Thursday, June 25, 2015

வடக்கும், தெற்கும்!

தற்காலத்தைய சினிமாக்களுக்கு சற்றும் குறைவில்லாத ‘சொற்குத்துக்கள்’ அதாங்க, ‘பஞ்ச் டயலாக்குகள்’ அரசியலிலும் உண்டு. அந்தக் கால அரசியலில் ‘வடக்க வாழுது! தெக்க தேயுது!’ என்பதும் ஒரு பிரபலமான சொற்குத்து. இந்த வார தலைப்பை நினைத்தவுடன் மேற்சென்ன வார்த்தை மனதில் தோன்றியது என்பதால் சொன்னேன். மற்றபடி, இந்த கட்டுரைக்கும் வார்த்தைக்கும் சம்மந்தமில்லை. தவிர, எல்லாக்காலத்திலும் வடக்கேயும் தெற்கேயும் வாழ்பவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தேய்பவர்கள் தேய்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்!

வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு, தட்சின் என்றால் தெற்கு. உத்தர் திசையிலும், தட்சின திசையிலும் சூரியனின் ஒளி பயணித்தலே உத்திராயணம் மற்றும் தட்சினாயணம் என்று அழைக்கப்படுகின்றன. 

அதெப்படி, சூரிய ஒளி நகரும்? பூமி தானே சுற்றுகிறது? என்றால்.. அதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

பூமி தன்னச்சில் 23.5 டிகிரி சாய்ந்தபடி சூரினைச் சுற்றி வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை. இந்த உண்மை துணையுடன் ஒரு விளையாட்டை விளையாடுவோம். இந்த விளையாட்டிற்கு தேவை இரண்டு பந்துகளும் ஒரு நூலும். பந்துகளின் மேல் கோடுகள் வரைவதற்காக பென்சிலும். எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா.. இனி ஒவ்வொன்றாக படத்தில் காட்டியபடி செய்து பாருங்கள்.

படம் 1. இரண்டு பந்துகளில் ஒன்றை சூரியனாகவும், மற்றொன்றை பூமியாகவும் பாவித்துக் கொள்ளுங்கள். பூமியின் பந்தில் குறுக்குவெட்டாக சரியான விட்டம் அமையுமாறு மையத்தில் ஒரு கோட்டு வட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

படம் 2. சூரியனின் மையத்திலிருந்து, பூமியின் மையக்கோட்டின் ஏதேனும் ஒரு புள்ளியில் அமையுமாறு நூலினை இனைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த நூல்தான், சூரிய ஒளியின் அடையாளம் என்பதை யூகித்திருப்பீர்கள்.

படம் 3. பூமிப்பந்தை 23.5 பாகை சாய்த்து.. நூல் படும் படி சுற்றுங்கள். நூல் ஒரு சுற்று வந்ததும் நிறுத்திவிடுங்கள்.

படம் 4. தற்போது நூலின் பாதையை வரைந்து கொள்ளுங்கள். பாதை வரைந்ததும் நமக்கு நூல் தேவை இல்லை அகற்றி விடுங்கள்.

படம் 5. நூலின் பாதை அதாவது சூரிய ஒளியின் பாதை பந்தின் மையத்தில் ஏற்கெனவெ இருந்த பாதையை சாய்ந்தவாறு வெட்டிச்செல்வதை கவனியுங்கள். இங்கே சாய்ந்த கோட்டின் மேற்புள்ளியில்.. ஏற்கெனவே உள்ள ‘மையக் கோட்டிற்கு’ இணையாக ஒரு கோடு வரையுங்கள்;. கீழேயும் அதே மாதிரி.

புடம் 6. இப்போது, மத்தியில் முதலிலே போட்ட கோடு பூமத்திய ரேகை. மேலே வரைந்த கோடு கடக ரேகை. கீழே உள்ள கோடு மகர ரேகை. சாய்ந்து இருகோடுகளையும் தொட்டுச்செல்லும் கோடு சூரிய ஒளி படும் கோணம்.

