Saturday, September 26, 2015

நிபிரு Nibiru

கடவுள் வழிபாட்டினை தீர்க்கமாக நம்பி வழிபட்ட ஆதிக்குடிகளுள் மாயன்கள் முக்கியமானவர்கள். அவர்கள் தங்கள் கணிதத்தையும் காலண்டரையும் கூட ‘இட்சாம்னா’ எனப்படும் ‘காலத்தின் கடவுள்’ தங்கள் முன்னோர்களிடம் கொடுத்ததாகக் கருதினர்.  

இந்துக்களின் கருத்தாக்கத்தில் வரும் ‘நரகம்’ என்ற அமைப்பைப் போலவே, ‘மெட்னசு’ என்ற இருண்ட நகரம் ஒன்று இருப்பதாக, மாயன்கள் நம்பினர். மனித பாவங்களுக்கான தண்டனை அளிக்கும் அந்த நகரை ‘கூனிகா’ என்ற கொடும் தெய்வம் ஆட்சி செய்வதாகவும் கருதினர்.

அறிவியல் கூற்றின்படி, மாயன்கள் கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்காவில் வசித்துவந்த பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கு முன்பேயும் ‘சப்போட்டெக்’, ‘ஒல்மெக்’ போன்ற பழங்குடியினர் இங்கு வசித்துவந்தனர். இவர்களுக்கு சற்று அடுத்தும் மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற நாகரீகங்கள் இருந்து அழிந்திருக்கின்றன. எனினும், இந்த நாகரீகங்கள் மாயன்களின் நீட்சியைக் காட்டிலும் காலத்தால் குறைந்தவை.

மேற்கூறப்பட்ட எல்லா நாகரீகங்களிலும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கணக்குவழக்குகளை (கணக்குன்னா.. ஏன் உடனே வழக்கும் வருகிறது?) உடையவை. 

மாயன்களின் காலண்டர்கள் சூரியச்சுற்றினை ஒட்டியவை மட்டும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை எல்லாக் கோள்களையும் ஒருசேரச் சார்ந்தவை. முழுமையான விவசாயத்தை பின்பற்றிய நாகரீகங்கள் மட்டுமே உறுதியான சூரியச்சுற்று காலண்டர்களைப் பின்பற்றியவை. மாயன்கள் வேட்டையாடி வாழ்வை விட்டுவிடாதவர்கள். 

நிலவின் அடிப்படையிலான மாதங்கள் எனும் பகுப்பினை அவர்கள் கொண்டிருந்தார்களா? என்பது பற்றி சரிவரத் தெரியவில்லை. ஆனாலும், பல்வேறு கோள்களின் அடிப்படையிலான பல்வேறு சுற்றுக்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். வெள்ளி – சுக்கிரன் - கிரகத்தின் அடிப்படையிலான நாட்சுற்றுக்கள் கூட மாயன் காலண்டர்களின் உண்டு. 

மாயன்களின் ஆண்டு நீள் தன்மையைக் (Linear) கொண்டது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. (Infinite). அடுத்தடுத்து தொடரும் நாட்களைக் கொண்டது. அதாவது.. நம்மைப்போல, சென்ற ஆண்டு இந்தநேரம் என்று குறிப்பிட்டெல்லாம் அவர்கள் நாட்களை நினைவு கொள்வதில்லை. நாட்கள் முடிந்து விட்டால் முடிந்ததுதான். கதம் கதம். (பிறந்தநாட்கள் கூட கொண்டாட மாட்டார்கள் போலிருக்கிறது. டிரீட் மிச்சம்)

அடுத்தடுத்து தொடரும் நாட்களை பிரிவுகளாக பிரித்திருந்தனர். அந்தப்பிரிவுகளும் சுழற்சியில் இல்லை. தொடர்ச்சியில்தான். 260 நாட்களைக் கொண்ட சோல்க்கின் (Tzolk'in) எனும் ஆண்டுச்சுற்றும் உண்டு. ஆண்டென்பது 365 நாட்களை கொண்டதாகவும் சிற்சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. 584 நாட்கள் அடிப்படையிலும், 819 நாட்களின் அடிப்படையிலும் கூட ஆண்டுகள் வெவ்வேறு குறிப்புகளில் உள்ளன. ஆனாலும், இந்த முறைகளையேதான் அவர்கள் பின்பற்றினார்களா, விழா நாட்கள் எவை எவை என்பதெல்லாம் மாயமானவை. 

