Tuesday, June 9, 2015

அட்சம், அச்சமில்லை!

உண்மையில் மகர சங்கராந்தி என்றால் என்னவென்றும்.. தமிழர் திருநாளாம் பொங்கலின் அடிப்படைத் தத்துவத்தையும் விளக்கி விட்டால்.. அல்லது விளங்கிக் கொண்டால் நாம் தொடர்ந்து வரும் பயணத்தின் முக்கியமானதும் இறுதியானதுமான கட்டத்தை நெருங்கி விடலாம்! 

முதற்கண் மகரசங்கராந்தி. 

மகர சங்கராந்தி என்பது வேறு ஒன்றுமில்லை. சூரியனது கதிர்கள் நேர் அலைவரிசையில் மகரரேகையின் மீது படுகின்ற, பதிகின்ற நாள் என்று ஒற்றை வரியில் எளிதில் சொல்லிவிடலாம். 

ஆனால், மகர சங்கராந்தி எனும் நிகழ்வை ஊன்றி அறிந்து கொள்ள, மகர ரேகை என்றால் என்ன? சூரிய ஒளி அலைகள் எப்பொழுது அதன் மீது நேர் கோட்டில் விழுகிறது? ஏன் விழுகிறது? ஏன் மற்ற நாட்களில் விழுவதில்லை? அவ்வாறு சூரிய ஒளி மகர ரேகையில் விழுவதில் என்ன விசேசம்? அன்றைய தினத்தில் இயற்கையில் நிகழும் மாற்றம் என்ன? போன்ற பல வினாக்களுக்கு நமக்கு விடை வேண்டியிருக்கிறது.

அதாகப்பட்டது, மகர ரேகை என்பது பூமத்திய ரேகையில் இருந்து  23.5 டிகிரி கோணம் கொண்ட தென்திசை அட்ச ரேகை. அட்ச ரேகைகள் என்பது பூவியின் மேற்பரப்பில் படுக்கை வச குறுக்குவெட்டு அமைப்பில் வரையப்பட்ட கற்பனை கோடுகள். இந்த அட்ச ரேகைக் கோடுகள் மொத்தம் 24. இந்த 24 கோடுகளும் பூமியை குறுக்காக வெட்டினால் கிடைக்கும் மையப்புள்ளியில் இருந்து தோன்றுபவை. ஓரே புள்ளியில் தேன்றினாலும் ஒவ்வொரு கோட்டிற்கும் இடையில் 15 டிகிரி கோணம் உள்ளது. இந்த 15 டிகிரி கோணத்தில்; பூமியின் மேற்புறத்தில் விளையும் கோடுகள் 24. ( பார்க்க படம்-2 )

இந்த இருபத்தி நான்கு கோடுகளுக்கும் மத்தியில் அதாவது 0 டிகிரி பாகையில் செல்லும் கோடு பூமத்திய ரேகை அல்லது ஈக்வடார் Equator என அழைக்கப்படுகிறது. இந்த பூமத்திய ரேகை உள்ளிட்ட 24 கோடுகளையும் இணைந்த விட்டமாகக் கருத்திக் கொண்டால் பூலோகத்தை 12 துண்டுகளாக இந்தக் கோடுகள் பிரிக்கின்றன. இந்தப் பன்னிரண்டு துண்டுகளும் அது அதற்கான சூரிய மாதத்தின் பெயரை தனது பெயராகக் கொண்டிருக்கின்றன.

திரும்பவும் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதங்கள் மற்றும் நட்சத்திரத்திற்கும் இந்த மாதங்களுக்கு இடையிலான பொருத்தம் போன்றவை பூமியோடு சேர்ந்து நம் தலையையும் சுற்ற வைத்து கிருகிருப்பு வரச்செய்யலாம் ஆகையால், பின்வருமாறு எளிதாக புரிந்து கொள்வோம்!

