Thursday, May 14, 2015

நீளும் நாட்கணக்கு!



காற்றிற்கும், புயலுக்கும் கூட பெயரிடுவது ‘தானே!’ இப்போது பேஷன். நாளிற்கும் பெயருண்டு நமது காலண்டரில். 

புவியின் சுழற்சியுடன் நாட்கள் நகர்கின்றன. நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்கின்றன. சென்ற நாட்கள் ஒரு போதும் மீள்வதில்லை. இருந்த போதிலும் வரிசையாக நகரும் நாட்களை ஒரு சுற்றாகச் செய்வது காலண்டர்தான். நாம் நாட்களை அடையாளப்படுத்தி, அவற்றிற்கு இன்ன நாள், இன்ன தேதி என பெயரிட்டு மீண்டும் மீண்டும் வரச்செய்து பயன்படுத்துவதால்தான் மனித வாழ்விற்கு அர்த்தம் வருகிறது. பிறந்தநாள் முதல் இறந்தநாள் வரை குறிப்பிடப்பட்ட எல்லா முக்கிய நாட்களும் கொண்டாட்டங்களையும், சோகங்களையும் சுமந்து சுழன்று மனித வாழ்வைப் பொருளுடைய தாக்குகிறது. நாள் என்ற ஒன்றிற்கு மனிதன் தேதியென்ற அடையாளம் இடாவிட்டால்.. மனித வாழ்வென்பது மலராமல் போயிருக்கும். திசையற்றுப் போயிருக்கும். 

அட..ட..ட..டா தேதியின் எண்கள் சுற்றுப்பாதையில் வருவதுபோல், நாமும் எத்தனை தடவைதான் காலண்டரின் சிறப்புக்களை வியந்தாலும் வியந்து கொண்டே இருப்போம் போல.

- மாதத்திற்கு முப்பது நாட்கள் என கண்டோம். சில மாதங்களுக்கு முப்பத்தியோரு நாளும், பிப்ரவரி மாதத்திற்கு இருபத்தியெட்டு நாளும், அது ‘லீப் இயர்’ என்றால் இருபத்தியொன்பது நாளும் வரிசை எண்களிட்டு ஆங்கில காலண்டரில் வருகிறது. நமது நடைமுறையிலிருக்கும் தமிழ்க்காலண்டரின் நாட்களுக்கும் நம்பர்தான் பெயராக இடப்பட்டு அழைக்கப்படுகிறது. இவையும் சற்றேரக்குறைந்த சராசரியாக முப்பது நாட்களைக் கொண்டவை.

ஆனால், பழம் வழக்கத்திலிருந்த நிலவுசார்ந்த தமிழ்க்காலண்டரில் பதினைந்து நாட்கள் என்பது ஒரு வரிசைக் கணக்கு. பதினைந்து நாட்கள் வரைதான் பெயர். அம்மாவசையிலிருந்து பௌர்ணமிவரை ஒரு வரிசை. பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை வரை ஒரு வரிசை. இரண்டு வரிசைகளும் சேர்ந்தது ஒரு மாதம். இந்த இருவரிசைக் கணக்கெடுப்பு முறையென்பது நாம் ஆரிய வருகைக்கான காலம் என்று குறிப்பிடப்படும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட காலங்களுக்கு முன்னதாகவே இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும், இம்முறையில் நாட்களுக்கான பெயர்கள் வடமொழியில் தான் இருக்கிறது.

நமது உசிலம்பட்டியில் பிறந்த ஒரு குழந்தைக்கு ‘சந்தரபோஸ்’ எனப் பெயரிடப்படுமானால், அவன் வங்காளி ஆகிவிடமாட்டான் அல்லவா? தமிழனுக்கு எப்படி வங்காளப்பெயர் சாத்தியமோ, அதுபோல் தமிழ்நாட்களின் முறைகளுக்கும் வடமொழிப்பெயர் சாத்தியம். எனவே, ஒரு மொழியில் பெயரிடப் பட்டிருப்பதாலேயே முறையாக ஆய்விடாமல் எதையும் இது இவர்களின் சொத்து என அரிதியிட்டு கூறிவிட முடியாது.

பெயர் - அம்மாவாசையிலிருந்து பௌர்ணமி நோக்கிச்செல்லும் நாள் வரிசைக்கு ‘சுக்ல பட்சம்’ என்று பெயர். பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை நோக்கிச் செல்வதற்கு ‘கிருஷ்ண பட்சம்’ என்று பெயர். இரண்டு பட்சத்திற்கும் குறைந்த பட்சம் பதினைந்து நாட்கள். அதிக பட்சமும் அதேதான்.

பட்சத்தின் முதல் நாள் - பிரதமை
இரண்டாம் நாள் - துவிதியை
மூன்றாம் நாள் - திரிதியை
நான்காம் நாள் - சதுர்த்தி
ஐந்தாம் நாள் - பஞ்சமி
ஆறாம் நாள் - சஷ்டி
ஏழாம் நாள் - சப்தமி
எட்டாம் நாள் - அஷ்டமி
ஒன்பதாம் நாள் - நவமி
பத்தாம் நாள் - தசமி
பதினொன்று - ஏகாதசி
பனிரெண்டு – துவாதசி
பதின்மூன்று - திரயோதசி
பதினான்கு – சதுர்த்தசி
பதினைன்நது – பௌர்ணமி (அ) அம்மாவாசை

இவை நாட்களின் பெயர்கள். வடமொழியில் வரிசை எண்கள். இவை அன்றாட வாழ்வின் செயல்பாட்டில் இன்ன காரியத்தை இன்ன நாட்களில் செய்யலாம் என தீர்மானிப்பதில் மட்டுமின்றி, சமய வழிபாடுகளிலும் சடங்குகளிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. நாள்களின் தண்மையைக் கணக்கிடாமல் இந்து சமய வழிபாடுகள் நடப்பதில்iலைதான். எனினும் ‘நாள் என் செய்யும், கோள் என் செய்யும்.. நாதன் துணையிருக்கையிலே’ என்பதும் சமயச்சான்றோன் நவின்றதுதான்!

சமயச்சடங்குகளில் நாளின் ஆதிக்கம் இருந்துவிட்டுப் போகட்டும். நம்புலத்தார் வாழ்வில் இந்த நாட்கள் குறிப்பிடப்பட்டால் பரவாயில்லை. குறுக்கிட்டால் என்ன செய்வது? அஷ்டமியும், நவமியும் அப்படியென்ன தவறிழைத்தவை?