Wednesday, September 2, 2015

மாயா மச்சிந்ரா..

தமிழர், தமிழின் பெருமையை, தொன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். ஆதிதொட்டு மனிதகுலத்தின் தனிச்சிறப்புகளில் ஆதிக்கம் செலுத்திய மேன்மையை சொல்லத்தான் வேண்டும்.

ஆனால், அதற்காக எல்லாமே நாங்கதான் என ‘புருடா’ விடத்தேவையில்லை.
முகப்புத்தகத்தில் ஒரு செய்தி பார்த்தேன். 

உலகத்தில் முதல் முதலில் ‘பாஸ்வேர்டை’ கண்டுபிடித்தது தமிழன் தான் என்றிருந்தது அந்த செய்தி. அதற்கு உதாரணமாக ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ கதையில் வரும் ‘அன்டா காகசம், அபு காகுகும் திறந்திடு சீசே’ என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

எனக்கு.. ‘அடேய்…!’ என்றிருந்தது.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்பது பாரசீகத்தின் கதை. அந்தக் கதையில் எம்.ஜி.ஆர். நடித்த தமிழ்ப்படம் வந்தது என்பதற்காக.. அதில் வரும் ‘பாஸ்வேர்டு’ தமிழரின் கண்டுபிடிப்பு ஆகிவிடாது.

தமிழன் முதல் பாஸ்வேர்டை கண்டுபிடித்து இருக்கலாம். அதை நீங்கள் சொல்ல வருவதானால்.. உண்மையான தகவலின் அடிப்படையில் விளக்குங்கள். அல்லது இதுபோன்ற கண்டுபிடிப்புக்களை நீங்கள் கண்டுபிடிக்காமல் இருங்கள். 

ஏனெனில், தமிழனை ‘எப்படியாவது’ இவன்தான் ஆதிகாலத்தவன் என்பதைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவனது இயல்பான, இயற்கையோடு இணைந்த பண்பாட்டை உணர்ந்தாலே, உலகம் தெரிந்து கொண்டுவிடும் இவன்தான் மூத்தவன் என்று.

இப்போது, நம்மைப் போலும் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான, மாயன் இனத்தவரையும், சமீபத்தில் உலகை உலுக்கிய அவர்களது காலண்டரையும் காணலாம்.

கொலம்பஸ், இந்தியாவிற்கு கடல்வழிதேடி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அங்கிருந்தவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார். அந்த செவ்விந்திய இனத்தை அடியாடு அழித்துவிட்டு அமெரிக்காவை ‘ஆக்குபை’ ஆக்கினார்கள் அய்ரோப்பியர்கள். 

அய்ரோப்பியர்கள் காலடித்தடமெல்லாம் இயற்கை அழிந்தது. இயற்கையோடு சேர்ந்த மனித வாழ்வும் அழிந்தது. அவ்வாறு அழிந்த அளவிற்கடங்கா ஆதியினத்துள் ஒன்றுதான் மாயன்.

மாயன்கள், வரலாற்றில் கனிந்த நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள்.

எகிப்தியர்களுக்கும் முன்பே, பிரமிடு அமைப்புடன் கூடிய கட்டிடக்கலையில் தேறியவர்கள்.

கணிதத்தில் வல்லவர்கள்.

கட்டமைக்கப்பட்ட காலண்டர்களைக் கண்டறிந்தவர்கள். என ஏகப்பட்ட சிறப்புக்கள் கொண்டவர்கள் மாயன் இனத்தவர்கள். இவர்களுக்கும் தமிழர்களுக்கும் நிறைய சம்மந்தங்கள் உண்டு.

சீனர்களும், தமிழர்களும் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர் என்று சொன்னால்.. மயான் இனத்தவர்களே தமிழர்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது தகவல்கள்.

-- இடையில் எனக்கு ஒரு டவுட்டு – அதாவது பண்டைய கால வரலாற்றை படிக்கையில் -- சிந்து சமவெளி நாகரீகம், மாயன் நாகரீகம் என்று படிக்கிறோம். அந்த நாகரீகங்களின் இயல்புதன்மைக்கு நேர் எதிரில் இருக்கும் - இன்றைய செயற்கையான இயற்கையை கெடுக்கும் நடைமுறைகளையும் நாகரீகம் என்கிறோம். அப்படி என்றால் .. உண்மையில் எது நாகரீகம்? – தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

விசயத்திற்கு வருவோம். மாயன்கள் இன்றைய அமெரிக்கா - மெக்சிகொவிலிருக்கும் - கோசுமெல் தீவில் வசித்தவர்கள். அவர்களது நாகரீகத்தின் சான்றுகள் இங்கேதான் காணக்கிடைக்கிறது.
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறி வாழ்ந்ததை உறுதி செய்கிறார்.

மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.

அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hygo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.

அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாம் திரு. மஞ்சை வசந்தன் தனது Blog-ல் நமக்கு தெரிவிக்கிறார். அவருக்கு நன்றிகள்.

இது போக இன்னும் சில தகவல்களும் மாயன் இனத்தவரைப்பற்றி நமக்கு தெரிவிக்கிறது. மாயன் இனத்தவர்களின் படைப்புகளில் உலகினை அதிக வியப்புக்குள்ளாக்குவது அவர்களது கட்டிடக்கலைதான்.

அவர்களின் பிரமிடு போன்ற கட்டிடங்கள் பிரம்மிக்கத்தக்கவை. உச்சியில் ஏற ஏற தலைகீழாக நிற்பது போலவும், வானத்தில் தொங்குவது போலவும் ஒரு பிரம்மை என்றபடுகிறதாம். வானக்கிரகங்களின் சக்திகள் ஒன்றினைக்கும் வகையில் அமைந்துள்ளது இந்தக் கட்டிடங்கள். இதையெல்லாம் கணக்கிட்டு எப்படி இவ்வாறு கட்டினார்கள் என்பது உள்ளபடியே ஆச்சரியம்தான்.



இதற்கெல்லாம் மேலாக ஆச்சரியத்தை தரக்கூடியது அவர்களின் காலண்டர்கள். இந்த மாயன் காலண்டரின் விசேசம் என்னவென்றால் வெறும் நாட்கணக்கை மட்டும் அவர்கள் குறிப்பிடாமல் அவற்றில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கணிப்பையும் வெளியிட்டிருந்ததாகவும் அவையெல்லாம் பெரும்பாலும் அப்படியே நடந்து வியப்பளிக்கின்றன.

No comments:

Post a Comment