மாயன்கள் ‘ஹாப்’ Haab என்ற சிறு சுற்றுக்களைப் பயன்படுத்தினர். 52 ஹாப்கள் கொண்டது ஒரு ஆண்டு. 13 நாட்களைக் கொண்ட வரிசை (சுற்று அல்ல),  20 நாட்களைக் கொண்ட வரிசை என்பதும் கூட மாயன் காலண்டரில் உண்டு. மாயன்கள் பல்வேறு கிரகங்களையும் கணக்கிட்டு, காலண்டர்கள் அமைத்தனர் எனக் கண்டோம். இந்த கிரக சேர்க்கையன் அடிப்படையில்தான் நாட்களில் சிலவற்றை ‘இருண்ட நாட்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த இருண்ட நாட்கள் தான் தீமை செய்யும் என கருதினர். இந்த தீமை செய்யும் நாட்களில் தான் போர்கள் நடத்தினர். 

மாயன்களின் எண்கள் இருபதின் அடிப்படையில் ஆனவை. ( தசமத்தை பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ) இந்த இருபதின் அடிப்படையிலேயே அவர்கள் சகலத்தையும் அளந்தனர். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல, கோள்களின் இடைவெளியைக் கூட அவர்கள் துல்லியமாக அளவிட்டனர். மேலும் பூமியின் பகுதிகளையும் அவர்கள் இருந்த பிரதேசத்தில் இருந்து அளவிட்டிருந்தனர்.

அதன்படி மாயன்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இருந்து இவ்வளவு தூரத்தில் - அன்றைய நாளில் இருந்து இவ்வளவு நாட்களக்குப் பிறகு - இவ்வாறு நடக்கும் என இயற்கையின் சீற்றத்தால் அமையும் துர்ச்சம்பவங்களைக் குறிப்பிட்டு இருந்தனர். இவற்றைத்தான் ‘மாயன்களின் பேரழிவுக்கான கணிப்புகள்’ என்று நாம் எடுத்துக்கொண்டு, அனுபவித்து வருகிறோம்.

மாயன்களின் கோள்களைப் பற்றிய கணிப்புகளின் ஒன்றுதான் பத்தாவது கிரகம் (10th Planet.) எனக் கருதப்படும் “நீபுரு“ ஆகும். கிறது. இந்தக் கோள் சூரியனில் இருந்து 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் மாயன்கள்.  “நீபுரு“ எனப் பத்தாவது கிரகத்திற்கு பெயரிப்பட்டது என்னவோ தற்காலத்தில் தான், ஆனாலும் பத்தாவதாக கிரகம் ஒன்று இருப்பதைச் சொன்னவர்கள் மாயன்கள்.  



இந்த 'நிபிரு' கோளம் நெருங்கிவந்து பூமியில் மோதும் என்றும், அதுதான் பூமியின் அழிவிற்கு காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள் மாயன்கள். ஆனால், அது எந்த நாள் என்பதுதான் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவேதான்.. மாயன் காலண்டரின் தொடர் கணிப்புக்கள் முடிவுற்ற நாளான ‘21 டிசம்பர் 2012’ தான் அந்த இறுதித்தீர்ப்பு நாள் என உலகம் கருதியது. 

