Thursday, May 28, 2015

வாளாயிருக்குமா… நாள்?

இன்று ‘ரூம் பிரஸ்னர்’ பெரும் புழக்கத்தில் உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன் சகல இல்லங்களிலும் நறுமணம் கமழ வைத்தவை ஊதுபத்திகள். தற்போது அவை பூஜைப் பொருட்களாக உருமாறி, இறையருள் பெறுதற்கு தூதுப்பொருள் ஆகிவிட்டது. அதன் சராசரி நறுமண அங்கீகாரம் மாறி, தெய்வீக அங்கீகாரம் பெற்று விட்டது.  சராசரி நறுமண தேவைக்கு ரூம் பிரஸ்னர். 

அகில், சந்தனம் போன்ற வாசனைத் திரவியங்களை புகையவிட்டு வசிக்கும் அறையில் நறுமணத்தைப் பரப்புவது பண்டைய அரசவை வழக்கம். அஃதொத்து முக்கிய ஸ்தலங்களிலும், மக்கள் கூடும் கோவில் போன்ற பொது இடங்களிலும் நறுமணம் பரவி மெல்ல மக்கள் வாழ்விடங்கள் தோறும் நாசியை நிறைத்தது.

நறுமணங்களை நேரடியாகப் புகைய விடுவதில் நடைமுறைச் சிரமங்கள் அதிகம் இருந்ததாலும், சந்தனமும் அகிலும் கிடைத்தல் குறைய ஆரம்பித்த காலத்திலும், அசராத அகிலம் சிலவகைக் இயற்கலவைகளுடன் எளிய ஊதுபத்தியைக் கண்டுபிடித்து, மேற்சொன்ன பழக்க வழக்கங்களை மேற்கொண்டது. 

நவீனங்கள் பெருக ஊதிபத்தியிலும் உயர்தர நறுமணங்கள் கொண்ட பாரம்பரிய தயாரிப்பு முறையில் உற்பத்தியின் அளவு குறைந்தது. அதனை முறைப்படி தாயாரிக்கத் தெரிந்தவர்களும் அருகினர். தன் ஒற்றைக்கால் தவத்தால் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருந்த ஊதுபத்தியின் அன்றாடப் பயன்பாடு குறைந்து தெய்வப்பொருளாக மாறியது. 

தெய்வப் பொருளானாலும் தேய்வில்லாத தேவையை உடைய ஊதுபத்தி தயாரிப்பில் செயற்கைப் பொருட்களை நுழைத்து இயந்திரங்களால் தயாரித்து அழகிய உறையில் அசுர விளம்பரங்களுடன் விற்க ஆரம்பித்து விட்டது பன்னாட்டு வியாபார மூளை. ஆனால் விற்கப்படும் ஊதுபத்திகளில் ஊதுபத்தி என்ற பெயரைத்தவிர பண்டைய இயற்கை உள்ளீடுகள் எதுவும் தற்போது இல்லை. இன்றைய ஊதுபத்தியும், ரூம் பிரஸ்னரும் முழுக்க முழுக்க வேதிப் பொருட்கள்.

 எல்லாத்துறைக்கும் மேற்சொன்ன வரலாறுதான். ஜோதிடம் மட்டும் தப்பிக்குமா என்ன? மக்களிடையே ஜோதிடத்திற்கும் அபரிவிதமான தேவை இருக்கிறது. தேவையிருக்கும் துறையை மீடியா ஆதரவுடன் பன்னாட்டு நிறுவனங்கள் பணப்பசியுடன் சகல பித்தலாட்டங்களும் கலந்து கபளீகரம் செய்யும் என்பது மக்களுக்கும் தெரியும். அதையும் மீறிய நம்பிக்கையை இன்னமும் ஜோதிடத்தின் மீது வைத்திருக்கின்றனர். ஏனெனில், ‘நம்பிக்கை அதானே எல்லாம்!’

இந்த நம்பிக்கைகளைக் காசாக்கும் நவீன ஜோதிடத்தில் குருட்டுத் தனமாகச் சொல்லப்படும் அ~;டமியும், நவமியும் தீட்டு நாட்கள் எனும் பொய்யை நாம் திடமாக எதிர்க்கிறோம். ஆனால், நாள் எனும் காலத்துண்டிற்கு குணங்களே இல்லை. எல்லா நாளும் ஒன்றுபோல் தான் என்றும் கண்மூடித்தனமாகச் சொல்லிவிட கூடாது. 

ஒவ்வொரு நாளிற்கும் குணங்கள் உண்டு. ஒவ்வொரு பொழுதிற்கும் குணங்கள் உண்டு. இந்த குணங்கள் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இயற்கையால் விளைபவை. இந்த இயற்கையால் விளைந்த குணங்களைத்தான் முன்னர் குறித்து வைக்கத்துவங்கி நாளக்கி, வாரமாக்கி, மாதமாக்கி, வருடமாக்கி, காலண்டராக்கினர். ஜோதிடமாக்கினர். அத்தகைய ஜோதிடத்தில் குறிக்கப்பட்ட தினங்களிலும் குணங்களிலும்; அர்த்தம் உண்டு. உண்மை உண்டு. 

காலங்களின் போக்கில் மென்மையும் உண்டு. வன்மையும் உண்டு. மென் காலங்கள் எளிமையானவை. சுலபமாக செயல்பட வழிவிடுபவை. வன்காலங்கள் அத்தகயவை அல்ல. அதற்காக அவையெல்லாம் தீண்டத்தகாதவை அல்ல. கவனமாகக் கையாளப்பட வேண்டியவை. தீயை தீதென்று ஒதுக்காமல் பயன்படுத்தி வாழ்வது போல வாழத்தக்கவை. வாழ்வதற்காகவே உருவானவை. 

நெருப்பை மனிதன் உருவாக்கவில்லை. ஆனால் அதன் பயன்படுத்தும் விதத்தைக் கண்டுபிடித்து தன் வாழ்வை எளிதாக்கிக் கொண்டான். தன்னால் நேரிடையாகப் போரிட முடியாதவற்றை நெருப்பை கையாளத்தெரிந்த தன்மை கொண்டு உணவு முதல் உலோகங்கள் வரை தன் தேவைக்கேற்ப வனைத்துக் கொண்டான்.

அதுபோல்தான் வன்குணங்களும் மென்குணங்களும் மிக்க காலப்பொழுதை பயன்படுத்தி அதனை தன்வயமாக்கவே மனிதன், காலத்தை கண்காணித்து ஜோதிடத்தை கணித்து, காலண்டரைக் குறித்துக் கொண்டான். நாள் எனவும் தேதி எனவும் பெயரிட்டான். காலப்போக்கில் அந்தக் கணிப்புகளின் தன்மைகளைப் புரிந்து கொள்வோர் இல்லாமல்.. குணமறு கணக்குகளாகப் போய் எல்லாம் தவறுதலாகிவிட்டது. அதற்காக, நாளொன்றும் வாளாயிருப்பதில்லை. தன் குணங்களைக் காட்டிக் கொண்டேதான் இருக்கிறது.