Thursday, October 29, 2015

பல்லி - வெள்ளி

ஆதி நாளில் அறிவுடையோர் சேர்ந்த மக்கள் குழுவானது முகம்மது நபிகள் (ஸல்) அவர்களிடம், நிலவு நாள்தோறும் தேய்ந்து வளர்ந்தும் வருகிறதே அதற்கான காரணம் என்ன? அதனைக் கொண்டு அல்லாஹ் என்ன நமக்கு அருள்கிறார் என்று கேட்டார்கள். அப்பொழுதுதான் குரானின் காலண்டர்கள் பற்றிய தெய்வ வசனம் எல்லாம் வல்ல இறைவனால் அருளப்பட்டது.

"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. நீங்கள் அவற்றை பின்பற்றி வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 02:189 ) 

மேலும் கீழ்வரும் வசனங்களும் இறைவனால் உரைக்கப்பட்டு நிலவின் அடிப்படையிலான நாட்களின் கணக்கீட்டைக் குறிக்கின்றன.

"அவன் தான் (அல்லாஹ்) சூரியனைச் பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் தக்க காரணம் கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் இவ்வாறு அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்." (திருக்குர்ஆன் 10:5)

இவ்வாறான இறைவாக்கின் அடிப்படையில் இனிமை தாலாட்டும் இரவில் துவங்குகின்றது இஸ்லாத்தின் “நாள்“. நிலவின் உதயகாலத்தில் நாள் என்பது பிறக்கும் என்று அல்லாஹ் ஆரம்ப காலத்திலேயே அருளியிருக்கிறார் என்பதுதான் முசல்மான்களின் நம்பிக்கை. அறிவியலின் படியும் நிலவின் அடிப்படையில் பிரிக்கப்படும் நாட்கள் மிகவும் துல்லியமானது. இயற்கையானது. பிழைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லாதது. ஆனால் நவீன காலத்தில் ‘ஹதீஸ்’களைக் ( ஹதீஸ்கள் என்றால் நிலவின் தேய்தல் வளர்தலைக் கணக்கிடும் இஸ்லாமிய முறை ) கணக்கிடுவதில் பண்டைய நுட்பங்களை அறிந்தவர்கள் இல்லாத காரணத்தினால் சிற்சில தவறுகள் நிகழ்ந்து விடுகிறது. அதனாலேதான் ரம்ஸான் போன்ற விஷேச தினங்களைக் கடைசிக்கட்டம் வரையில் காத்திருந்து நிலவின் பிறைபார்த்து அறிவிக்க வேண்டியிருக்கிறது.

வரலாற்றைக் காண்போமானால் வெவ்வேறு காலகட்டத்தில் முஸ்லீம்களின் –நாளை-க் கணக்கிடும் முறை மாறுபட்டு வந்துள்ளது. கணித அடிப்படையில் நிலவின் படிநிலைகளைக் கணக்கிட்டு நாட்களை முன்கூட்டிய கணித்த காலண்டர்களைக் வெளியிடுவது ஒரு முறை. 

அந்த அந்த பொழுதுகளில் பிறை தெரிவதைப் பார்த்த பிறகே – புதிய நாளோ மாதமே பிறப்பதாக அறிவிப்பது மற்றொரு முறை. இவ்விரண்டு முறைகளிலும், துல்லிய கணக்குகளின் அடிப்படையில் நாளையும் – மாதத்தையும் கணக்கிட்டு முன்கூட்டியே வெளியிடும் காலண்டர் முறையே நவீன காலத்திற்கு ஏற்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுவே சற்றேரக்குறைய உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டும் வருகிறது.

ஏழு நாட்களைக் கொண்டது ஒரு வாரம். இந்த வார நாட்கள் நம் நாட்டுக்காலண்டர்கள் போலவோ, தற்போதைய கிரிகோரியன் காலண்டர்கள் போலவோ.. கிரகங்களின் பெயரிடப்பட்டவை அல்ல. மாறாக. அரபுக்காலண்டர்களோ தன் வாரநாட்களின் பெயர்களாக வரிசை எண்களையே கொண்டிருக்கின்றன.

அஹத் என்ற அரேபியச் சொல்லிற்கு முதன்மை என்று பொருள். எனவேதான் இஸ்லாமியக்காலண்டரின்படி வாரத்தின் முதல் நாளான சனிக்கிழமைக்கு “யௌமுல் அஹத்“ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஆமாம் பாஸ் ஆமாம். முஸ்லீம்களுக்கு வாரத்தின் முதல்நாள் சனிக்கிழமை. கடைசிநாள் வெள்ளிக்கிழமை. இந்த இறுதிநாள் இறைவனுக்கு உகந்த நாள் என்பதால் வெள்ளிக்கிழமை “துஆ – பிரார்த்தனை செய்வது“ புனிதம் மிக்கதாகக் கருதப்படுகிறது.



இந்த வெள்ளிக்கிழமை சம்மந்தமாக எங்களது இளமைக்காலத்தில் பல்வேறு வதந்திகள் உலவிவந்தன. நாங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த ஒரு தெருவில் அப்போது வசித்து வந்தோம். முஸ்லீம் சிறுவர்களுடன்தான் அதீத நட்பு. சரியா? தவறா? என்று எனக்குத் தெரியவில்லை என்ற போதிலும் எங்களுக்குள் ஒரு வினோதப் பழக்கம் உண்டு. அதாவது வெள்ளிக்கிழமை அன்று “பல்லி“யைக் கொன்றால் அல்லாஹ் அருள்புரிவான் என்று நம்பிக்கை கொண்டு, வகைதொகையில்லாமல் பல்லியை துரத்தித்துரத்தி கொன்றிருக்கிறோம். 

ஒருமுறை என் நண்பன் சாகுல் அன்று நாங்கள் அடித்த செத்த பல்லிகளையெல்லாம் அவனது அரைக்கால்சட்டையின் பாக்கெட்டில் போட்டு வைத்தவாறு மறந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். மறுநாள் காலையிலும் மறந்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான்.

அன்று மதியம்போல் அவனது அக்கா அந்த உடையைத் துவைக்க எடுத்த போது அவன் சேர்த்து வைத்த பல்லிகளைப் பார்த்து மயங்கி விழுந்துவிட்டாராம். நாங்கள் மாலையில் பள்ளி விட்டு வந்தபிறகு, சாகுலின் அம்மா.. அவன் சேர்த்து வைத்திருந்த செத்த பல்லிகளுக்காக.. எங்களைச் சாவடி அடித்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சாகும் வரை மறக்க முடியாதல்லவா?

அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையில் முடியும் வாரத்தின் பட்டியல் இதோ..

எண்
இசுலாமிய நாள்
தமிழ் நாள்
1 வது
யௌமுல் அஹத்
சனிக் கிழமை
2 வது
யௌமுல் இஸ்னைண்
ஞாயிற்றுக் கிழமை
3 வது
யௌமுல் ஸுலஸா
திங்கட் கிழமை
4 வது
யௌமுல் அருபா
செவ்வாய்க் கிழமை
5 வது
யௌமுல் கமைஸ்
புதன் கிழமை
6 வது
யௌமுல் ஜுமுஆ
வியாழக் கிழமை
7 வது
யௌமுல் ஸப்த்
வெள்ளிக் கிழமை