Friday, July 31, 2015

சீனக்காலண்டர் 2

உலகில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரிகோரிஸ் காலண்டரைத் தவிர்த்து, நீண்ட பாரம்பரியம் உடைய, அதிக அளவு மக்களால் கொண்டாப்படும் காலண்டரான, சீனக்காலண்டரைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் சீனர் என்பதால் உலகின் பிரம்மாண்டமாக கொண்டாப்படும் காலண்டர்களில் சீனக்காலண்டர் முக்கியமானதாகும். நம் தேசத்திலும் அவ்வளவிற்கு மக்கள் தொகை இருந்தாலும், பல்வேறு பட்ட பண்பாட்டுக்கலவையினால், சீனக்காலண்டர் அளவிற்கு கணக்கற்ற பேர்களால் கொண்டாடப்படும் ஒரே காலண்டர் நம்மிடம் இல்லை. நம்மிடமே இல்லையென்றால்.. பிற நாடுகளுக்கு வாய்ப்பேது?

சீனக்காலண்டர்கள் ஒவ்வொரு மன்னன் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதும் புதிவண்ணம் பெறுகிறது என்று கண்டோம். ஆனால், தொன்று தொட்டே சீனர்கள் வானசாஸ்திரத்தையும், ஜோதிடத்தையும் கொண்டாடினர். ஆரம்ப காலம் தொட்டே சீன அரசு வான சாஸ்த்திர ஆய்வுக்கென உயர்தர ஆராய்ச்சிக்கூடம் அமைத்து அதில் பல்வேறு அறிஞர்களை ஆராதிக்கும் வழக்கமும் கொண்டிருந்தது.

தற்போதைய பாரம்பரிய காலண்டராக சீனத்தில் கொண்டாடப்படும் காலண்டர் ஐந்நூறு வருடங்களுக்கு முன் இறுதிவடிவம் பெற்றது. இதனை வடிவமைத்தவர் சீனதேசத்தின் ஜோதிட மஹாமேதை திரு. டாங் ரோவாங். இவர் கி.பி. 1591 முதல் 1666 வரை வாழ்ந்ததாக குறிப்புக்கள் உள்ளன. இவர் வடிவமைத்த காலண்டரின் அடிப்படையிலேயே ஆண்டுகள் பன்னிரெண்டு தொகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் இடப்பட்டுள்ளது. 



கிளி ஜோசியமோ, நாடி ஜோதிடமோ, ஜாதக ஜோதிடமோ.. நம்மூர் விசயங்கள் எல்லாம் நன்கு கற்றுக்கொண்டோருக்கு மட்டுமே கைவரும். சீன ஜோதிடத்திலும் கடினமான கணக்குகள் இருந்தாலும், எளிமையான விளக்கங்கள் கொண்ட ஜோதிடமும், ரசனைக்குரியதாய் உள்ளது. எளிய முறையில் நாமே நமக்கு ஜோதிடம் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் எனத் தெரிந்து கொள்ளல் அவசியம். ஒரு 60 ஆண்டிற்கான பட்டியல் கொடுத்திருக்கிறேன்.

எலி ஆண்டு (2008, 1996, 1984, 1972, 1960)
இந்த ஆண்டில் பிறந்தவர்கள் திறமைமிக்கவர்களாகவும், விடா முயற்சி உடையவர்களாகவும் இருப்பர். மைனஸ் என்னவென்றால், இவர்கள் திறமைiயும் உழைப்பும் அனேகமாக அற்ப விசயங்களில் செலுத்திவிடுவதுதான்.

எருது ஆண்டு (2009, 1997, 1985, 1973, 1961)
இவர்கள் கடின உழைப்பாளர்கள். உண்மையானவர்கள். புத்திசாலி வாழ்க்கைத்துணை அடைந்துவிட்டால், நல்ல மேலாளர் கிடைத்தால் இவர்களை அடிச்சுக்க ஆள் கிடையாது. சொந்த முடிவுகளை இவர்கள் எடுக்க வேண்டாமே!

புலி  (2010, 1998, 1986, 1974, 1962)
நினைத்ததை முடிக்கும் வல்லவர்கள். பொசுக்கொன்று கோபம் வரும். எடுத்தெறிந்து விட்டு, அப்புறம் வருந்தி என்ன பிரயோஜனம்?

முயல் ( 2011, 1999, 1987, 1975, 1963 )
எக்கச்சக்க எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். இந்த உணர்வே, இவர்கள் பெரிய காரியங்களில் ஈடுபடுவதிலிருந்து விலக்கி வைத்து விடும்.

டிராகன் ( 2012, 2000, 1988, 1976, 1964 )
இந்த வலிமைமிக்க புத்திசாலிகள், அடுத்தவர்களின் நிறை குறைகளை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

பாம்பு ( 2013, 2001, 1989, 1977, 1965 )
இவுங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். ஆனால், அட்ஜஸ்ட் பண்றதே வேலையாகப் போய் சுயம் என்பது சுருண்டு கிடக்க நேரிடலாம்.

குதிரை (2014, 2002, 1990, 1978, 1966)
தனித்துவம் மிக்கவர்கள். கலகவென கூட்டத்தில் இருக்க வேண்டும் என நினைத்தாலும், பழகும் தன்மையின்மையால் தனிமை இவர்களை வாட்டும்.

ஆடு (2015, 2003, 1991, 1979, 1967)
ஊரோடு ஒத்து வாழ்வதில் வல்லவர்கள். எதைச் செய்தாலும் யாரையாவது எதிர்பார்தே செய்ய வேண்டியிருப்பதுதான் சிரமம்.

குரங்கு (2016, 2004, 1992, 1980, 1968)
எந்த சூழ்நிலையிலும் வாழும்படி தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள். சமயங்களில் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பிவிடுவார்கள்.

சேவல் (2017, 2005, 1993, 1981, 1969 )
திட்டமிட்டு வாழ்வார்கள். கடமை தவறாதவர்கள். ரூல்ஸ் ராமானுஜங்கள்.

நாய் (2018, 2006, 1994, 1982, 1970)
கடும் உழைப்பாளிகள். ஆனால், எப்பொழும் கடுகடு வென்று தோற்றமளித்து சுற்றியிருப்பவர்களை பீதியிலேயே ஆழ்த்துவார்கள்.

பன்றி  (2019, 2007, 1995, 1983, 1971)
அன்பானவர்கள். அன்பாக நம்பிக்கை வார்தைகளைச் சொல்வார்கள். அதில் முக்கால் வாசி புருடாவாக இருக்கும்.

நாம் எந்த விலங்கின் ஆண்டில் பிறந்திருக்கிறோம் என்று தெரிந்த பின், நமது குணங்கள், வாழ்வின் நிகழ்வுகள் பற்றி சீன ஜோதிடம் என்ன சொல்கிறது எனத் தெரிந்து கொள்வது சுலபம். எல்லா விசயங்களையும் இங்கே சொல்ல முடியாது என்பதால் அடிப்படையான சில குணங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களுக்கு ஒத்து வருதான்னு பாத்துக்கோங்க. தப்பாயிருந்தா என்னைத் திட்டாதீங்க சார்.. வேணும்னா, திரு.டாங் ரோவாங் சொர்கத்துலதான் இருப்பாரு. அவரைத் திட்டிக்கோங்க.