ஆக, கீழே உள்ள கோட்டில் தொடங்கி.. மேலெ உள்ள கோடுவரை சூரிய ஒளி உயர்ந்து செல்லும் அதாவது, வடக்கு நோக்கி செல்லும் பயணம்.. உத்திராயணம். மேலே உள்ள கோட்டில் துவங்கி கீழே உள்ள கோடுவரை சூரிய ஒளி செல்லும் கீழ்நோக்கிய.. அதாவது தெற்கு நோக்கிய பயணம்.. தட்சினாயணம்.

கீழே உள்ள மகர ரேகையில் உள்ள புள்ளியை சூரிய ஒளி சந்தித்து.. தன் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்து.. தன் வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாள்… மகர சங்கராந்தி.


இப்போது.. ஓரளவிற்கு புரியும்படி விளக்கி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும்.. இது ஓரளிவிற்குத்தான். இன்னுமிருக்கிறது.

Thursday, June 18, 2015

சுற்றும் பூமி, சுற்றும்!

பூமி சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்? ஓன்றும் ஆகாது. அதாவது, ஒன்றுமே ஆகாது. இப்போது ஆகிக்கொண்டிருக்கும் எந்த ஒன்றும், எதற்கும் ஆகாது போய்விடும். புவிவாழ் இனங்கள் - பிணங்கள் என்றாகிவிடும். புவியின் சுற்றுதல் நின்று விட்டால் இதர கோள்களும் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். கோள்கள் தன் சமநிலை இழக்கும். ஒன்றுடன் ஒன்று மோதும். எல்லாம் முடிந்து விடும்.

ஆனால் அதெல்லாம் எளிதில் நடக்கப் போவதில்லை. ஏனெனில், பூமி சுற்றுவதற்கான ஆற்றலை அது சுற்றுவதிலிருந்தே பெற்றுக் கொள்கிறது. 

நீங்கள் படத்தில் உள்ளது போன்ற ஆடும் வாத்தினைப் பார்த்து இருப்பீர்கள். அழகுப்பொருளாக பல அலமாரிகளில் ஆடிக்கொண்டே இருக்கும். இதன் செயல்பாடு தொடர்ந்து நிகழ்வதினால் பம்பரம் போல மெல்ல.. மெல்ல வேகம் குறைந்த நின்று விடுவதில்லை. மாறாக தொடர்ந்து ஆடிக்கொண்டே.. ஆடிக்கொண்டே இருக்கும். இதன் அறிவியலை நீங்கள் யோசித்ததுண்டா? 

இந்த ஆடும் வாத்தின் உள் இருக்கும் திரவம் தன் சமநிலையை வாத்து ஆடுவதில் இருந்து பெற்றுக் கொள்கிறது. ஆடும் வாத்தோ தன் சமநிலையை உள்ளிருக்கும் திரவத்திலிருந்து பெற்றுக்கொள்கிறது. இந்த வினை ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால்.. ஏதேனும் புற செயல்பாடு இல்லை என்றால் (யாராவது நிறுத்தினால் ஒழிய) நிற்கவே நிற்காது. 

இது போல்தான் பூமியும், இதர கோள்களும் தாங்கள் சுற்றுவதிலிருந்தே தங்களுக்கான சுற்றும் சக்தியைப் பெற்றுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

முதலில், பூமியும் மற்ற கோள்களும் எப்படி அந்தரத்தில்.. எதுவும் தாங்குவதற்கு இல்லாமல் நிற்கின்றன, சுழல்கின்றன எனக்காணலாம். இதற்கும் அறிவியல் செயல்படுகிறது. அது தான் கோள்களின் ஈர்ப்புவிசை. காந்த சக்தி போன்ற விசை. புவியெங்கும் காந்த சக்தியும், காந்தத்தால் ஈர்க்கப்படும் சக்தியும் நிறைந்து உள்ளது. (சிறுபிள்ளையில் மண்ணில் இரும்பெடுத்து.. காந்தத்தால் பேயாட்டி விளையாண்டு இருக்கிறீர்களா?) இந்த சக்தி எல்லா கோள்களிலும் உள்ளது. இதனால் ஒவ்வொரு கிரகங்களும் ஒன்றுக்கொண்று ஈர்க்கிறது. 

