Thursday, May 7, 2015

நாள் என்ற ஒன்று!

“நாள்என்று ஒன்றுபோல் காட்டி உயிர்ஈறும்
வாள்அது உணர்வார்ப் பெறின்”
- எனும் குறள், எப்போதும் என்னைப் பதறவைக்கும். ‘ஒவ்வொரு நாளும் ஓரு கூரிய வாளாய்;, வாழும் உயிரை அறுத்துக்கொண்டிருக்கிறது’ எனும் வள்ளுவரின் இந்த வாக்குதான் உண்மையிலும் உண்மை. ஆகையால் நாளெனும் நல்வாள், நம் வாழ்நாளை முற்றிலும் அறுத்தெரியும் முன்னர், நம்மை சுற்றித்தாங்கும் ஜீவ சுற்றத்திற்கு நன்மையே செய்திட முயல்வோம்.

- காலம் என்பது ஆண்டு, மாதம், வாரம் எனப்பல தொகுப்பாக இருப்பினும் அவையெல்லாம், நாள் என்னும் ‘கண்ணி’களைக் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்ட மாலைதான். இன்றைக்கு, நாள் என்ற ஒன்றினை நாம் ‘மணி’நேரங்களாகப் பிரித்துப் பயன்படுத்துகிறோம். இது நாம் காலக்கணக்கின் அடிப்படைத் தன்மையை, நமது அன்றாட வேலை ஒழுங்கினை மிக நேர்த்தியாகச் செய்த கொள்ள உதவுகிறது.

நவீன வாழ்வோட்டத்தின் அடிப்படையான செயல்வகை ஒப்பந்தங்கள் (கமிட்மெண்டுகள்), தீர்மானங்கள், நேரங்களைச் சுட்டி குறிக்கப்படுகின்றன. இன்றைக்கு நாம் மணிநேரங்கள் இல்லாத நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. காதலனுக்கு ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பிய காதலியின் கோபம் கூட, அவனது ‘லாஸ்ட் சீன்’ டைம் பார்த்துத்தானே எழுகிறது. எனவே, நேரத்தோடு இயங்குகிற வாழ்வே சீரான வாழ்வாகிறது. நேரம் கெடும்போது சகலமும் கெட்டுவிடுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றி வர எடுத்துக் கோள்ளும் நேரமான ஒரு நாளை  இருபத்திநான்கு(24) கூறுகள் இட்டுக் கொண்டுள்ளோம். இந்தக் கூறுகள் மணி நேரங்கள் ஆகும். அதாவது, ஒரு முழு நாள் பொழுதினை இருபத்து நான்கு பகுதிகளாகப் பிரித்தால், அவற்றின் ஒவ்வொரு தனிப்பிரிவும் ஒரு மணி நேரம் ஆகும். இந்த மணியும் அறுபது நிமிடங்களான கூறாகவும், ஒவ்வொரு நிமிடமும் அறுபது வினாடிகள் அடங்கலாக, மொத்தம் மணிக்கு 3600 வினாடிகள் என சிறுகூறாகவும் பிரித்துக்கொண்டுள்ளோம். இன்றும் நுண்ணிய கூறுகளாக ஆராய்ச்சி நோக்கில் பயன்படுத்தி வந்தாலும் மேற்கூறியவைகளே பொதுவாகப் புழக்கத்தில் இருக்கும் பிரிவுகளாகும்.

நேரத்தின் அடிப்படையில்தான் நாம் வாழும் பூமியையும் அளவிட்டு வைத்துள்ளோம். வரலாறு, காலத்தின் அடிப்படையில் குறிப்பிடப்படுவது மட்டுமல்ல, புவிஅமைப்பை பற்றிய அறிவியலும் (புவியியல்) காலத்தின் அடிப்படையில் தான் குறிப்பிடப்படுகிறது. 

பூமியின் நெட்டுவாக்கில் (Vertical) நாம் 23 கற்பனைக் கோடுகளைப் போட்டு வைத்துள்ளோம். இவை தீர்க்கரேகைகள். இந்த 23 தீர்க்க ரேகைகளுக்குமான இடைவெளிகளின் எண்ணிக்கை 24. இந்த இடைவெளியென்பது, பூமி தன்னைத்தானே சுற்றும் போது ஒரு மணிநேரத்தில் கடக்க அல்லது சுற்ற ஆகும் தூரம் ஆகும். இந்த தீர்க்க ரேகைகளின் அமைவில் நிலப்பரப்பும் கடல் பரப்பும் அளவிடப்படுகிறது, ஆராயப்படுகிறது.

இந்த தீர்க்க ரேகைகள், நாளால் தோன்றி கோளை அளக்கிறது என்றால், பூவியின் மேற்பரப்பின் குறுக்காக (Horizontal) கற்பித்துக் கொண்டுள்ள, அட்ச ரேகைகளும் பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகையும், மகரரேகையும், கடக ரேகையும் சொல்வன ஏராளம். இந்த அட்ச ரேகைகள் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. 

பூமி சுற்றும் நேரத்தின் அடிப்படையில் தீர்க்க ரேகைகள் உருவாயின என்றால், பூமி சுற்றும் கோணத்தின் அடிப்படையில் அட்சரேகைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. பூமி தன் அச்சிலிருந்து சாய்ந்து சுற்றுகிறது என்பது நாம் அறிந்ததே! இவ்வாறு சாய்ந்து சுற்றுவதின் அடிப்படையில், பூவியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் கோணமும் நீளமும் மாற்றமடைகிறது. இம் மாற்றங்களினால்தான் பருவகாலங்களும் மாற்றம் பெருகிறது. பருவ காலங்களின் மாற்றம்தான் முதல் முதலின் மனிதனின் கவனத்திற்குட்பட்டு ஆரம்ப கால காலண்டர்களை தோன்றின என்பதை நாம் கண்டிருக்கிறோம். எனவே, இந்த அட்சரேகைகள் காலண்டர்களின் சுற்றோட்டத்தில் சேர்ந்து சுழல்கிறது என்றால் மிகையாகாது. இவற்றைப்பற்றி விரிவாக இனிவரும் தொடர்களின் காணத்தானே போகிறோம்.

இப்போது நாம் நாட்களைப் பற்றி கவனித்துக்கொண்டிருக்கிறோம். உட்பிரிவுகள் அடங்கிய நாளும், நாட்கள் அடங்கிய வருடங்களையும் நாம் ஆங்கில காலண்டர் முறையில், எண்களிட்டு அழைக்கிறோம். அனால் மாதங்களுக்கு முழுமையான அர்த்தார்த்தமான பெயர்கள் இருப்பதை கவனியுங்கள். இவை, யோசிக்குங்கால் நமக்கு புலனாவது ஒன்று, தற்போதைய ஆங்கிலகாலண்டர் பல ஆரம்ப கால இனக்குழுக்கள் பயன்படுத்தி வந்த காலண்டர்களின் தொகுப்பே.

 ஆனால், பயன்பாட்டிலிருக்கும் தமிழ்க்காலண்டரில் மாதங்களுக்கு இருப்பது போல் நாட்களுக்கும், வருடங்களுக்கும் பெயரிட்டுள்ளது எதையோ உணர்த்துகிறதல்லவா?