத்த வரையில் நமது கணக்குகளோடு பொருந்தி வருகின்றனர். நாமும் நமது ஆண்டுகளை பெருந்தொகுப்பாக 60 ஆண்டுகளாக வைத்திருக்கிறோம். அவர்களும் அப்படித்தான் 60ல் நம்மோடு பொருந்தி வருகிறார்கள். அந்தக் கணக்கு என்னவென்றால்…

Saturday, August 8, 2015

சீனக்காலண்டர் 3

சீனக்காலண்டரின் ஆரம்பகால காலண்டர் வரலாறு தெளிவாக இல்லை. தெளிவாக இல்லேண்னாத்தானே அது வரலாறு. தொன்மை மிகுந்த இடங்களில் இதுதான் தொல்லை. ஒரு சமுதாயத்தின் பண்பாடு, இலக்கியம், தொல்லியல் தெரிவுகள் போற்றவற்றில் அறிந்த செய்திகளில் உள்ள உண்மையின் அடிப்படையில் தான் அவர்களின் வரலாற்றை அறிய முடியும். 

ஒரு பண்டைய சமுதாயம் விட்டுச்செல்லும் தடங்களைக் கொண்டு அவர்களைப் பற்றி முழுவதும்.. இதுதான், இப்படித்தான் என்று அரிதியிட்டுக் கூறுவது கடினம். ஒரு யூகமான கணிப்புகளைத்தான் தெரிவிக்க முடியும். இந்தக் கணிப்புகளை மேற்கொள்பவர்களின் மனமுரண்களும் அவற்றால் எழும் வரலாற்று திரிபுகளும் பற்றி நாம் ஏற்கெனவே ‘வடிவேலு காமெடி’ மூலம் விவாதித்து இருக்கிறோம்.

இம்மாதிரி காரணங்களால்தான் சீன வருடத்தை எண்களிட்டு எத்தனையாவது ஆண்டு என்று கி.பி.2015ம் ஆண்டை 1937ம் சகஆண்டு என்றும், 2046ம் திருவள்ளுவர் ஆண்டு என்றும் சொல்வது போல் அரிதியிட்டு சொல்லமுடியவில்லை. அப்பறம், சீனக்காலண்டரை ஏன் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொகுத்தார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. 

இருப்பினும், சீனக்காலண்டரின் அடிப்படையை வைத்து நோக்கும் போது, அடிப்படையில் ஆண்டுகளை (நம்மைப்போல்) 60 ஆண்டுப் பெரும் சுற்றாக கணக்கிட்டனர். அந்த அறுபது ஆண்டுகளையும் விவசாயம் சார்ந்த சுழற்சிகாக 5 உட்பிரிவுகளாகப்பிரித்து பன்னிரண்டு பன்னிரண்டு ஆண்டுகளாக தொகுத்தனர் என்று யூகிக்கலாம் எனச் சில சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கின் வம்ச காலம் முதல் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு மிங் வம்சத்தின் காலம் வரை சுவர் கட்டுவதிலேயே சீனவரலாறு நிலைக்கிறது. கி.மு.ஏழாம் நூற்றாண்டிலேயே கட்டிடங்கலையில் சீனர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். விவசாயத்தில் பெரும் பொருளாதாரம் கண்ட சீனா, அதைக் கொள்ளையடிக்க வந்தவர்களிடமிருந்து தங்களைக் காக்கவே தன் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியைச் செலவளித்தது. சுவர் எழுந்த கதையும் அதுதான்.

பாரம்பரிய சீனக்காலண்டரை ஒட்டி சீனர்கள் கொண்டாடும் விழாக்கள் மொத்தம் ஒன்பது. இவற்றில் ஏழு திருவிழாக்கள் சந்திர சுற்றின் அடிப்படையிலும், இரண்டு திருவிழாக்கள் சூரியச்சுற்றின் அடிப்படையிலும் கொண்டாடுகிறார்கள். அவையாவன..

1. சீனப்புத்தாண்டு - சூரிய காலண்டரின் அடிப்படை.
2. விளக்கு திருநாள். ( ஐ.. தீபாவளி! ) – சந்திரன்
3. படகு திருவிழா ( ஓணமோ? ) – சந்திரன்
4. க்விச்சி திருவிழா ( காதலர் தினமாமே? ) – சந்திரன்
5. நீத்தார் நாள் ( மஹாளய அம்மாவாசை, கல்லரைத்திருநாள் ) – சந்திரன்
6. நிலவுத்திருவிழா ( சித்ரா பௌர்ணமி ) – சந்திரன்
7. இரட்டை ஒன்பதாவது திருவிழா இது மலர்கள் மற்றும் இயற்கையை வணங்கும் திருவிழா ஆகும். – சந்திரன்
8. க்சியா யுவான் திருவிழா. இது நீர்கடவுளை வேண்டும் திருவிழா ஆகும். (ஆடிப்பெருக்கு)
9. குளிர் காலத்திருவிழா. இவ்விழாவில் சீனர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி டாங் யோன் என்னும் பண்டத்தை உண்பார்கள். இதை சூரியனின் சலன சாய்வு திருவிழா என்றும் சொல்கிறார்கள். நமது ‘மகரசங்கராந்திக்கு’ சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. (இந்தத் தகவலில் ‘டாங் யோன’; என்பது எத்தகைய திண்பண்டம் என்பது தெரியவில்லை. ஒருவேளை நம்ம பொங்கலைப் போன்றதாக இருக்குமோ?. விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்) – சூரியன்.

இந்த பண்டிகைப் பட்டியலின் படியும் நம்மை சீனர்கள் நம் பண்பாட்டை எவ்வளவு ஒட்டி வருகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா?

சீனக்காலண்டர் அடிப்படையிலானன ஜோதிடத்தில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. அது பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கணிக்கும் அகில உலக பேமஸ் சீன ஜோதிடம். இந்தப்;பட்டியலின் படி தாயின் வயது மற்றும் கருவுற்ற ஆங்கில மாதத்தினைக் கொண்டு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் அறியலாம். இந்தப்பட்டியலை ஏற்கெனவே ‘மகாகவி’ மாத இதழில் வெளியிட்ட போது, தோழி ஒருத்தி.. இந்தக் கணிப்பு சரியாக இருப்பதாகவும்.. ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறினார். ஒருவேளை உங்களுக்கு சரியாக இல்லை எனில் சீன தேசத்தில் சென்று பிள்ளை பெற்றுப் பாருங்கள்!