Tuesday, April 14, 2015

வியப்பின் சரித்திரக் குறியீடு!

வடிவேலுவின் காமடியை மேற்கோள் காட்டாமல் எதையும் தாண்டிச் செல்வதென்பது அவ்வளவு சுலபமில்லை போலும். அன்றாட வாழ்க்கையில் நாளுக்கு ஒருமுறையாவது அப்படி நேர்ந்து விடுகிறது. 



அரசுப்பேருந்தை வடிவேலு விற்பது போன்ற ஒரு காமெடியில் “ஆமாங்க, நீங்க வாசிச்சா என் சொத்து, நான் வாசிச்சா உங்கள் சொத்து” என்று முடிப்பார். கிட்டத்தட்ட அதுபோல்தான் வரலாறும் சில சமயங்களில் அவரவர் இஷ்டத்திற்கு குறிப்பிடப்பட்டு விடுகிறது. வரலாற்று பதிவுகளில் மிகத் தெளிவான குறியீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்றாலோ, சில தரவுகளுக்கு பல அர்த்தம் கற்பிக்க ஏதுவாக இருந்தாலோ அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒரு முடிவை சொல்லிவிடுகிறார்கள். 

உதாரணமாக, இன்றைய மத்தியப்பிரதேசத்திற்கும் வடக்கே, ஏதோ ஒரு சிறுகோயில் மதிற்சுவரில் மீன் போன்ற உருவம் பதிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம்.. அதைக் கண்டுணர்ந்த வரலாற்று ஆசிரியர், நம்மவராக இருந்தால், இந்தியாவின் இந்தப்பகுதிவரை இரண்டாம் வரகுணப்பாண்டியனின் ஆட்சிப்பரப்பு இருந்தது என்பதற்கான அடையாளம் இது என்று எழுதிவைப்பார். அதே, வேறுபுறத்தவராயின்.. இது பாண்டிய மன்னனை வென்றதைக் கொண்டாட, இங்கே அமைக்கப்பட்ட கோவில். நீண்டகாலமாக.. இப்புற மன்னனின் காலடியில் - செழியன், குப்புற விழுந்து கிடந்தான் எனப் பதிவார்.

இம்மாதிரிப் பிரச்சனைகளில், வரலாறு பல்வெறு இடங்களில் சிக்குண்டு கிடந்தாலும்.. இவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ.. தமிழ், தமிழரின் பண்பாட்டுத் தொண்மைதான் என்று தோன்றுகிறது. ஆளாளுக்கு ஒரு கருத்துச் சொல்வதும், அதை அடுத்த ஆள் வந்து மறுப்பதும், ஆதாரங்கள் விளக்கப்படுவதும், அவை ஆதாரங்களே அல்ல என விலக்கப்படுவதும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை சிலர் மறுப்பதும், சிலரால் முன்வைக்கப்பட்ட கருத்தினால் பொதுக்கருத்து புறம் கிடப்பதும், பொதுவில் இருக்கும் சில தவறான கருத்துக்கள் ஏற்றம் பெறுவதும், சிலரால் முன்வைக்கப்பட்ட சரியான கருத்துக்கள், இது இன்னாரால் வைக்கப்பட்டது என்பதினாலேயே மறுக்கப்படுவதும் தமிழுக்கு நடப்பதுபோல், வேறெங்கும் காணோம். 

தமிழ்ப்பரப்பில் ஒரு கருத்தை எதிர்ப்பதனால் வரும் வெகுஜன கவனயீர்ப்பிற்காக சிலர், எதைச்சொன்னாலும் எதிர்ப்பது, ஆதாரங்களைக்களைக் கூறாமல் எதிராளியை மட்டம்தட்டுவதில் கவனம் செலுத்துவது போன்றவையும் மலிந்து கிடக்கின்றன. அதெல்லாம் நாம் மாற்ற முடியாது. எனவே, வேறு ஏதேனும் முடிந்ததைச் செய்வோம். 

- இக்கட்டுரைத்தொடரின் ஆரம்பம்.. தைய்யா? சித்திரையா? என நண்பர்களுடன் தர்க்கித்துக் கொண்டது என எற்கெனவே சொல்லியிருக்கிறேன். நான் பள்ளி மேல்நிலை பயிலும்போது தமிழும், வரலாறும் படித்ததோடு சரி. இப்பாடங்களில் பட்டம் பெற்றவனல்லன், மலையளவு படித்தவனு மல்லன். ஆயினும் மனதளவு பிடித்தத்தின் காரணமாக சில தேடல்களுடனும் அவற்றில் கிடைத்த விடைகளுடனும் பயனித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில், இன்று சித்திரை ஒன்று.