Sunday, September 20, 2015

டூம்ஸ் தினம்

சென்ற வாரம் கூட நாம்  மாயன்கள் குறிப்புகளில் சொல்லப்பட்டு, உண்மையில் பலித்தவற்றை கண்டோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் அவர்கள் குறித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொன்றையும் வெளியிடுதல் சாத்தியமல்ல. இருப்பினும் சென்ற வாரக்குறிப்புக்கள் மிகவும் குறைந்தவையே என்பதால் மேலும் சிலவற்றை காண்போம்.

கரகட்டோ எரிமலை வெடிப்பு 26 ஆகஸ்டு 1883 ( 36ஆயிரம் பேர் பலி)

போர்ச்சுக்கீசிய நிலநடுக்கம் 26 ஜனவரி 1951 ( 30 ஆயிரம் உயிரிழப்பு )

26 டிசம்பர் 1932 ல் சீன நிலநடுக்கம் ( 70,000 பலி )

மீண்டும், சீன நிலநடுக்கம் 26 ஜுலை 1976 (2 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலி  )

ஷிபாவின் ஆழிப்பேரலையினால் அழிவு 1996 

ஈரானில் நிலநடுக்கம் 26 டிசம்பர் 2003 என நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் நிகழ்விடம் மற்றும நிகழ்வுகள் தான் மாயன் இனத்தவரின் குறிப்புகள் ஆகும். அதன் இழப்பின் மக்கள் தொகை நிகழ்ச்சி நடந்தபின் கிடைத்த தகவல்களே!

மாயன்கள் கணிப்புக்கள் எல்லாம் இயற்கை சார்ந்தவை. அவர்கள் காலண்டர்களின் கணிப்புத்துவங்கி கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரையிலான இயற்கையின் பெருஞ்சீற்றங்களை அவர்கள் துல்லியமாக சொல்லிவைத்துச் சென்றிருக்கின்றனர். எட்டுக்கும் மாயன்களுக்குமான தொடர்பெல்லாம் மிகச் சொற்பமானவையே. உண்மையில் அவர்கள் அதற்கும் பலமடங்கு கணித உயரத்தை எட்டியவர்கள்.

அவர்களின் காலண்டர் சுற்றுத்தான் கணக்கிடல்களில் மிகச் சரியானது. சூரியச் சுற்றை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்கள். அவர்கள் காலண்டர்கள் திரும்பத்திரும்ப நிகழும் நாட்களின் வரிசைக்கிரமம் இல்லை. தொடர்ந்து நிகழும் வெவ்வேறு அமைப்புகளுன் கூடிய நாட்களைக் கொண்டவை. இத்தகைய காலண்டர் அமைப்பு உலகில் வேறு எங்கிலும் இல்லை. ஏன் நம்மிடத்தே கூட இல்லை.

அவர்கள் எகிப்திய, கிரேக்க காலண்டர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். மாயன் காலண்டர்களில் விவசாய அடிப்படையிலான குறிப்புக்கள் இல்லை. எனினும், கிரகங்களின் ஈர்ப்பு மற்றும் சூரிய சுற்றுக்களினால் ஏற்படும் புவியியல் மாற்றங்களைச் சரியாகக் குறித்துள்ளனர். வழிபடுதலும் மாயன்களின் வழக்கம்; என்பதால் அமானுஷ்ய வடிவமுள்ள தெய்வச்செயல்பாடுகளைக் கொண்ட குறிப்புக்களும் அவர்கள் காலண்டரில் காணப்படுகின்றன.

நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சி பற்றியும், கோள்களின் சஞ்சாரம் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர் அதைக்கொண்டே, பூமியில் நடைபெறும் இயற்கைச்சீற்றங்களைக் கணித்து வைத்திருந்தனர். 

