Thursday, April 23, 2015

மாதா மாதங்கள்!

ஏப்ரல் முதலிலிருந்து முட்டாள்கள் தினம், சித்திரை தமிழ்புத்தாண்டா.. என்பதனைப் பற்றிய விளக்கங்களினால்.. நாம் ஆரம்பத்திலிருந்து விளக்கிவந்தில் சற்று விலகிப் போய்விட்டோம். எந்த ஒரு பெருங்கதைக்கும் கிளைக்கதைகளும் உண்டல்லவா? அது போக நாம் பயணித்துக் கொண்டிருப்பது காலண்டர் கதைகளுடன்.. வாழ்ந்து கொண்டிருப்பது காலண்டரில் குறிக்கப்பட்ட கதைகளுடன். எனவே அப்பப்போ குறிக்கப்பட்ட கதைகளையும் பற்றி கவனித்துக் கொள்ளுதல் இயல்பானதுதானே?

நேற்றுக்கூட அட்சயதிருதியை.. அதைப்பற்றியும் கூட பல்வேறுகருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் நாம் பார்க்கப்போவதில்லை. ஏனெனில், நாம் பார்த்துக்கொண்டிருப்பது வரலாற்றுக்குறிப்புகளே! நம்பிக்கையின்பாற் பட்டவைகளைப் பற்றியல்ல. நாம் தஞ்சைப் பெரியகோவிலை வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கலாம், ஆன்மீக தளமாவும் பார்க்கலாமென்றால்.. இங்கு நாம் காண்பது முதற்கண் கொண்டே! 

- கிரேக்கத்தில் தான், தற்போதைய காலண்டர்களின் ஆரம்பம் என்று பார்த்தோம். கிரேக்க காலண்டர்களின் மாதங்கள் இருந்ததையும் கவனித்தோம். இதில் ஆண்டு என்பது பூமி, சூரியனைச் சுற்றும் ஒரு முழுச்சுற்றிற்கான காலம். மாதம் என்பது பூமியை நிலா ஒரு சுற்றுசுற்ற எடுத்துக்கொள்ளும் காலம். இதில் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட வாரக்கணக்கு, இந்தியாவின் கருத்தியல் கொடை. அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கிரகங்களும் கோள்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்மோர் உணர்ந்திருந்தது ஆச்சர்யமல்லவா? வாரங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் குணநலன்களையும் அரிதியிட்டு வைத்திருப்பதும் சிறப்பேதான். 

வாரங்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக பல்வேறுவகையிலும் நாட்களைக் தொகுத்துக் கட்டிவைத்ததின் துவக்கம் மாதங்களில்தான் துவங்குகிறது. காலண்டரின் துவக்கமான கதை இதுவாகத்தான் இருக்கும் என ‘ஹெராடட்டஸ்’ உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் ஒப்புக்கொள்ளும் கதை இதுவே.
Photo : Tecfa education & technologies.

வரலாற்றின் மகத்தெளிவான பதிவுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே நாட்களுக்கான பதிவுகள் தொடங்கிவிட்டன. நீண்ட தலையும் சப்பை மூக்கும் கொண்ட ‘நியாண்டர்தால்’ மனித இலம் கலாச்சார மேம்பாடுகளில் காலெடுத்து வைத்த காலம். வேட்டையாடி மனிதனாக இருந்த அவனுக்கு பெண்ணே சகலமுமாக இருந்தான். பெண்ணின் ‘படைக்கும் திறன்’ மீதான பிரமிப்பு அவனை வெகுவாக ஆட்டுவித்திருந்தது. ஆண்கள் பெரும்பாலும் திசையற்ற வேகத்தில் அலைந்து திரிபவர்களாக இருந்த காலத்தில் பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகமாக இருந்தது.

பெண், குழந்தையைப் ஈனுபவளாதலால் அவைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், ஆண்களால் வேட்டை உணவு கொண்டு வர இயலாத காலத்திலும் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டிய அத்யாவசியமும் பெண்ணையே சார்ந்திருந்தது. எனவே, பெண்கள் தங்கள் வற்றாத உணவுத்தேவையின் பொருட்டு தாவர உணவை சேகரிப்பவர்களாகவும், மறு பயிரிடுதலின் தேவையை உணர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பெண்ணால் கண்டடையப்பட்ட பயன்படுத்திய தாவர வித்தின் மறுபயிரிடுதலை, ஆண் பயின்று செயல்படுத்தியபிறகு முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான விவசாயமாகவும், ஆத்தோர நாகரீகத்தின் துவக்கமாகவும் மாறியது.

தேவையே கண்டுபிடுப்பின் தாய் ஆதலால், தாயின் தேவைகள் அவளைக் கண்டுபிடிப்பாளியாக் செய்தது. கூரிய கவனிப்பும், நுட்பமான பிரதிப்படுத்தலும், பிறரையும் கற்றுணரச்செய்தலும் வல்லவளான தாய், சமுதாய பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமானதான சுயகுறிப்பெடுத்தலையும் செய்தாள்.

தனது தேவைகளை, உணர்வுகளை, உணர்ந்தவைகளை பெண் குறித்துவைக்கத் தவறினாளில்லை. ‘விவேகமான காயம்’ என அறிஞர்களால் விவாதிக்கப்படுவதும், ‘மனித சமுதாய உற்பத்தி வங்கி’யும், தனது சுய அடையாளங்களில் தலையாயதுமான தனது மாதவிடாய்ச் சுழற்சியை அவள் பதிவு செய்தாள். ஆரம்பகால குகைளில் பல்வேறுபட்ட நில அமைப்புகளிலும் காணப்பட்ட தொகுப்பு தொகுப்பான கீறல்களும், குறியீடுகளும் மாதர்கள் கண்ட மாதங்களை உணர்த்துகின்றன. மேலும் சந்திரனின் தேய்பிறை, வளர்பிறைகளுக்கும் தனது உடல் மாற்றங்களுக்குமான தொடர்பையும் பெண்ணே கண்டறிந்தாள்.

மனிதனின் உயர்வு என்கிற தொடரில் பனிப்பிரதேச மான் கொம்பு ஒன்றில் முப்பது நாட்களைக் கொண்ட மாதச்சுற்று காணப்படுவதாக பதியப்பட்டது. இரு பல்வேறு ஆராய்ச்சியாளர்களிடையே உலகலாவிய தர்க்கங்களுக்கு அடிகோலியது. இதனைப் பற்றிய கருத்தாய்வுகளின் முடிவில், இதில் காணப்படும் குறியீடுகளின் அடிப்படையில் இது சந்திரனின் சுற்றாக இருக்கலாம் என்றும், பெண் உதிரப்போக்கின் குறியீடாக இருக்கலாம் என்றும், இரண்டுமாகவும் இருக்கலாம் என்றும் ஐயமின்றி! அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆக, இந்த மாதங்களை ஆரம்பித்தது மாதர்கள் என்பதால், மாதா மாதம் சம்பளம் வாங்கும் எல்லோரும் மாதாவிடம் கொடுத்துவிடுங்கள்!