பல்வேறு கிரகங்கள் ஓரே சமயத்தில் ஒன்றுக்கொண்டு ஈர்த்துக் கொண்டு இருப்பதனால், ஒரே சயமத்தில் பல்வேறு திசைகளில் இருந்து ஈர்ப்பு சக்தி செயல்படுவதால், எந்த கிரகமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதில்லை. மாறாக, ஒவ்வொரு கோள்களும் தங்களை தாங்களே ஈர்க்கும் சக்தியில் நின்று கொண்டு அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. இவ்வாறு ஒன்றுக்கொண்டு ஈர்த்துக்கொண்டு இருப்பதால்தான் இயங்கவும் செய்கிறது.

இவ்வாறு, தொடர்ந்து இயங்குவதால்தான் கோள்களுக்கு ஈர்ப்புசக்தியும் கிடைக்கிறது. (நன்கு தேய்க்கபட்ட சீப்பு, தன்பால் காகிதத்தை ஈர்க்கும் சக்தியை பெருகிறது அல்லவா?). ஆக, இயங்குவதால்தான் ஈர்ப்புசக்தி கிடைக்கிறது. ஈர்ப்பு சக்தி இருப்பதானால் தான் இயங்குகிறது. இது மேற்சொன்ன வாத்து பொம்மையின் இயக்கத்தைப் போன்றது.

கோள்களின் இயங்கும் அறிவியலை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம். நீங்கள் படத்தில் காட்டியிருப்பது போன்ற எண்களை வரிசைப்படுத்தும் விளையாட்டினைப் பார்த்திருப்பீர்கள்! இதில் உள்ள பதினாறு கட்டங்களை வைக்க வேண்டிய இடத்தில் ஒரு கட்டம் வைக்கப்படாமல் இருக்கும். இந்த ஒரு வெற்றிடத்தை வைத்தே மற்ற கட்டங்களை நாம் அசைக்க முடியும். இந்த வெற்றிடம் இல்லாவிட்டால்.. எதையும் அசைக்க முடியாதல்லவா? 



அது போல், வெளியில் (Galaxyயில்) கோள்களுக்கு இடையேயும் ஒரு வெற்றிடம். இந்த வெற்றிடத்தை நிரப்ப ஒன்றுடன் ஒன்று தன்னைத்தானே ஈர்த்துக் கொண்டிருக்கும் கோள்கள் நகர்கின்றன. ஒரு கோள் நகர்ந்தவுடன்.. அக் கோள் இருந்த இடம் வெற்றிடமாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள் நகர்கிறது. அதன் வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள்.. அதன் வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள்.. என தொடர்ந்த இயக்கம் சாத்தியமாகிறது. இந்த வெற்றிடம் இல்லாமல் போகும் நிலை வருவது அவ்வளவு சுலபமல்ல. எனவே வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கும். கோள்களின் இயக்கமும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆக, ஒன்றும் இல்லாத ஒன்றே (வெற்றிடமே).. எல்லாவற்றையும் இயக்குகிறது. இதனால் தானோ..
                                 பூஜ்ஜியத்தில் இருந்து கொண்டு
                                 புரியாமலே இருப்பான் - ஒருவன்
                                 அவனைப் புரிந்து கொண்டால்
                                அவன்தான் இறைவன் - என பூஜ்ஜியத்திற்கும் இறைவனுக்கும் தொடர்பு ஏற்படுத்தி கண்ணதாசன் பாடியிருப்பார்?

தொடர்ந்து இயங்குவது சரி, அது ஏன் ஒரு சுற்றுப்பாதையில் வட்டமாக சுற்றுகிறது? எப்படி தன்னைத்தானேவும் சுற்றிக்கொள்கிறது? இதற்கான விடையையும் ஒரு விளையாட்டிருந்தே கற்றுக் கொள்ளலாம்.

