Tuesday, October 20, 2015

தஜ்ஜால்

உலகின் இறுதியென்பது உறுதியானது. அது எப்பொழுது வரும் என்பதுதான் அல்லாஹ்வின் கையிலிருக்கிறது.

மனிதநேயர் முகம்மது நபிகள் ஸல் அவர்கள் வாயிலாக இம்மை முடிந்து மறுமை மலரும் அந்த நாட்களை உலகத்தோராகிய நாம் சிற்சில குறிப்புக்கள் மூலம் அறியத்தந்துள்ளார் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்.

1.   பெரும்புகை மூட்டம் தோன்றும்
2.   அதிசய பிராணி ஒன்று உலகை மிரட்டும்
3.   மேற்கில் சூரியன் உதிக்கும்
4.   ஈஸா நபி வருகைபுரிவார்
5.   யஹ்ஜுஜ்,  மஹ்ஜுஜ் வருகை நிகழும்
6.   கிழக்கு திசையில் மாபெரும் இயற்கைச்சீற்றம்
7.   மேற்கு திசையிலும் ஒரு புகம்பம்
8.   அரபுதீபகற்பத்திலும் ஒரு புகம்பம்
9.   பெரும் நெருப்பு தோன்றும்
10. இறுதியானதாகவும் மிக முக்கியமானதுமான உலக அழிவின் அடையாளமானது.. தஜ்ஜாலின் வருகை.

தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த தஜ்ஜால் என்பவன் – கிருஸ்துவ நம்பிக்கையில் செல்லப்படும் “அந்திக்கிருஸ்து“ போன்றவன் ஆவான்.


''ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை) நாள் வரும்

வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

குட்டையான குண்டான அவன் குறுமலையைப் போன்று தோற்றமளிப்பான். மகா பொய்களைக்கூட உண்மை போன்று கூறும் ஆற்றல் மிக்கவன். அவனது கால்கள் பருத்தும் அகண்டும் காணப்படும். நினைத்த மாத்திரத்தில் மழையைப் பொழியவைக்கும் ஆற்றலும் அவனிடத்தில் உண்டு. கால்நடைகளை ஒரே நாளில் பன்மடங்கு கொழுக்கச் செய்வான். மலையளவு உணவுப்பொருட்களை உடைய கிடங்கும் அவன் கையகப்படுத்தியிருப்பான்.


தஜ்ஜால் வலது கண்ணில் ஊணம் உடையவன். கிழக்கு நாடுகளில் இருந்து வெளிவரும் அவனது ஊணமுற்ற வலதுகண் பெரிய கருத்த திராட்சைப்பழத்தைப் போன்று காட்சியளிக்கும். மந்திர தந்திரங்களில் தேர்ந்தவனான அவன் இறந்தவர்களை பிழைக்கவைக்கும் ஆற்றல் உடையவன். உயிரோடிப்பவர்களையும் கொல்லக்கூடியவன் எனச்சொல்லத் தேவையில்லை. பிறவிக்குருடு, கொடும் குஷ்டம் போன்ற நோய்களைக்கூட குணப்படுத்திக் காப்பாற்ற வல்லவனாக இருப்பான்.

இந்த தஜ்ஜால் முதலில் நல்லவன் போல உலக மக்களிடையே அறிமுகமாகி மெல்ல மெல்ல அனைவரின் அபிப்பிராயத்தையும் பெற்று பின்.. துரோகம் செய்ய ஆரம்பிப்ப்பான். தானே இறைவன் எனக்கூறி ஈமான்களை நம்பிக்கையுறச்செய்வான்.  அவனிடத்தில் சொர்க்கமும் நரகமும் உண்டு. அவன் சொர்க்த்தை நரகம் எனவும் நரகத்தை சொர்க்கம் எனவும் கூறி ஏமாற்றுவான். ஏமாந்தவர்கள் அவன்காட்டிய சொர்கத்தில் சென்று நரகவேதனையை அடைவார்கள்.

அவனிடத்திலே தண்மை பொருந்திய நீரும், சுடும் நெருப்பும் உண்டு. சுடும் நெருப்பை நீரென்று சொல்லி உண்ணத்தருவான். இறைவனிடத்திலே கட்டுப்பட்டோர் தவிர ஏனையோர் அவற்றை வாங்கி உண்டு தாங்கொணா நெருப்பின் தழலில் மடிவார்கள்.

அவனால் ஒரு இறைத்தூதர் கொல்லப்படுவார். அவன் அவரை மீண்டும் பிழைக்க வைப்பான். ஆனால் மறுபடி அவரைக் தஜ்ஜால் கொல்ல முற்படும் போது.. அவனால் இறைத்தூதரைக் கொல்ல முடியாது. அதுதான் அவனது அழிவிற்கு ஆரம்பம். உலகின் இறுதி.

அவன் மெக்கா, மெதினா தவிர உலகின் எல்லாப்பிரதேசங்களுக்கும் பிரயாணம் செய்வான்.  அவ்வாறு அவன் பிரயாணம் செய்து மக்களுக்கு துன்பம் அளித்து வரும் வேளையில் பாலஸ்தீனத்திலுள்ள “லுத்து“ என்னு பெருநகரின் நுழைவாயில் அருகே அவனுக்கு ஈஸா நபி (அலை) அவர்களுக்கும் பெரும் யுத்தம் மூளும். அந்த யுத்தத்தின் இறுதியில் அவன் – தஜ்ஜால் கொல்லப்படுவான்.  

அவனால் விளைவிக்கப்பட்ட தீமைகள் அவனுக்குப்பின்னும் தொடர்ந்து உலகை அழிவுறச்செய்யும். ஆனால், இறைநம்பிக்கையில் இஸ்லாத்தைச் சார்ந்தோர்கள் இந்த இறுதித்தீர்ப்பின் நெருக்கத்திலும் தஜ்ஜாலின் தீமைகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் மார்க்கம் உள்ளது.

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்கள்...

''உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக அல்கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்வாறு பிரார்த்திக்குங்கால், இறைத்தூதரின் மொழிப்படி நம்மை இரட்சிக்கவும் இறைவன் அருளுள்ளம் கொண்டுள்ளார்.