Saturday, August 8, 2015

சீனக்காலண்டர் 3

சீனக்காலண்டரின் ஆரம்பகால காலண்டர் வரலாறு தெளிவாக இல்லை. தெளிவாக இல்லேண்னாத்தானே அது வரலாறு. தொன்மை மிகுந்த இடங்களில் இதுதான் தொல்லை. ஒரு சமுதாயத்தின் பண்பாடு, இலக்கியம், தொல்லியல் தெரிவுகள் போற்றவற்றில் அறிந்த செய்திகளில் உள்ள உண்மையின் அடிப்படையில் தான் அவர்களின் வரலாற்றை அறிய முடியும். 

ஒரு பண்டைய சமுதாயம் விட்டுச்செல்லும் தடங்களைக் கொண்டு அவர்களைப் பற்றி முழுவதும்.. இதுதான், இப்படித்தான் என்று அரிதியிட்டுக் கூறுவது கடினம். ஒரு யூகமான கணிப்புகளைத்தான் தெரிவிக்க முடியும். இந்தக் கணிப்புகளை மேற்கொள்பவர்களின் மனமுரண்களும் அவற்றால் எழும் வரலாற்று திரிபுகளும் பற்றி நாம் ஏற்கெனவே ‘வடிவேலு காமெடி’ மூலம் விவாதித்து இருக்கிறோம்.

இம்மாதிரி காரணங்களால்தான் சீன வருடத்தை எண்களிட்டு எத்தனையாவது ஆண்டு என்று கி.பி.2015ம் ஆண்டை 1937ம் சகஆண்டு என்றும், 2046ம் திருவள்ளுவர் ஆண்டு என்றும் சொல்வது போல் அரிதியிட்டு சொல்லமுடியவில்லை. அப்பறம், சீனக்காலண்டரை ஏன் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொகுத்தார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. 

இருப்பினும், சீனக்காலண்டரின் அடிப்படையை வைத்து நோக்கும் போது, அடிப்படையில் ஆண்டுகளை (நம்மைப்போல்) 60 ஆண்டுப் பெரும் சுற்றாக கணக்கிட்டனர். அந்த அறுபது ஆண்டுகளையும் விவசாயம் சார்ந்த சுழற்சிகாக 5 உட்பிரிவுகளாகப்பிரித்து பன்னிரண்டு பன்னிரண்டு ஆண்டுகளாக தொகுத்தனர் என்று யூகிக்கலாம் எனச் சில சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கி.மு. முதலாம் நூற்றாண்டு முதல் கின் வம்ச காலம் முதல் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு மிங் வம்சத்தின் காலம் வரை சுவர் கட்டுவதிலேயே சீனவரலாறு நிலைக்கிறது. கி.மு.ஏழாம் நூற்றாண்டிலேயே கட்டிடங்கலையில் சீனர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். விவசாயத்தில் பெரும் பொருளாதாரம் கண்ட சீனா, அதைக் கொள்ளையடிக்க வந்தவர்களிடமிருந்து தங்களைக் காக்கவே தன் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியைச் செலவளித்தது. சுவர் எழுந்த கதையும் அதுதான்.

பாரம்பரிய சீனக்காலண்டரை ஒட்டி சீனர்கள் கொண்டாடும் விழாக்கள் மொத்தம் ஒன்பது. இவற்றில் ஏழு திருவிழாக்கள் சந்திர சுற்றின் அடிப்படையிலும், இரண்டு திருவிழாக்கள் சூரியச்சுற்றின் அடிப்படையிலும் கொண்டாடுகிறார்கள். அவையாவன..

1. சீனப்புத்தாண்டு - சூரிய காலண்டரின் அடிப்படை.
2. விளக்கு திருநாள். ( ஐ.. தீபாவளி! ) – சந்திரன்
3. படகு திருவிழா ( ஓணமோ? ) – சந்திரன்
4. க்விச்சி திருவிழா ( காதலர் தினமாமே? ) – சந்திரன்
5. நீத்தார் நாள் ( மஹாளய அம்மாவாசை, கல்லரைத்திருநாள் ) – சந்திரன்
6. நிலவுத்திருவிழா ( சித்ரா பௌர்ணமி ) – சந்திரன்
7. இரட்டை ஒன்பதாவது திருவிழா இது மலர்கள் மற்றும் இயற்கையை வணங்கும் திருவிழா ஆகும். – சந்திரன்
8. க்சியா யுவான் திருவிழா. இது நீர்கடவுளை வேண்டும் திருவிழா ஆகும். (ஆடிப்பெருக்கு)
9. குளிர் காலத்திருவிழா. இவ்விழாவில் சீனர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடி டாங் யோன் என்னும் பண்டத்தை உண்பார்கள். இதை சூரியனின் சலன சாய்வு திருவிழா என்றும் சொல்கிறார்கள். நமது ‘மகரசங்கராந்திக்கு’ சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படுகிறது. (இந்தத் தகவலில் ‘டாங் யோன’; என்பது எத்தகைய திண்பண்டம் என்பது தெரியவில்லை. ஒருவேளை நம்ம பொங்கலைப் போன்றதாக இருக்குமோ?. விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்) – சூரியன்.

இந்த பண்டிகைப் பட்டியலின் படியும் நம்மை சீனர்கள் நம் பண்பாட்டை எவ்வளவு ஒட்டி வருகிறார்கள் என்பது தெரிகிறதல்லவா?

சீனக்காலண்டர் அடிப்படையிலானன ஜோதிடத்தில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. அது பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கணிக்கும் அகில உலக பேமஸ் சீன ஜோதிடம். இந்தப்;பட்டியலின் படி தாயின் வயது மற்றும் கருவுற்ற ஆங்கில மாதத்தினைக் கொண்டு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் அறியலாம். இந்தப்பட்டியலை ஏற்கெனவே ‘மகாகவி’ மாத இதழில் வெளியிட்ட போது, தோழி ஒருத்தி.. இந்தக் கணிப்பு சரியாக இருப்பதாகவும்.. ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறினார். ஒருவேளை உங்களுக்கு சரியாக இல்லை எனில் சீன தேசத்தில் சென்று பிள்ளை பெற்றுப் பாருங்கள்! 

No comments:

Post a Comment