ஒரு தாம்பாளத்தை சுற்றிவிடுங்கள். அதில் அம்மாவிடம் சப்பாத்திக்கு மாவுபிசையும் போது மாவு கொஞ்சம் வாங்கி (தரவில்லை என்றால் தெரியாமல் எடுத்துக்கொள்ளுங்கள்! 'அம்மாவிடம்' 10% தப்பு செய்தால்.. தப்பில்லை ) தாம்பாளத்தினுள் சிறு துண்டுகளாக பிச்சுப் பிச்சுப் போடுங்கள். தாம்பாளத்தை தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருங்கள். மாவுத்துண்டுகள் மெல்ல மெல்ல உருண்டையாவதையும், தாம்பாளத்தின் சுற்றொடு சுற்றிக் கொண்டே தன்னைத்தானேவும் சுற்றிக் கொள்வதையும் கூர்ந்து கவனியுங்கள்!

இந்த விளையாட்டிலிருந்து தொடர்ந்து சுற்றப்படும் ஒரு வஸ்து, உருண்டைப் பொருளாகவும், தன்னைத்தானே சுற்றும் பொருளாகவும் மாறும் என்பதை அறிந்து கொள்கிறோம்.

இன்றைய கட்டுரையிலிருந்து, தொடர்ந்து பூமி சுற்றிக் கொண்டே இருக்கும் என்பதையும், ஏன் உருண்டையாக இருக்கிறது என்பதையும், ஏன் தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம். இந்த அறிவியிலின் அடிப்படையில்தான் சகல இயக்கமும் தொடர்கிறது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

ஆனால், தட்சினாயனம்.. உத்திராயனம்? 

Tuesday, June 9, 2015

அட்சம், அச்சமில்லை!

உண்மையில் மகர சங்கராந்தி என்றால் என்னவென்றும்.. தமிழர் திருநாளாம் பொங்கலின் அடிப்படைத் தத்துவத்தையும் விளக்கி விட்டால்.. அல்லது விளங்கிக் கொண்டால் நாம் தொடர்ந்து வரும் பயணத்தின் முக்கியமானதும் இறுதியானதுமான கட்டத்தை நெருங்கி விடலாம்! 

முதற்கண் மகரசங்கராந்தி. 

மகர சங்கராந்தி என்பது வேறு ஒன்றுமில்லை. சூரியனது கதிர்கள் நேர் அலைவரிசையில் மகரரேகையின் மீது படுகின்ற, பதிகின்ற நாள் என்று ஒற்றை வரியில் எளிதில் சொல்லிவிடலாம். 

ஆனால், மகர சங்கராந்தி எனும் நிகழ்வை ஊன்றி அறிந்து கொள்ள, மகர ரேகை என்றால் என்ன? சூரிய ஒளி அலைகள் எப்பொழுது அதன் மீது நேர் கோட்டில் விழுகிறது? ஏன் விழுகிறது? ஏன் மற்ற நாட்களில் விழுவதில்லை? அவ்வாறு சூரிய ஒளி மகர ரேகையில் விழுவதில் என்ன விசேசம்? அன்றைய தினத்தில் இயற்கையில் நிகழும் மாற்றம் என்ன? போன்ற பல வினாக்களுக்கு நமக்கு விடை வேண்டியிருக்கிறது.

அதாகப்பட்டது, மகர ரேகை என்பது பூமத்திய ரேகையில் இருந்து  23.5 டிகிரி கோணம் கொண்ட தென்திசை அட்ச ரேகை. அட்ச ரேகைகள் என்பது பூவியின் மேற்பரப்பில் படுக்கை வச குறுக்குவெட்டு அமைப்பில் வரையப்பட்ட கற்பனை கோடுகள். இந்த அட்ச ரேகைக் கோடுகள் மொத்தம் 24. இந்த 24 கோடுகளும் பூமியை குறுக்காக வெட்டினால் கிடைக்கும் மையப்புள்ளியில் இருந்து தோன்றுபவை. ஓரே புள்ளியில் தேன்றினாலும் ஒவ்வொரு கோட்டிற்கும் இடையில் 15 டிகிரி கோணம் உள்ளது. இந்த 15 டிகிரி கோணத்தில்; பூமியின் மேற்புறத்தில் விளையும் கோடுகள் 24. ( பார்க்க படம்-2 )

