Friday, May 22, 2015

அஷ்டமி, நவமி… கஷ்டமி?

சிவபெருமானின் கல்யாணத்திற்கு உலகமே திரண்டு வடதிசை சென்ற வேளையில் சமநிலை காக்கும் பொருட்டு தென்திசை ஏகிய பெருமான் 'குறுமுனி அகத்தியர்'. இவர் சிவபெருமானிடமே தமிழ் கற்றதாகவும், தான் கற்ற தமிழை, தமிழகத்தில் ஸ்தாபித்ததாகவும் சொல்லப்படுகிறது. இன்று கர்நாடகா தரமறுக்கும் காவிரியை தன் கமண்டலத்தில் அடக்கிவைத்திருந்து, திறந்து விட்டவர் எனவும் அவருக்கு புகழுண்டு. 

அகத்தியரே இன்றுள ஜோதிட சாஸ்திரங்களுக்கு ஆரம்ப வித்து. எனவே, ஜோதிட பழக்க வழக்கங்களின் ஆரம்பக் காலம், அகத்தியர் வாழ்ந்த காலமே. அகத்தியர் வாழ்ந்த காலத்தைப்பற்றிய பல்வேறு யூகங்களும் தகவல்களும் இருந்தாலும், இவர் எழுதிய நூட்கள், அவர் பயன்படுத்திய எழுத்துக்களின் வகைகள், மற்றும் எழுதிய பாணியின் அடிப்படையில் கி.பி பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக உறுதி செய்யப்படுகிறது. இவர் எழுதிய நாடி சாஸ்திரம், சித்த மருத்துவம் உள்ளிட்ட நூட்கள் உறுதியாகக்; கிடைத்ததால், ஜோதிட கால ஆரம்பமும் பதினோராம் நூற்றாண்டாகக் கொள்வோம்.

கி.பி. பதினோராம் நூற்றாண்டென்பது இன்றிலிருந்து 900 வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால், தமிழர்கள் அதனினும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள் என நிரூபிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன. 

‘அகத்தியம்’ எனும் இலக்கண நூலையும் அகத்தியர் இயற்றி உள்ளார். பொதுவாக யாவரும் சொல்வது போல், இலக்கணத்திற்கு முன்பே இலக்கியம் இருந்திருக்க வேண்டும். இலக்கியத்திற்கு முன்பே பல்லாண்டுகள் பண்பட்டமொழி இருந்திருக்க வேண்டும். பண்பட்ட மொழி தோன்றுவதற்று முன்பே முறையான பழக்க வழக்கங்களுக்கு உட்பட்ட மனிதன் இருந்திருக்க வேண்டும். முறையான பழக்கவழக்கங்களுக்கும் உட்பட்ட மனிதன் மொழியறிவைக் கைக்கொள்ளும் போதே, நாட்களைப் பற்றிய குறிப்பையும் கண்டிப்பாக வைத்திருப்பான். ஏனெனில், சுற்றிலும் நடப்பவற்றை உற்றுக்கவனித்து பெயரிடவே மொழி பிறக்கிறது. கவனிக்கப்படுவதில் முதலிடம் வகிப்பது இரவும் பகலுமாகத்தானே இருக்கும்?

900 ஆண்டுகளுக்கு முந்தைய ஜோதிடம் சொல்வதுதான் அஷ்டமியும், நவமியும் ஆகாத நாட்கள் என்பதும். இந்த நாட்களில் செய்யும் காரியங்கள் நன் முடிவை தராது என்பதும்.

இந்த ஜோதிட வாதத்தை முன்வைப்பவர்கள், அஷ்டமியில் பிறந்த கிருஷ்ணனையும், நவமியில் பிறந்த ராமனையும் துணைக்கிழுகிறார்கள். பார்! அஷ்டமியிலும் நவமியிலும் பிறந்ததனால் கடவுளேயானாலும் அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டார்கள். எனவே, அஷ்டமியிலும் நவமியிலும் எதையும் செய்யாதே என்கிறார்கள். 

சரி, அஷ்டமி, நவமியில் எதுமே செய்யக்கூடாதா? என்றால்.. செய்யலாம். அழித்தல் சம்மந்தப்பட்ட காரியங்களைச் செய்யலாம் என்கிறார்கள். அதாவது, கட்டிடம் இடித்தல், வேண்டாதவன வற்றில் தீ வைத்தல் முதலானவை.
இந்த நம்பிக்கையெல்லாம் அறிவுடைமையாகாது என்பது இந்தப் பக்க வாதம். நாளின் வரிசை உள்ளது. இந்த நாள் வரிசைக்கு பெயரிடுகிறார்கள். இந்த வரிசைப் பெயர்களின் அடிப்படையில் இது நல்லது, இது கெட்டது என எப்படி சொல்ல முடியும். எல்லாம் சுத்தப் பொய். 

மனித வாழ்வின் சாரம் என்பது நகர்ந்து கொண்டிருத்தல். இந்த நகர்ந்து கொண்டிருத்தலை ‘நம்பிக்கையும், பயமுமே’ ஆக்ஸிலேட்டராகவும், பிரேக்காகவும் இருந்து செயல்படுத்துகிறது. இதை புரிந்து கொண்ட சிலரே.. ஜோதிடம் என்னும் பெயரில் நம்பிக்கையையும், பயத்தையும் விற்று தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்கிறார்கள். எனவே, இத்தகு பயமுறுத்தலை புறந்தள்ளுவோம். அஷ்டமி, நவமி எல்லாம் எங்களுக்கு இஷ்டமி தான் என்கிறார்கள். 

