Thursday, July 16, 2015

பள்ளிக்காலத்தில்.. விட்டுப்பாடம் செய்யாவிட்டால் நாம் அன்றைக்கு வகுப்பறையில் ஆசிரியர் விட்டுப்பாடம் கேட்டுவிடக்கூடாது என வேண்டிக்கொள்வோம்.

ஆனால் அன்றைக்குப் பார்த்துத்தான்.. எப்பொழுதும் பீரியட் முடிந்து போகும் போது ‘வீட்டுப்பாடம் செய்தாச்சா?’ என்று கேட்கும் ஆசிரியர்.. வந்தவுடனயே பிரம்பை எடுத்து.. ஒரு வில்லன் முறை முறைத்து.. ‘இன்னைக்கு வீட்டுப்பாடம் செய்யாதவங்கள்ளாம் எந்திரி!’ என்பார். 

நமக்கு அல்லு இருக்காது. வகுப்பறையைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விடுவோம். நம்மைப் போலவே அடுத்தடுத்த வரிசையில் இருக்கிற நண்பனும் முழிப்பான். ‘அவனும் வீட்டுப்பாடம் செய்யல போல’ என நமக்குத் தெரியவரும். நமக்கு அடிவாங்க ஒரு துணையிருக்கிறான் என்று ஒரு நிம்மதிப் பெரு மூச்சு. அவனைப் பார்த்து தலையாட்டுவோம். அவனும் தலையாட்டுவான் இருவரும் எழுந்து நிற்போம். நம்மைப்பார்த்து இன்னும் ஓரிருவர் எழுந்து நிற்பார்கள். சேர்ந்து அடிவாங்குவோம். 

நம் வீட்டில் கரண்ட் கட்டாகும்.. உடனே என்ன செய்வோம்.. அடுத்த வீட்டில் கரண்ட் இருக்கிறதா? என்று பார்ப்போம். அங்கும் கரண்ட் இல்லாவிட்டால் ஒரு நிம்மதி.

இது மாதிரிதான் நாம் பக்கத்துவீட்டில் நடப்பது போல் நமக்கும் நடந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறோம். நமக்கு பிரச்சனைகளை பக்கத்திலும் பார்த்து திருப்தியடைகிறோம். அதே போல் காலண்டர் கதைகளிலும் நம்மையொத்தவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை உணரும் போது.. நம் முன்னோர்களும் என்ன செய்திருப்பார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

இப்போது சீனாவில் இருக்கிறோம்.

சீனர்களுக்கும் நம்மவர்களுக்கும் வியாபாரத் தொடர்பு மட்டுமன்று கலை கலாச்சாரத் தொடர்பு நிரம்ப இருந்திருக்கிறது. அந்தக்காலத்திலேயே சீனக் கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்கள் இருந்திருப்பதைக் காண விந்தையாக இருக்கிறது. இங்கோ கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு 'காண்டன்' Canton எனப்படும் சீன நகருக்கு வடக்கே 500 மைல் தொலைவில் 'சௌன் சௌ' Chuan Chou'  என்ற பழமைவாய்ந்த துறைமுகப்பட்டினத்தில் கிடைக்கப்பெற்றது. வெறும் கட்வெட்டுக்கள் மட்டுமல்ல பண்டைத்தமிழர் குடியிருந்ததற்கான அடையாளமும் இத்துறைமுகப்பட்டினத்தில் கண்டெக்கப்பட்டுள்ளது. 



ஒரு சிவன் கோயிலும் இங்கு இருந்திருக்கிறது. கோயில் கொண்டுள்ள சிவானார் 'திருக்கதலீச்வரர்' ஆவார். கோயில் 'திருக்கதலீச்வரம்'. என்றழைக்கப்பட்டது. சிகாசாய்கான் 'Sesai Khan' எனும் தளபதியால் இக்கோயில் நிர்மாணிக்கப் பட்டிருந்திருக்கிறது. கோயில் திருப்பணிக்கு ஆணையிட்ட மன்னன் 'தவசக்கரவர்த்திப்பெருமான்' என்பவராவார். இக்கோயில் கி.பி 1200 வாக்கில் கட்டப்பட்ருக்கிறது.

கோயிலே கட்டப்பட்டிருக்குமானால் அதற்கு முன்பே இரு இனக்குழுவிற்கும் நல்ல தொடர்பிருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. பண்பாட்டு, கலை, வாழ்வியலில் மட்டுமல்ல.. மொழித்துவத்திலும் இந்திய, தமிழர்களுக்கும் - சீனர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 

சிந்து சமவெளி நாகரீக எழுத்துக்கள் சித்திர எழுத்து வடிவம் கொண்டவை. அதே போல் சீன எழுத்துக்களும் சித்திர எழுத்துக்களே! சிந்து சமவெளியின் எழுத்துக்கள் தமிழ் மொழியின் மூல எழுத்துக்கள் என 'ஈராசுப்பாதிரியார்' பல கட்டுரைகளில் நிறுவியுள்ளார். 

இதற்கெல்லாம் மேலாக.. ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால்.. தமிழின் சிறப்பான எழுத்தாக நாம் கருதும் ‘ழகரம்’, அதன் உச்சரிப்பு மாறாமல் இப்போதும் சீனத்திலும் இருப்பதுதான். 



இவ்வாறெல்லாம் நமக்கும் சீனர்களுக்கும் ஒற்றுமையிருக்க காலண்டர் விசயத்திலும் தொடர்பில்லாமல் போய்விடுமா என்ன?