இந்த இருபத்தி நான்கு கோடுகளுக்கும் மத்தியில் அதாவது 0 டிகிரி பாகையில் செல்லும் கோடு பூமத்திய ரேகை அல்லது ஈக்வடார் Equator என அழைக்கப்படுகிறது. இந்த பூமத்திய ரேகை உள்ளிட்ட 24 கோடுகளையும் இணைந்த விட்டமாகக் கருத்திக் கொண்டால் பூலோகத்தை 12 துண்டுகளாக இந்தக் கோடுகள் பிரிக்கின்றன. இந்தப் பன்னிரண்டு துண்டுகளும் அது அதற்கான சூரிய மாதத்தின் பெயரை தனது பெயராகக் கொண்டிருக்கின்றன.

திரும்பவும் சூரிய மாதம் மற்றும் சந்திர மாதங்கள் மற்றும் நட்சத்திரத்திற்கும் இந்த மாதங்களுக்கு இடையிலான பொருத்தம் போன்றவை பூமியோடு சேர்ந்து நம் தலையையும் சுற்ற வைத்து கிருகிருப்பு வரச்செய்யலாம் ஆகையால், பின்வருமாறு எளிதாக புரிந்து கொள்வோம்!

அதாவது, அட்சரேகை எனப்படும் பூமியின் குறுக்கே வரையப்பட்ட 24 கற்பனைக்கோடுகளும் பூமியை பன்னிரண்டு துண்டுகளாகப் பிரிக்கின்றன. இந்த ஒவ்வொரு துண்டும் (நாம் வழக்கமாக எல்லா சானல் டிவியின் காலை நிகழ்ச்சிகளிலும் தினப்பலன் ஜோதிடம் மூலம் அறிந்த) ஒவ்வொரு ராசியின் பெயரைப் பெறுகின்றன.



பன்னிரண்டு ராசிகளுக்கும் மத்தியில் அமைந்த கோடு பூமத்திய ரேகை எனப் பெயர் பெறுகிறது. அதன் வடபுறமாகச் செல்லும் முதல் 23.5 டிகிரி பாகைக்கான கோடு கடக ரேகை எனப்படுகிறது. இந்தக் கடக ரேகையானது நமது இந்திய தேசத்தின் குறுக்காகவும் செல்கிறது. ( இது கற்பனைக் கோடு என்பதால், இரயில் ஏறிப்போய் எல்லாம் இந்தக் கோடு போடப்பட்டிருக்கும் பகுதியைப் பார்த்து வர இயலாது. )

கடகரேகைக்கு நேர் எதிர்ப்புறமாக, பூமத்திய ரேகைக்குக் கீழே தென்புறமாக 23.5 டிகிரி கோனத்தில் உள்ள கோடு மகர ரேகை என்று அழைக்கப்படுகிறது. இது நிலப்பரப்பின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க நாடுகளைக் கடந்த செல்கிறது. இந்தயாவை பொறுத்த மட்டில், தேசத்திற்கு வெகு கீழே இந்தியப் பெருங்கடலில் செல்கிறது. 

இந்த மகர ரேகை எனப் பெயரிப்பட்ட அட்ச ரேகையில் சூரியனது ஒளிக்கதிர்கள் நேரடியாகப் படும் நாள்தான் மகரசங்கராந்தி. அதாவது, மகர ரேகையுடன் ஆதவன் சங்கமிக்கும் நாள்.

ஒளியானது எப்போதும், எல்லாச் சூழலிலும் நேர்கோட்டிலேயே பயனிக்கிறது. கவனிக்க, டார்ச் லைட் அடித்தால் அதன் ஒளி வளைந்து செல்வதில்லை. பிறகு, சூரிய ஒளி மட்டும் வளைந்தா விழும்? ஆனால், நாம் ‘சூரிய ஓளி நேராக மகர ரேகையில் விழுகிறது’ என்ற பதத்தை ஆரம்பத்திலிருந்து பயன்படுத்தி வருகிறோம். எனில் சூரிய ஒளி நேராக விழுதல் என்றால் என்ன?