நவீன கணிதங்களின் கண்டுபிடுப்புகளும், தொலைநோக்கிகளும் இல்லாத காலத்திலேயே.. ஒவ்வொரு கோள்களுக்குமான இடைவெளி தூரம், சூரியனுக்கும் கோள்களுக்குமான இடைவெளி தூரம் போன்றவற்றை அவர்கள் சரியாகக் கணக்கிட்டிருப்பது ஆச்சரியம்தான். இந்த தூர வெளிக்கணக்குகள் 99.45% துல்லியமானவை என ‘நாசா’ உட்பட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோள்கள் மட்டுமின்றி சூரிய அமைப்பையும், அந்தச் சூரியனில் மத்தியில் காணப்படும் கரும்புள்ளிகள் பற்றிய முதற்குறிப்பை மாயன்களே உலகிற்குத் தெரியப்படுத்தினர். 

மாயன்களின் கணிப்புகள் தற்போதைய காலம் வரை சொன்னது சொன்னபடி நிறைவேறித்தான் வந்தது. அந்த மாயனின் காலண்டர் கணிப்புக்களில் மிக முக்கியமானதாக கருதப்பட்ட ‘21 டிசம்பர் 2012’ல் உலகம் அழிந்து போகும் என்ற விசயம்தான் பொய்த்துப்போனது.

அந்த 21 டிசம்பர் 2012 நாளை ‘டூம்ஸ் டே’ என அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ‘டூம்ஸ் டே’ என்பது மாயன்காலண்டர்களின் கணிப்புக்களின் குறிப்புக்கள் இறுதி பெற்ற நாள். எனவே, இந்த நாள் வரை மட்டுமே குறிப்புக்கள் நீள்வதால்.. இந்தநாளில் உலகில் நீட்சியும் முடிந்து போகும் என்று சிலர் கதைகட்டினார்கள். பலர்; அதை நம்பவே செய்தார்கள். 

ஆனால், உண்மையில் மாயன்கள் இந்த நாளை இறுதிநாள் என உறுதியாகக் குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டுவந்த கணிப்புக்களும், நிகழ்செய்திகளும் இந்த நாளில் முடிவடைந்திருந்தது. ஒருவேளை அவர்கள் வேறொரு கணிப்பை இதைத்தொடர்ந்து வெளியிடலாம் என்றிருந்திருந்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து இயற்கைச்சீற்றங்களைக் கண்டுகுறித்தவர்கள், அடுத்த குறிப்பை வெளியிட சற்று இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கலாம். அந்த இடைவெளியில் அவர்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது, அவர்கள் வெளியிட்டிருந்த அடுத்த பட்டியல் நமது கையில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆக, நமக்கு கிடைத்த தகவல்படி சென்ற 2012 டிசம்பர் 21 அன்று.. ‘டூம்ஸ் டே’ என்று அழைக்கப்படுகிற நாள் அன்று.. உலகம் அழியவில்லை. எனவே, அன்று உலகம் அழியும் என்று மாயன்கள் குறிப்பிட்டு இருக்கவில்லை.

Wednesday, September 9, 2015

நடக்கும் என்பார்..நடக்கும்!

உலகம் ஒரு அதிசயக்கூடம். மனிதனே அதிசயங்களை அறியவும், அனுபவிக்கவும், ஆரம்பித்துவைக்கவும் தெரிந்தவன். மனிதன் கண்டுணர்ந்த அதிசயங்களில், மனிதனே புரிந்த, படைத்த அதிசயங்களைப் பார்த்துத்தான் அதிகம் அதிசயப்பட்டான்.

அரும்பெரும் கண்டுபிடிப்புகள் அவனை அதிசயப்படுத்தியது.

பெருமைக்குரிய கட்டிடங்கள் அவனை அதிசயப்படுத்தியது.

இவற்றில் அதிசயப்பட்டு அவன் புருவங்கள் உயர்ந்தது என்றால், 
நாளை நடக்கப்போவதை நேற்றே கணித்துச்சொல்லும் மனித திறமையைப் பார்த்து, அவனது புருவங்கள் பிடறிவரை செல்கின்றன. அதனால்தான், உலகமெங்கும் ஜோதிடத்திற்கு அவ்வளவு ஆதரவு. 

