Thursday, June 4, 2015

நாளில் நல்ல நாள்

சிறு பிள்ளைகளாய் இருந்த காலத்தில், எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் புதுக் காலண்டர் வாங்கியவுடன் முதலில் புரட்டிப் பார்ப்பது என்று ‘தீபாவளி’ வரும் என்றுதான். காலண்டர் வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து அந்த வருட தீபாவளிக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. 

கொண்டாட நினைத்தால், அதற்கான சூழல் வாய்த்திருந்தால் மனிதனுக்கு எல்லா நாட்களும் தீபாவளிதான். பண்டிகைதான். இருந்தாலும் கிருஸ்மஸில் கேக் வெட்டி, ரம்ஜானில் பிரியாணி தின்று, தீபாவளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது நம் உணர்வில் ஊறிய வழக்கங்கள்.

(Photo: K.C. Sowmish)

அதனால்தான், தீபாவளி, பொங்கல் போன்ற விசேச நாட்களை நினைத்தாலே மனம் குதூகலிக்கிறது. தீபாவளி என்றால் புது உடுப்பு துணிமணிகள் வரும், பலகாரங்கள் வரும், பட்டாசு வெடிக்கலாம் என்றெல்லம் நினைத்தாலே இனிக்கும் விசயங்கள் ஏராளம். இம் மகிழ்ச்சி குழந்தைகள் மட்டும் தான் என்பதில்லை.. பொதுவாக மனித பிறப்பே திருநாள் நோக்கித்தான் தவமிருக்கின்றன. வாழ்வின் மகிழ்ச்சிப் புதையல்கள் இத்தகு நாட்களில் திறந்து வைக்கப்படுகின்ற காரணத்தால் பண்டிகை தினங்களை நோக்கித்தான் வருடத்தின் மீதமுள்ள அத்தனை நாட்களுமே நகர்கின்றது. 

விழா நாட்கள் புறப்பொருள் சம்மந்தப்பட்ட மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, அக மன உற்சாகத்தின் தூண்டுகோளாய் அமைந்து மனிதன் மீண்டும் மீண்டும் வாழ்நாள் பாடுகளை சோர்வுறாமல் சந்திப்பதற்கு அவனைத் தயார் படுத்துகிறது. உற்சாகமளிக்கிறது. சோகங்களை முறிக்கிறது. அவனது மனஉளைச்சலுக்கு மருந்தாக அமைந்து ஓட வைக்கிறது. 

‘நல்லநாளும் பொழுதுமா இப்படியா உட்காந்திருப்ப’ என்ற ஒரு சொல் போதாதா.. உன்னை சுற்ற உள்ள உலகம் நீ எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறது என உனக்கு உணர்த்துவதற்கு? இந்த சொல்லையும் ஒரு நல்ல நாளில் சொன்னால் தானே ஆயிற்று? எல்லா நாளிலும் சொல்ல முடியுமா? சொன்னாலும் அர்த்தப்படுமா?

எனவேதான் இம்மாதிரியான கொண்டாட்டங்களை கொண்டுவரும் தினங்கள், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. பூமியோ, கிரகங்களோ, நட்சத்திரங்களோ இன்னுமுள்ள இயற்கைக் காரணிகளோ விழா நாட்களை உருவாக்கவில்லை. நாட்களுக்கு குணம் உண்டு. இருந்தாலும், எந்த நாளும் இப்படிக் கொண்டாட வேண்டும் எனும் நிர்பந்தத்தைக் கொண்டு வரவில்லை. அப்படிக் கொண்டாடப்படா விட்டாலும் அந்த நாளின் இயற்கையில் யாதொரு பங்கமுமிராது. இருந்தாலும், மனிதன் தன் ஆழ் மன தேவைகளுக்கு ஏற்ப, இன்ன நாளில் இன்ன விழா என மனிதனே உருவாக்கி, காலச்சூழலுக்கேற்ப, கிடைக்கும் சாதனங்களுக்கெற்ப விழாக்களின் கொண்டாட்ட முறையையும் வகைப்படுத்திக் கொண்டான். 

எனவேதான், விழா நாட்கள் இனம் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து, மனிதன் சார்ந்த எல்லாம் சார்ந்து வருகிறது. பின்னிருந்து நோக்கின், விழாக்கள்... மனிதனை, அவனது நிலத்தை, அவனது மொழியை, அவனது இனத்தை, அவனது கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன. மனிதனை, அவன் கொண்டாடும் விழாக்கள், அவன் இன்னார் என்று அடையாளப்படுத்துகின்றன. 

வருடப்பிறப்பும் கூட அப்படித்தான்.. ஆழ்ந்த அகன்ற மனித கலாச்சாரத்தை உரக்கச் சொல்பவை. கலாச்சார மாற்றத்தையும், திரிவையும் கூட சொல்லிச் செல்பவை.

எந்த ஒரு மனிதக் கலாச்சாரமும் மாற்றத்தையும், பிறக்கலாச்சாரக் கலப்பையும், சில சமயங்களில் அழிவையும் சந்திக்காமல் இல்லை. தொன்மை மிக்க தமிழினமும் அப்படித்தான் பல்வேறு சூழ்நிலைகளில், கால, தேச, வர்த்தமான பகிர்வுகளில் பல்வேறு சிதைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு வந்துள்ளது.

காலத்தால் இணைந்த கலாச்சாரங்கள் ஒரே நாளின் கொண்டாடத்தை வேறு வேறு பெயர்களின் கூட கொண்டாடக்கூடும். உதாரணத்திற்கு தமிழனின் திருநாளாக் கொண்டாட்ப்படும் பொங்கல் தினத்தை, மகரசங்கராந்தியாகக் வடபுலத்தார் கொண்டாடி வருகின்றனர். 

தன் உழவின் பயனை ஆதவனின் கொடையாகக் கருதி அவனுக்கு நன்றி நவிலும் நாளாக நம்மால் கருதப்படும் பொங்கலுக்கும் - மகரசங்கராந்திக்கும் ஒரே நாளில் வருகிறது என்பதைத்தவிர என்ன சம்மந்தமிருக்க முடியும்?