இங்கே தான், “ பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது” என்ற அறிவியல் செயல்படுகிறது. 

பூமி கோள அமைப்பிலானது. அதன் உச்சியில் வடதுருவமும், அடிப்பகுதியில் தென்துருவமும் அமைந்துள்ளது. இதில் நாம் நடு உச்சியாக கருதும் வடதுருவம், தன் இருக்கவேண்டியதாக நாம் கருதும், நேர் செங்குத்துக் கோட்டில் இருந்து சற்று சரிந்து, சாய்ந்து காணப்படுகிறது. இவ்வாறு சாய்ந்த கோலத்திலேயே நமது கோளம் தன்னைத் தானேவும், சூரியனையும் சுற்றி வருகிறது. என்பதையெல்லாம் நாம் சிறுவயதிலேயே கற்று அறிந்து அறிஞர்களாக உள்ளோம். எனவே, தற்போது அவ்வாறு சாய்ந்திருப்பதால், என்ன நிகழ்கிறது என்பதைக் காண்போம்.

பூமி சாய்ந்து சுற்றுவதினால் தான் பருவகால மாற்றங்கள் ஏற்படுகின்றன. மழைக்காலமும் வெயில் காலமும் தோன்றுகின்றன. இவ்வாறு பூமி தன் அச்சில் சாய்ந்து சுற்றுவதால் தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் சாய்ந்தும்.. நேராகவும் விழுகிறது. தட்சினாயணம், உத்திராயணம் போன்றவை நிகழ்கின்றன. அப்படியென்றால்..?

Thursday, June 4, 2015

நாளில் நல்ல நாள்

சிறு பிள்ளைகளாய் இருந்த காலத்தில், எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் புதுக் காலண்டர் வாங்கியவுடன் முதலில் புரட்டிப் பார்ப்பது என்று ‘தீபாவளி’ வரும் என்றுதான். காலண்டர் வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து அந்த வருட தீபாவளிக்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. 

கொண்டாட நினைத்தால், அதற்கான சூழல் வாய்த்திருந்தால் மனிதனுக்கு எல்லா நாட்களும் தீபாவளிதான். பண்டிகைதான். இருந்தாலும் கிருஸ்மஸில் கேக் வெட்டி, ரம்ஜானில் பிரியாணி தின்று, தீபாவளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது நம் உணர்வில் ஊறிய வழக்கங்கள்.

(Photo: K.C. Sowmish)

அதனால்தான், தீபாவளி, பொங்கல் போன்ற விசேச நாட்களை நினைத்தாலே மனம் குதூகலிக்கிறது. தீபாவளி என்றால் புது உடுப்பு துணிமணிகள் வரும், பலகாரங்கள் வரும், பட்டாசு வெடிக்கலாம் என்றெல்லம் நினைத்தாலே இனிக்கும் விசயங்கள் ஏராளம். இம் மகிழ்ச்சி குழந்தைகள் மட்டும் தான் என்பதில்லை.. பொதுவாக மனித பிறப்பே திருநாள் நோக்கித்தான் தவமிருக்கின்றன. வாழ்வின் மகிழ்ச்சிப் புதையல்கள் இத்தகு நாட்களில் திறந்து வைக்கப்படுகின்ற காரணத்தால் பண்டிகை தினங்களை நோக்கித்தான் வருடத்தின் மீதமுள்ள அத்தனை நாட்களுமே நகர்கின்றது. 

விழா நாட்கள் புறப்பொருள் சம்மந்தப்பட்ட மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல, அக மன உற்சாகத்தின் தூண்டுகோளாய் அமைந்து மனிதன் மீண்டும் மீண்டும் வாழ்நாள் பாடுகளை சோர்வுறாமல் சந்திப்பதற்கு அவனைத் தயார் படுத்துகிறது. உற்சாகமளிக்கிறது. சோகங்களை முறிக்கிறது. அவனது மனஉளைச்சலுக்கு மருந்தாக அமைந்து ஓட வைக்கிறது. 