எனவே, இப்படி கணிப்புகளும் அதிகம். இவற்றில் நமது நாடி ஜோதிடம் முதல், நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் வரை பல்வேறு விசயங்கள் காலம் கையகப்படுத்தி வைத்துள்ளது.

இவற்றில் மிகவும் தொன்மைவாய்ந்ததும், தலையாயதும், பல்வேறு கணிப்புக்கள் மெய்யாலுமே நடந்தது அதிசயப்படுத்தியதும் மாயன் காலண்டர். இந்த அதிசயங்கள்தான் கடந்த 2012ஆம் ஆண்டு உலகையே உலுக்கிக்கொண்டிருந்தது.

விஷயம் என்னவென்றால், மாயன்காலண்டர் துவங்கியகாலத்திலிருந்து வரிசைக்கிரமமாக, நடக்கும் என அறிவுறுத்திய பல்வேறு சம்பவங்கள், உள்ளபடியே நடந்து ஆச்சரியப்படுத்திவந்திருந்தது. எனவே மாயன்காலண்டரின் கணிப்புகளை உலகம் உற்றுப்பார்த்து வந்தது. இப்படி கணிப்புக்களைச் சொல்லிவந்த மாயன் காலண்டர் 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் தன் கணிப்புக்களையும், கணக்குகளையும் முடித்துக்கொள்ளுவது போல வடிவமைக்பட்டிருந்தது. அல்லது, மாயன்காலண்டர், மேற்சொன்ன தேதிவரைதான் தன் கணிப்புக்களை வெளியிட்டிருந்தது. 

எனவே, மாயன்காலண்டர் தன் கணிப்புக்களை முடித்துக்கொள்ளும் தேதி.. உலகம் தன் வாழ்நாளை முடித்துக்கொள்ளும் தேதியென ஓரே பேச்சாயிருந்தது. 

பல்வேறு அறிஞர்களும்(!) பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். உலகம் அழியும் - அழியாது என்ற பட்டிமன்றம் பட்டிதொட்டியெங்கும் நடைபெற்றது. மதம் சார்ந்த இயக்கங்களும் தங்கள் பங்கிற்கு மக்களிடையே பீதியைப் பரப்பின. இதெற்கெல்லாம் உச்சக்கட்டமாக ‘2012’ என்ன பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகி உலகம் அழியும் காட்சிகளை, கடைவிரித்து பெருமளவில் கல்லாக்கட்டியது. 

இவ்வளவு பரபரப்புக்கும் காரணம் என்வென்றால், நாம் ஏற்கெனவெ கூறியது போல், பல்வேறு மாயன்காலண்டரின் கணிப்புக்கள் உண்மையாக நடந்தேறியதுதான். அவற்றின் பட்டியல் மிக நீளமானது. கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகக் கருதப்படும் மாயன் நாகரீக காலண்டரின் வரலாற்றில் நிகழ்ந்ததாக உறுதிசெய்யப்பட்ட கணிப்புகள் கிருஸ்துவின் காலத்திலிருந்தே துவங்குகிறது. 

இயற்கைச்சீற்றங்களை துல்லியமாக கணித்துச் சொல்லிய அவற்றையெல்லாம் பட்டியலிட்டு ஆராய்ந்தால், நம் காலம் முழுக்க ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கும். ஒரு காபி குடிக்கும் அவகாசம்தான் நம்மிடம் இருக்கிறது என்பதால் சில மட்டும் இங்கே..

1. கி.பி. 1700 ஜனவரி 26, வடஅமெரிக்க பூகம்பம். இந்த நிகழ்விற்குப்பிறகுதான் மாயன்காலண்டரின் கணிப்புகள் பக்கம் உலகம் கவனம் திருப்பியது.

2. 1926 ஜுன் 26, ரோடெஸ் பூகம்பம்.