இதில் நாம் எதை  கொள்வது, எதைத் தள்ளுவது என்பது அவரவர் நம்பிக்கையும், பயத்தையும் பொறுத்தது என்று சொல்லிவிட முடியாதல்லவா? எது சரிஎன முடிவுக்கு வர முயல்வோம்.

கிருஷ்ணரும் ராமரும் அஷ்டமி நவமியில் பிறந்ததனால் கடவுளேயானாலும் கஷ்டப்பட்டனர் என்பதை, அவர்கள் அஷ்டமி, நவமியில் பிறந்து கஷ்டப்பட்டதனால்தான் ‘கடவுளேயானார்கள்’ எனக் கொள்ளலாம் அல்லவா? அதற்காக அஷ்டமி, நவமி கஷ்டப்படுத்தும் என்பதில்லை. அது அவரவர் வாழ் சூழ்நிலை. 

- ‘நல்லோர் செய்யாததை நாள் செய்யும்’ என்பார்கள். அதாவது ஒரு காரியத்தை துவங்கக்கூடிய நாள் அறிந்து செய்தால்தான் எடுத்தகாரியம் வெற்றியாகும். மாறாகத் துவங்கப்பட்ட காரியம் வேறாகத்தான் முடியும். வள்ளுவரும் “ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்கருதி இடத்தாற் செயின்” என்று மேற் சொன்னதையே அழுத்திச் சொல்கிறார். எனவே, காரியங்களைச் செய்வதிலும் துவங்குவதிலும் நாளிற்கு முக்கிய இடம் உண்டு. இதை யாராலும் மறுக்கவியலாது.

- இதில் ‘நாள்’ என்ற சொல்லின் மீதான புரிதலைத்தான் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். வள்ளுவரும், பழமொழியும் சொல்லும் நாள் என்பது, தினத்தின் வரிசை பெயர் கொண்ட நாள் அல்ல. அந்த ‘நாள்’ எந்த தன்மை கொண்டது என்பதைக் குறிப்பதாகும். 

அதாவது, ‘மழைநாளில் உப்புவிற்கப் போககூடாது, காற்றடிக்கும் நாளில் மாவு விற்கக் கூடாது’  என்று சொல்வார்கள். இதில் ‘நாள்’ என்பது அன்று மழைநாள் அல்லது காற்றடிக்கும் நாள் என்பதாகும். அது இல்லாமல், அன்றைக்கு திங்கட்கிழமை என்றோ.. மாதத்தில் முதல்நாள் என்பதோ அடையாளம் இல்லை. அது எந்த நாளாகவும் இருக்கலாம் ஆனால் அது ‘மழை நாள்’ அல்லது ‘காற்றடிக்கும் நாள்’. 

இது மாதிரி நாள் என்பதற்கு பல்வேறு விதமான புரிதல்கள் உள்ளன. உதாரணமாக, நமக்கு ஞாயிற்றுக்கிழமை, ‘விடுமுறை நாள்’. அந்த நாளில் எந்த அலுவலகம் சாhர்ந்த வேலையோ, அரசு சார்ந்த வேலையோ நாம் செய்வதில்லை. செய்ய நினைத்தாலும் நடப்பதற்கில்லை. 

ஒரு பத்திரம் முடிக்க இருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு மே-24ம் தேதி நல்ல நாளாக படுகிறது என்று சொன்னால், உடனே அருகில் இருப்பவர் ‘வேணாங்க அன்னைக்கு, ஞாயித்துக்கிழம. வேலைக்கு ஆகாது’ என்று சொல்வார். இதுவே பின்நாளில் புழக்கத்தில் ‘ஞாயித்துக்கிழம, வேலைக்கு ஆகாது’ என்று மட்டும் பழகிப்போகும். இந்த பழக்கம் மெல்ல வழக்கமாகி ஞாயிற்றுக்கிழமை மேல் ‘தீட்டை’ எற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமையில் பிறந்த அவதாரம் பற்றிய கதை வரவும் வாய்ப்பிருக்கிறது. (விடுமுறை நாளை கொண்டாட்ட நாளாக்கி, தன் பிழைப்பைப் பெருக்கும் இம்மாதிரி அரசியல், பற்றி பேசினால்…. வேண்டாம்!) ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ம…….ர்களுக்கு, அப்போதைய காலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற வழக்கம் இல்லாமல் போய்விட்டாலும் கூட, அன்றிருக்கும் ‘ஃபார்ச்சூன் அட்வைசர்’ ஞாயிற்றுக்கிழமை நல்லநாள் இல்லை என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது.

இதே மாதிரிதான், அஷ்டமியும் நவமியும் முன்னோர்களின் ஓய்வு தினங்களாக இருந்திருக்கலாம். அந்நாளில் எக்காரியமும் செய்ய முனையாமல் இருந்திருக்கலாம். நமது காலத்தில் தீட்டு தினங்கள் என கதைக்கப்படுகின்றன.