Thursday, June 25, 2015

வடக்கும், தெற்கும்!

தற்காலத்தைய சினிமாக்களுக்கு சற்றும் குறைவில்லாத ‘சொற்குத்துக்கள்’ அதாங்க, ‘பஞ்ச் டயலாக்குகள்’ அரசியலிலும் உண்டு. அந்தக் கால அரசியலில் ‘வடக்க வாழுது! தெக்க தேயுது!’ என்பதும் ஒரு பிரபலமான சொற்குத்து. இந்த வார தலைப்பை நினைத்தவுடன் மேற்சென்ன வார்த்தை மனதில் தோன்றியது என்பதால் சொன்னேன். மற்றபடி, இந்த கட்டுரைக்கும் வார்த்தைக்கும் சம்மந்தமில்லை. தவிர, எல்லாக்காலத்திலும் வடக்கேயும் தெற்கேயும் வாழ்பவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தேய்பவர்கள் தேய்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்!

வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு, தட்சின் என்றால் தெற்கு. உத்தர் திசையிலும், தட்சின திசையிலும் சூரியனின் ஒளி பயணித்தலே உத்திராயணம் மற்றும் தட்சினாயணம் என்று அழைக்கப்படுகின்றன. 

அதெப்படி, சூரிய ஒளி நகரும்? பூமி தானே சுற்றுகிறது? என்றால்.. அதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

பூமி தன்னச்சில் 23.5 டிகிரி சாய்ந்தபடி சூரினைச் சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை. இந்த உண்மை துணையுடன் ஒரு விளையாட்டை விளையாடுவோம். இந்த விளையாட்டிற்கு தேவை இரண்டு பந்துகளும் ஒரு நூலும். பந்துகளின் மேல் கோடுகள் வரைவதற்காக பென்சிலும். எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா.. இனி ஒவ்வொன்றாக படத்தில் காட்டியபடி செய்து பாருங்கள்.

படம் 1. இரண்டு பந்துகளில் ஒன்றை சூரியனாகவும், மற்றொன்றை பூமியாகவும் பாவித்துக் கொள்ளுங்கள். பூமியின் பந்தில் குறுக்குவெட்டாக சரியான விட்டம் அமையுமாறு மையத்தில் ஒரு கோட்டு வட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

படம் 2. சூரியனின் மையத்திலிருந்து, பூமியின் மையக்கோட்டின் ஏதேனும் ஒரு புள்ளியில் அமையுமாறு நூலினை இனைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த நூல்தான், சூரிய ஒளியின் அடையாளம் என்பதை யூகித்திருப்பீர்கள்.

படம் 3. பூமிப்பந்தை 23.5 பாகை சாய்த்து.. நூல் படும் படி சுற்றுங்கள். நூல் ஒரு சுற்று வந்ததும் நிறுத்திவிடுங்கள்.

படம் 4. தற்போது நூலின் பாதையை வரைந்து கொள்ளுங்கள். பாதை வரைந்ததும் நமக்கு நூல் தேவை இல்லை அகற்றி விடுங்கள்.

படம் 5. நூலின் பாதை அதாவது சூரிய ஒளியின் பாதை பந்தின் மையத்தில் ஏற்கெனவெ இருந்த பாதையை சாய்ந்தவாறு வெட்டிச்செல்வதை கவனியுங்கள். இங்கே சாய்ந்த கோட்டின் மேற்புள்ளியில்.. ஏற்கெனவே உள்ள ‘மையக் கோட்டிற்கு’ இணையாக ஒரு கோடு வரையுங்கள்;. கீழேயும் அதே மாதிரி.

புடம் 6. இப்போது, மத்தியில் முதலிலே போட்ட கோடு பூமத்திய ரேகை. மேலே வரைந்த கோடு கடக ரேகை. கீழே உள்ள கோடு மகர ரேகை. சாய்ந்து இருகோடுகளையும் தொட்டுச்செல்லும் கோடு சூரிய ஒளி படும் கோணம்.

ஆக, கீழே உள்ள கோட்டில் தொடங்கி.. மேலெ உள்ள கோடுவரை சூரிய ஒளி உயர்ந்து செல்லும் அதாவது, வடக்கு நோக்கி செல்லும் பயணம்.. உத்திராயணம். மேலே உள்ள கோட்டில் துவங்கி கீழே உள்ள கோடுவரை சூரிய ஒளி செல்லும் கீழ்நோக்கிய.. அதாவது தெற்கு நோக்கிய பயணம்.. தட்சினாயணம்.

கீழே உள்ள மகர ரேகையில் உள்ள புள்ளியை சூரிய ஒளி சந்தித்து.. தன் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்து.. தன் வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாள்… மகர சங்கராந்தி.


இப்போது.. ஓரளவிற்கு புரியும்படி விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும்.. இது ஓரளிவிற்குத்தான். இன்னுமிருக்கிறது.