3. 1963 ஜுலை 26, யுகோஸ்லோவாக்கியவின் பெரும்பாண்மையான மக்களைப் பலிகொண்ட நிலநடுக்கம்.

4. 2003 மே மாதமும், ஜுலை மாதமும், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், அதே 26ம் தேதியில் நடைபெற்று நாமே கண்டுணர்ந்து, கண்அயர்ந்த ஜப்பானிய நிலநடுக்கம்.

5. இவ்வளவு ஏன்? நமது குஜராத்தில் 2001 ஜனவரி 26ல் உலுக்கிய பூகம்பம் என எல்லாவற்றைப் பற்றிய குறிப்பினையும் குறிப்பிட்டிருந்தனர் மாயன்கள். 
இதையெல்லாம் கணித்தவர்கள் மாயன்கள் என்பதைத்தவிரவும், இதில் இன்னொரு ஒற்றுமையைக் கவனித்திருப்பீர்கள். ஆம். எல்லா சம்பவங்களின் தேதியும் 26. அவற்றின் கூட்டுத்தொகை 8. 

அதனால்தான், உலகமெங்கும் 13ம் நம்பரை ஆகாத எண்ணாக கொண்டாடிக் கொண்டிருக்க, நாம் மட்டும் எட்டை… நட்டக்கணக்கில் வைத்திருக்கிறோமோ என்னவோ? ( யப்பா.. நமக்கும் - மாயன்களுக்கும் லிங்க் கொண்டுவர எப்டியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு! )

Wednesday, September 2, 2015

மாயா மச்சிந்ரா..

தமிழர், தமிழின் பெருமையை, தொன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். ஆதிதொட்டு மனிதகுலத்தின் தனிச்சிறப்புகளில் ஆதிக்கம் செலுத்திய மேன்மையை சொல்லத்தான் வேண்டும்.

ஆனால், அதற்காக எல்லாமே நாங்கதான் என ‘புருடா’ விடத்தேவையில்லை.
முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். 

உலகத்தில் முதல் முதலில் ‘பாஸ்வேர்டை’ கண்டுபிடித்தது தமிழன் தான் என்றிருந்தது அந்த செய்தி. அதற்கு உதாரணமாக ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதையில் வரும் ‘அன்டா காகசம், அபு காகுகும் திறந்திடு சீசே’ என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

எனக்கு.. ‘அடேய்…!’ என்றிருந்தது.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது பாரசீகத்தின் கதை. அந்தக் கதையில் எம்.ஜி.ஆர். நடித்த தமிழ்ப்படம் வந்தது என்பதற்காக.. அதில் வரும் ‘பாஸ்வேர்டு’ தமிழரின் கண்டுபிடிப்பு ஆகிவிடாது.

தமிழன் முதல் பாஸ்வேர்டை கண்டுபிடித்து இருக்கலாம். அதை நீங்கள் சொல்ல வருவதானால்.. உண்மையான தகவலின் அடிப்படையில் விளக்குங்கள். அல்லது இதுபோன்ற கண்டுபிடிப்புக்களை நீங்கள் கண்டுபிடிக்காமல் இருங்கள். 

ஏனெனில், தமிழனை ‘எப்படியாவது’ இவன்தான் ஆதிகாலத்தவன் என்பதைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவனது இயல்பான, இயற்கையோடு இணைந்த பண்பாட்டை உணர்ந்தாலே, உலகம் தெரிந்து கொண்டுவிடும் இவன்தான் மூத்தவன் என்று.

இப்போது, நம்மைப் போலும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான, மாயன் இனத்தவரையும், சமீபத்தில் உலகை உலுக்கிய அவர்களது காலண்டரையும் காணலாம்.