அதாவது, அட்சரேகை எனப்படும் பூமியின் குறுக்கே வரையப்பட்ட 24 கற்பனைக்கோடுகளும் பூமியை பன்னிரண்டு துண்டுகளாகப் பிரிக்கின்றன. இந்த ஒவ்வொரு துண்டும் (நாம் வழக்கமாக எல்லா சானல் டிவியின் காலை நிகழ்ச்சிகளிலும் தினப்பலன் ஜோதிடம் மூலம் அறிந்த) ஒவ்வொரு ராசியின் பெயரைப் பெறுகின்றன.



பன்னிரண்டு ராசிகளுக்கும் மத்தியில் அமைந்த கோடு பூமத்திய ரேகை எனப் பெயர் பெறுகிறது. அதன் வடபுறமாகச் செல்லும் முதல் 23.5 டிகிரி பாகைக்கான கோடு கடக ரேகை எனப்படுகிறது. இந்தக் கடக ரேகையானது நமது இந்திய தேசத்தின் குறுக்காகவும் செல்கிறது. ( இது கற்பனைக் கோடு என்பதால், இரயில் ஏறிப்போய் எல்லாம் இந்தக் கோடு போடப்பட்டிருக்கும் பகுதியைப் பார்த்து வர இயலாது. )

கடகரேகைக்கு நேர் எதிர்ப்புறமாக, பூமத்திய ரேகைக்குக் கீழே தென்புறமாக 23.5 டிகிரி கோனத்தில் உள்ள கோடு மகர ரேகை என்று அழைக்கப்படுகிறது. இது நிலப்பரப்பின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்த செல்கிறது. இந்தயாவை பொறுத்த மட்டில், தேசத்திற்கு வெகு கீழே இந்தியப் பெருங்கடலில் செல்கிறது. 

இந்த மகர ரேகை எனப் பெயரிப்பட்ட அட்ச ரேகையில் சூரியனது ஒளிக்கதிர்கள் நேரடியாகப் படும் நாள்தான் மகரசங்கராந்தி. அதாவது, மகர ரேகையுடன் ஆதவன் சங்கமிக்கும் நாள்.

ஒளியானது எப்போதும், எல்லாச் சூழலிலும் நேர்கோட்டிலேயே பயனிக்கிறது. கவனிக்க, டார்ச் லைட் அடித்தால் அதன் ஒளி வளைந்து செல்வதில்லை. பிறகு, சூரிய ஒளி மட்டும் வளைந்தா விழும்? ஆனால், நாம் ‘சூரிய ஓளி நேராக மகர ரேகையில் விழுகிறது’ என்ற பதத்தை ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தி வருகிறோம். எனில் சூரிய ஒளி நேராக விழுதல் என்றால் என்ன?

இங்கே தான், “ பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது” என்ற அறிவியல் செயல்படுகிறது. 

பூமி கோள அமைப்பிலானது. அதன் உச்சியில் வடதுருவமும், அடிப்பகுதியில் தென்துருவமும் அமைந்துள்ளது. இதில் நாம் நடு உச்சியாக கருதும் வடதுருவம், தன் இருக்கவேண்டியதாக நாம் கருதும், நேர் செங்குத்துக் கோட்டில் இருந்து சற்று சரிந்து, சாய்ந்து காணப்படுகிறது. இவ்வாறு சாய்ந்த கோலத்திலேயே நமது கோளம் தன்னைத் தானேவும், சூரியனையும் சுற்றி வருகிறது. என்பதையெல்லாம் நாம் சிறுவயதிலேயே கற்று அறிந்து அறிஞர்களாக உள்ளோம். எனவே, தற்போது அவ்வாறு சாய்ந்திருப்பதால், என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.

பூமி சாய்ந்து சுற்றுவதினால் தான் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன. மழைக்காலமும் வெயில் காலமும் தோன்றுகின்றன. இவ்வாறு பூமி தன் அச்சில் சாய்ந்து சுற்றுவதால் தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் சாய்ந்தும்.. நேராகவும் விழுகிறது. தட்சினாயணம், உத்திராயணம் போன்றவை நிகழ்கின்றன. அப்படியென்றால்..?

No comments:

Post a Comment