Tuesday, July 21, 2015

சீனக்காலண்டர் 1

நம்மூர் கோவில் பிரகாரங்களின் அழகிய தூண்களை காவற்காத்துக் கொண்டிருக்கும் சிங்க உடலும், யானை துதிக்கையுமாய், உருட்டும் விழிகளுடன், மிரட்டும் தோரணையில் நிற்கும் யாழிகளை உங்களுக்கு நன்றாகத் தெரியுமல்லவா.. இந்த யாழியின் சீன வடிவம்தான் டிராகன். 

டிராகன் என்றென்றம் சீனக் கொண்டாட்டங்களின் அடையாளம். எந்தச் சீன விழாவிலும் டிராகன் தன் வண்ணங்களைக் காட்டிச் சிலிர்க்க வைக்கிறது அனைவரையும். திருவிழா ஊர்வலங்களில் வளைந்தாடிச் செல்லும் டிராகன், ஒரு நீண்ட கலாச்சாரத்தை, தொன்றுதொட்டு வரும் பண்பாட்டை உலகெங்குமிருந்து அதனைக் காண்போர் மனங்களில் விசிறடித்துச் செல்கிறது.



சீனா ஒரு கலர்புல் தேசம். அதன் காலண்டரிலும் வண்ணங்கள் ஆயிரம். நம்மைப் போலவே சூரியச்சுற்றின் அடிப்படையில் ஆண்டுக்கணக்கையும், சந்திர சுற்றின் அடிப்படையில் மாதக்கணக்கினையும் கொண்டுள்ளனர். பாரம்பரிய சீனக்காலண்டருக்கு ‘ஷியா’ (Xia) என்று பெயர். ‘ஷியா’ என்பதற்கு பருவங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயத்தின் முறையில் எழுந்த காலண்டர் என்று பொருள். 

பூவுலகின் ஆதிகால காலண்டரில் சீனக்காலண்டரும் ஒன்றானாலும், தற்போதைய சீனக்காலண்டர்.. கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் வரைதான் வரிசை எண்களிடப்பட்டு உள்ளது. காரணம், சீனர்கள் தங்கள் மன்னர்கள் மாறும் தோறும் ஆண்டுக் கணக்கை ஆரம்பத்திலிருந்து துவங்குவதுதான். ஒரு சீன மன்னர் பதிவியேற்றார் என்றால், அது சீனர்களின் புது அரசாங்கத் துவக்கத்தின் முதல் வருடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். அன்று முதல் அவர் அரசராக இருக்கும் காலம் வரை தொடந்து வரிசையாக ஆண்டுகள் கணக்கிடப்படும். அந்த அரசர் மாறி வேறு ஒரு மன்னர் பட்டத்திற்கு வந்து விட்டால், அடுத்து வரும் ஆண்டு புதிதாக வந்த அரசருக்கான முதலாண்டு ஆகிவிடும். இவ்வாறான கணக்கெடுப்பினால் சீனத்தின் தற்பொதைய காலண்டர் எத்தனை ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது என்ற கணக்கெடுப்பு சிரமமாக உள்ளது. 

சீனத்தை ஆண்ட மன்னர்கள் மொத்தம் எத்தனை, ஒவ்வொருவரும் எவ்வளவு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர் என்ற கணக்கை அந்த சீனப்பெருஞ்சுவரில் எழுதிவைத்து இருந்தால் தேவலை. ஆனால், வருடாந்திரக் கணக்குகளோ, சரித்திரச் சுவடுகளோ இல்லாமல் இல்லை.. அதை தேடும் பணியில் அறிஞர்கள் தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கமான வரலாற்றுச் சண்டைகளுடன். 

சீனப்பெருஞ்சுவரைப் பற்றியும் நிறையப் பேசலாம்தான். சீனர்கள் தங்களை மங்கோலியர்களின் படையெடுப்பிலிருந்து காத்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக கட்டிக்கொண்ட பாதுகாப்பு கோட்டைதான் ‘சீனப்பெருஞ்சுவர்’. சீனத்தலைநகர் பீஜிங்கில் நடந்த பதினொன்றாவது ஒலிம்பிக்ஸ் போட்டியின் இலச்சினையாக இந்த சீனப் பெருஞ்சுவரே இருந்தது. சுவரில் சித்திரம் வரையலாம் என்பார்கள். சீனர்களோ ஒரு நீண்ட நெடிய பெருஞ்சுவரையே சித்திரமாக வரைந்து இருக்கிறார்கள்;. நிலவிலிருந்து பூமியைப் பாத்தால் பூமியில் தெரியும் ஒரே கட்டிடம் சீனப் பெருஞ்சுவர் என்றும் கூறக் கேட்டிருக்கிறேன். அவ்வளவு பெரிய கட்டிடத்தை ‘சுவர்’ என்றா சொல்வார்கள். 

காலண்டருக்கு வருவோம். வருடங்களும், மாதங்களும் தான் ஆரம்ப கால சீனக்காலண்டரில் உள்ளது. வாரங்கள் சீனக்காலண்டரில் இணைந்தது ‘கிரிகோரிஸ் காலண்டரின்’ புழக்கத்திற்கு வந்ததற்கு அப்பால்தான். இன்றைய காலங்களில் நம்மைப் போலவே, சீனத்திலும் கிரகோரிஸ் காலண்டர்தான் நடைமுறைப் புழக்கத்தில் இருக்கிறது. எனினும் பண்பாட்டுக் காலண்டர்தான் அவர்களின் வாழ்வின் அடையாளம்.

சீனக்காலண்டரில், அதன் வருடங்கள் பன்னிரண்டு பன்னிரண்டாய் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திற்க்கும் ஒரு விலங்கின் பெயர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கின் பெயரைக் கொண்டு பிறக்கிறது. பெயரிடப்பட்ட விலங்கின் குணங்களால் அந்த ஆண்டும் நிறைந்து இருக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை. அந்த ஆண்டு விவசாய விளைச்சல், வேலை, உற்பத்தி மற்றும் பிறக்கும் மனிதர்களின் குணாதிசியம் கூட அந்தந்த விலங்குகளின் அடிப்படையில் இருக்கும் என்பதும் அவர்களின் நம்பிக்கை.


ஆண்டின் விலங்குகள் பெயரைத் தெரிஞ்சுக்கலாம் : 1.எலி, 2.எருது, 3.புலி, 4.முயல்,  5.டிராகான்,  6.பாம்பு,  7.குதிரை, 8.ஆடு, 9.குரங்கு, 10.சேவல், 11.நாய், மற்றும் 12. பன்றி. ஆகியன.


இதன் அடிப்டையில் அமைந்த ஜோதிடமும் சீனத்தில் புழக்கத்தில் உள்ளது. அது நமது ஜோதிடத்தில் உள்ளது போல கடினக் கணக்குகளைக் கொண்டதல்ல.. நம்மைப் போன்ற எளியவர்களும் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.