கொலம்பஸ், இந்தியாவிற்கு கடல்வழிதேடி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அங்கிருந்தவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார். அந்த செவ்விந்திய இனத்தை அடியாடு அழித்துவிட்டு அமெரிக்காவை ‘ஆக்குபை’ ஆக்கினார்கள் அய்ரோப்பியர்கள். 

அய்ரோப்பியர்கள் காலடித்தடமெல்லாம் இயற்கை அழிந்தது. இயற்கையோடு சேர்ந்த மனித வாழ்வும் அழிந்தது. அவ்வாறு அழிந்த அளவிற்கடங்கா ஆதியினத்துள் ஒன்றுதான் மாயன்.

மாயன்கள், வரலாற்றில் கனிந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள்.

எகிப்தியர்களுக்கும் முன்பே, பிரமிடு அமைப்புடன் கூடிய கட்டிடக்கலையில் தேறியவர்கள்.

கணிதத்தில் வல்லவர்கள்.

கட்டமைக்கப்பட்ட காலண்டர்களைக் கண்டறிந்தவர்கள். என ஏகப்பட்ட சிறப்புக்கள் கொண்டவர்கள் மாயன் இனத்தவர்கள். இவர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய சம்மந்தங்கள் உண்டு.

சீனர்களும், தமிழர்களும் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர் என்று சொன்னால்.. மயான் இனத்தவர்களே தமிழர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது தகவல்கள்.

-- இடையில் எனக்கு ஒரு டவுட்டு – அதாவது பண்டைய கால வரலாற்றை படிக்கையில் -- சிந்து சமவெளி நாகரீகம், மாயன் நாகரீகம் என்று படிக்கிறோம். அந்த நாகரீகங்களின் இயல்புதன்மைக்கு நேர் எதிரில் இருக்கும் - இன்றைய செயற்கையான இயற்கையை கெடுக்கும் நடைமுறைகளையும் நாகரீகம் என்கிறோம். அப்படி என்றால் .. உண்மையில் எது நாகரீகம்? – தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

விசயத்திற்கு வருவோம். மாயன்கள் இன்றைய அமெரிக்கா - மெக்சிகொவிலிருக்கும் - கோசுமெல் தீவில் வசித்தவர்கள். அவர்களது நாகரீகத்தின் சான்றுகள் இங்கேதான் காணக்கிடைக்கிறது.
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறி வாழ்ந்ததை உறுதி செய்கிறார்.

மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.

அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hygo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.

அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் திரு. மஞ்சை வசந்தன் தனது Blog-ல் நமக்கு தெரிவிக்கிறார். அவருக்கு நன்றிகள்.

இது போக இன்னும் சில தகவல்களும் மாயன் இனத்தவரைப்பற்றி நமக்கு தெரிவிக்கிறது. மாயன் இனத்தவர்களின் படைப்புகளில் உலகினை அதிக வியப்புக்குள்ளாக்குவது அவர்களது கட்டிடக்கலைதான்.

அவர்களின் பிரமிடு போன்ற கட்டிடங்கள் பிரம்மிக்கத்தக்கவை. உச்சியில் ஏற ஏற தலைகீழாக நிற்பது போலவும், வானத்தில் தொங்குவது போலவும் ஒரு பிரம்மை என்றபடுகிறதாம். வானக்கிரகங்களின் சக்திகள் ஒன்றினைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தக் கட்டிடங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு எப்படி இவ்வாறு கட்டினார்கள் என்பது உள்ளபடியே ஆச்சரியம்தான்.



இதற்கெல்லாம் மேலாக ஆச்சரியத்தை தரக்கூடியது அவர்களின் காலண்டர்கள். இந்த மாயன் காலண்டரின் விசேசம் என்னவென்றால் வெறும் நாட்கணக்கை மட்டும் அவர்கள் குறிப்பிடாமல் அவற்றில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கணிப்பையும் வெளியிட்டிருந்ததாகவும் அவையெல்லாம் பெரும்பாலும் அப்படியே நடந்து வியப்பளிக்கின்றன.