Friday, July 3, 2015

பூமியைச் சுற்றலாம்!

‘மகரசங்கராந்தி’ அன்றே பொங்கல். ‘பொங்கல்’தான் தமிழர் திருநாள். அன்றுதான் தன் உழைப்பிற்கு கைகொடுத்த பலன் கொடுத்த, அனைத்து இயற்கைத் தெய்வங்களுக்கும் தமிழன் நன்றி செலுத்துகிறான். முக்கியமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றான். 

அன்றுதான் தை மகளும் பிறக்கிறாள். தைமாதப் பிறப்பினை கண்ட தமிழன் அன்று ஆதவனுக்கு ‘உத்திராயனத் துவக்கம்’ என்பதை அறியாமலா.. தன் மாதத்தை துவங்கியிருப்பான்? அதுபோக, உத்திராயணம் முடிந்து தட்சிணாயணம் சரியாக ஆரம்பிக்கும் நாள் அன்றுதான் சரியாக ‘ஆடி மாதம்’ துவங்குகிறது. வேறு காலண்டர்களில் மிகச்சரியாக இந்த சூரிய ஓட்டத்தின் திருப்பங்களும், மாதத் துவங்கங்களும் ஓரே நாளில் இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழ் தவிர்த்த இதர காலண்டர்களில் மாதங்கள் தன்பாட்டிற்கு சுற்றிக் கொண்டிருக்க  கிரங்களும், பூமியும், சூரியனும் அதனதன் பாட்டிற்குச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மக்களும்தான்.

தட்சினாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பிக்கும் முதல் நாளினை ‘மகரசங்கராந்தி’ என அழைப்பதாகக் கண்டோம். உத்திராயணம் முடிந்து தட்சினாயணம் ஆரம்பிக்கும் நாளினை சூரியன் அன்றைய தினத்தில் இருக்கும் இடமான கடக ரேகையைக் கருத்தில் கொண்டு ‘கடகசங்கராந்தி’ என்று அழைப்பதில்லை. மாறாக ‘தட்சினாயண புண்ணியகால துவக்கநாள்’ என்று அழைக்கிறோம். புண்ணியம் இருக்கும் இடம், தமிழர்கள் இருக்கும் தென் திசை என்பதால் கூட இருக்கலாம்!

வேர்ச்சொற்களின் ஆய்வு கண்ட மூத்தோர் ‘எழு’ என்பது ‘மொழி’க்கான வார்த்தையாகக் கண்டனர். எனவேதான் ‘எழுது, எழுத்து’ என்பன போன்ற சொற்கள் புழக்கத்திலிருக்கின்றன. ‘தென் மொழி’ என்பதற்கான பொருளில் தான் ‘தென்+எழு’ என இருந்து ‘தெம்மெழு’ என திரிந்து.. ‘தமிழு’ என்றாகி இறுதியில் ‘தமிழ்’ என்றாயிற்று என்பார். தமிழ் உடன்  உகரம் சற்று அதிகமாக சேர்த்து உச்சரிக்கப்படும் ‘தென்+எழுகு’என்பதே ‘தெலுங்கு’ ஆயிற்று என்றும் மலையகத்து எழுவான ‘மலை+எழு’, ‘மலையாளம்’ ஆயிற்று என்றும் பகர்வர். இவ்வாறே, மொழி தோற்றிய முதல் இடம் ‘எழு+அகம்’ என்று இருந்து ‘ஈழகம்’ என்றாகி மருவி.. மருவி.. ‘ஈழம்’ என்றாயிற்று என்றும் சொல்வாருண்டு. எது எப்படியிருந்தாலும்.. தென்னகமாம் நம் தமிழகம், பல திண்ணிய விழுமியங்கள் சூழ்ந்த புண்ணியலோகம். 

இதைதெல்லாம் எழுதும் போது நாம் எவ்வளவும் பெருமைகொண்டவர்கள் என்பதில் சற்றுக் கர்வம் மிகுகிறது. நீங்களும் காலர்களைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள். நாம் பெருமைசாலிகள். இவ்வாறு என்னும் போதே இன்னொரு என்னமும் தலைதூக்குகிறது. நமது பெருமையை, நாம் மட்டுமே சொல்லிக் கொண்டிராமல் பிறரும் சொல்லும் வண்ணம் செய்யவேண்டும் என்பது. 