‘நல்லநாளும் பொழுதுமா இப்படியா உட்காந்திருப்ப’ என்ற ஒரு சொல் போதாதா.. உன்னை சுற்ற உள்ள உலகம் நீ எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறது என உனக்கு உணர்த்துவதற்கு? இந்த சொல்லையும் ஒரு நல்ல நாளில் சொன்னால் தானே ஆயிற்று? எல்லா நாளிலும் சொல்ல முடியுமா? சொன்னாலும் அர்த்தப்படுமா?

எனவேதான் இம்மாதிரியான கொண்டாட்டங்களை கொண்டுவரும் தினங்கள், மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. பூமியோ, கிரகங்களோ, நட்சத்திரங்களோ இன்னுமுள்ள இயற்கைக் காரணிகளோ விழா நாட்களை உருவாக்கவில்லை. நாட்களுக்கு குணம் உண்டு. இருந்தாலும், எந்த நாளும் இப்படிக் கொண்டாட வேண்டும் எனும் நிர்பந்தத்தைக் கொண்டு வரவில்லை. அப்படிக் கொண்டாடப்படா விட்டாலும் அந்த நாளின் இயற்கையில் யாதொரு பங்கமுமிராது. இருந்தாலும், மனிதன் தன் ஆழ் மன தேவைகளுக்கு ஏற்ப, இன்ன நாளில் இன்ன விழா என மனிதனே உருவாக்கி, காலச்சூழலுக்கேற்ப, கிடைக்கும் சாதனங்களுக்கெற்ப விழாக்களின் கொண்டாட்ட முறையையும் வகைப்படுத்திக் கொண்டான். 

எனவேதான், விழா நாட்கள் இனம் சார்ந்து, மொழி சார்ந்து, மதம் சார்ந்து, நிலம் சார்ந்து, மனிதன் சார்ந்த எல்லாம் சார்ந்து வருகிறது. பின்னிருந்து நோக்கின், விழாக்கள்... மனிதனை, அவனது நிலத்தை, அவனது மொழியை, அவனது இனத்தை, அவனது கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன. மனிதனை, அவன் கொண்டாடும் விழாக்கள், அவன் இன்னார் என்று அடையாளப்படுத்துகின்றன. 

வருடப்பிறப்பும் கூட அப்படித்தான்.. ஆழ்ந்த அகன்ற மனித கலாச்சாரத்தை உரக்கச் சொல்பவை. கலாச்சார மாற்றத்தையும், திரிவையும் கூட சொல்லிச் செல்பவை.

எந்த ஒரு மனிதக் கலாச்சாரமும் மாற்றத்தையும், பிறக்கலாச்சாரக் கலப்பையும், சில சமயங்களில் அழிவையும் சந்திக்காமல் இல்லை. தொன்மை மிக்க தமிழினமும் அப்படித்தான் பல்வேறு சூழ்நிலைகளில், கால, தேச, வர்த்தமான பகிர்வுகளில் பல்வேறு சிதைவுகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு வந்துள்ளது.

காலத்தால் இணைந்த கலாச்சாரங்கள் ஒரே நாளின் கொண்டாடத்தை வேறு வேறு பெயர்களின் கூட கொண்டாடக்கூடும். உதாரணத்திற்கு தமிழனின் திருநாளாக் கொண்டாட்ப்படும் பொங்கல் தினத்தை, மகரசங்கராந்தியாகக் வடபுலத்தார் கொண்டாடி வருகின்றனர். 

தன் உழவின் பயனை ஆதவனின் கொடையாகக் கருதி அவனுக்கு நன்றி நவிலும் நாளாக நம்மால் கருதப்படும் பொங்கலுக்கும் - மகரசங்கராந்திக்கும் ஒரே நாளில் வருகிறது என்பதைத்தவிர என்ன சம்மந்தமிருக்க முடியும்?