இல்லை என்றால், “பதினாறு வயதினிலே” படத்தில் ஸ்ரீதேவி, கமலிடம் ‘உங்கள எல்லாரும் கோபாலகிருஷ்ணன்னுதான கூப்புடுறாங்க?’ என்று கேட்பார். அதற்கு ‘எங்க கூப்புடுறாங்க.. நான்தான் சொல்லிக்கிட்டு திரியுறேன். எல்லாரும் “சப்பாணி.. சப்பாணி” ன்னுதான் கூப்புடுறாய்ங்க’ என்பார். அதுபோல் நாம் ஒன்று சொல்லிக் கொண்டிருக்க, அடுத்தவர்கள் நம்மை மட்டமாகவே நினைத்துக் கொண்டிருக்க என்று ஆகிவிடும். ஆகவே, ஆவண செய்யவேண்டும்.

‘எங்கெங்கோ போகும் மணம்.. சேர்த்ததனை சரியான பாதையில் செலுத்தனும் தினம்’ என்பதால் 'தினம்' பற்றிய கதைக்கே திரும்பவும் வருவோம்.

காலண்டரின் பெயர்க்காரணத்தில் இக்கட்டுரையை ‘காலண்ட்’ செய்த, அதவாது துவங்கிய நாம்.. காலண்டரின் ஆரம்பகால வரலாறு, மாதங்களை மாதர்கள் கண்டுபிடித்த வரலாறு போன்றவற்றை அறிந்தோம். 

நாட்களுக்கு சில சிறப்புக்களைக் கொண்டு கொண்டாடி வருவதை அறிந்த நாம், ஏப்ரல் முதல்நாள்.. ஏன்? ‘அறிவிலிகளின் நாள்’ என்பதையும் அறியத் தலைப்பட்டோம். நாள் மற்றும் வாரத்திற்கான பெயர்க்காரணங்கள். நாட்களின் பெயர்களைக் கொண்டு அவற்றை நல்லநாள் என்றும் கெட்டநாள் என்றும் சொல்வதற்கில்லை என்றும் தெரிந்து கொண்டோம். நாட்களைப் பற்றிய இன்ன பிறவும் அகத்தியர் வழிவந்த ஜோதிடத்தின் துவக்கத்தையும் கூட சற்று தொட்டுப் பார்த்தோம்.

பூமி சுற்றுவதின் அறிவியல், பூமிச்சுற்றின் கணக்கிடல், கிரகங்களின் சுற்று, வாரங்களுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பு போன்ற வற்றை அண்ட வெளிகளில் எல்லாம் சுற்றிச் சுற்றி பார்த்தும் வந்திருக்கிறோம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்... உங்களுக்கே தெரியும், கதை அல்லது கட்டுரைத் தொடர்களின் இடையிடையே முன்கதைச் சுருக்கமோ.. இதுவரையில் நாம் கடந்துவந்தவை பற்றியோ சொல்வது ஒரு தொன்றுதொட்ட வழக்கம் என்று. அந்த நடைமுறையைப் பின்பற்றியே நாமும் மேற்சொன்னவற்றை சற்று நினைவுகூர்ந்தோம்.

இப்போது, பொங்கல் வைக்கலாம்.. கட்டுரையை முக்கிய எல்லையை எட்டிப்பிடித்து விடலாம் என்றால்.. அதற்கு முன் தமிழன் ஏன் பொங்கல் வைத்தான்? அவன் கலையும் கலாச்சாரமும் என்ன? வாழ்வும் வழிபாடும் என்ன என்பதைப்பற்றியெல்லாம் பதிய வேண்டியிருக்கிறது. தமிழன் பண்பாட்டிலிருந்து பிறந்த காலண்டரை அடையாளப்படுத்த, ஆவணப்படுத்த சில சுற்றுக்கள் கொஞ்சம் சேர்த்து சுற்ற வேண்டியிருக்கிறது. அதற்காக.. நாம் தமிழனைப் போன்றே பன்னெடுங்கால பண்பாட்டுப் பின்னணி கொண்ட பல்வேறு இனக் குழுக்களையும் அவர்தம் காலண்டர்களையும் அறிந்து வரவேண்டியிருக்கிறது.



எனவே.. இதுவரை பூமி சுற்றுவதை பற்றி அறிந்து கொண்டிருந்த நாம், கொஞ்சம் பூமியைச் சுற்றி வருவோம்! முதலில் சீனா.