இன்றைக்கு ஆண்டுப்பிறப்பா? இல்லையா? என்று சொல்லிவிட்டால் நாம் எதை நோக்கிப் போகிறோம் என்பது தெரிந்துவிடும். இக்கட்டுரையின் நோக்கம் முடிந்துவிடும். முடிவை உடைத்துச் சொல்லிவிட்டு, அந்த முடிவை ஏன் தெளிந்தேன் என்பதை விளக்கிச்சொல்வதும் ஒரு முறைதான். எனினும், இதைத் தொடராக எழுதிவருகிறேன் என்பதாலும்.. முடிவைச் சொல்லிவிட்டால் தொடரில் தொடர்ந்து விளக்கிவருவதின் சுவை(!) குறையும் என்பதாலும், இன்று புத்தாண்டா இல்லையா என்பதை கட்டுரை முடிவிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். 

- எந்த ஒரு உண்மையும் நிரூபிக்கப்படும் வரை வெறும் கருதுகோள்தான். உண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் வேண்டும். அந்த ஆதாரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வரலாற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் நிறைய இருக்கின்றன. நீருபிக்கப்பட்ட உண்மைகள் குறைவுதான். எனினும் உண்மைகளை நிரூபிக்க முயலும் ஒவ்வொருவரும் அவரவர் தரப்பு வாதத்தை முன்வைக்கையில், தன் சுயவிருப்பத்தை முன்வைக்காமல், தனது தர்க்கத்தை நிகழ்த்த வேண்டும். சுயவிருப்பத்திற்காக உண்மையிலிருந்து விலகிச் செல்லக் கூடாது. 

தமிழ்க் காலண்டரின் ‘நதிமூலம், ரிஷிமூலம்’ தேடிய பலரும் கட்டுரையும் கருத்துரையும் அளித்துள்ளனர். தமிழர்கள் எப்போது ஆண்டுப்பிறப்பினை கொண்டாடினர் என்பதற்கு துணையாக இலக்கியத்தில், வானவியலில், கல்வெட்டுக்களில் தங்கள் தங்கள் தரப்பிற்கு ஆதரவாக ஆதாரங்கள் அளித்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் கூட்டி இரண்டால் வகுத்து அளிப்பது மட்டுமல்லாமல்.. உலகில் பல்வேறு காலண்டர்களின் தண்மை, அவற்றின் துவக்கம், அவற்றை அவ்வாறு துவங்கியதற்கான காரணங்கள், அவற்றைக் கொண்டாடிய மக்கள், அவர்களுக்கும் தமிழர்களுக்குமான பண்பாட்டு ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள், அதனால் எழும் கருதுகோள்கள் போன்றவற்றைப் பற்றிய எனது இயன்றவரையிலான தேடல்களையும் தெரிவுகளையும், இவண் தெரிவிக்கிறேன்.

- தமிழ்க்காலண்டரின் ஆரம்பம் பற்றி ஆராய்கையில், தமிழனின் ஆரம்பமும் ஆராய வேண்டி உள்ளது. தமிழனின் தொண்மை பற்றி ஆராய்கையில் வரும் கருத்துக் குவியல்களின் தீர்க்கமின்மைதான் மேலே நான் விளக்கியவற்றின் அடிப்படை. 

“தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவானர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுனராத இயல்பினாளாம் எங்கள்தாய்" 
என பாரதி பாடியதைப் போல.. வரலாற்றைத் தேடுவோர், “தமிழினம் எப்ப பிறந்துச்சுன்னு யாருக்குமே தெரியலையாமப்பா..” என்று சொல்லி தப்பிவிட முடியாது. ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்தாகத்தான் வேண்டும். ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப்பிறகும் ஒரு முடிவுக்கு வரலாற்று ஆசிரியர்கள் வந்து சேர்ந்ததாய் தெரியவில்லை. இதிலும், கொடுமையாக ஆய்வுகளுக்கு பல தரப்பட்ட தடையம்சங்கள் வேறு. பூம்புகாருக்கு அருகில் ஒரு பண்டைய தமிழர் பண்பாட்டுப் பெரு நகரம் இருந்ததாம். ஆதனைப்பற்றிய ஆய்வு நிதிப்பற்றாக்குறை எனச்சொல்லி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாம். அதைத்தாண்டியும் ‘திருவாளர். கிரஹாம் ஹான்காக்’ என்பவரின் கண்டுபிடிப்புகளும் நம்பகத்தன்மையற்றiவை என நகையாடப்படுகிறதாம்.

தமிழன் தொண்மை மிகுந்தவன் எனச் சொல்வதில் பலருக்கும், பலகருத்து. 

ஒருமித்த கருத்தென்பது தமிழனுக்கு ஒவ்வாத ஒன்றோ? ஏன சந்தேகிக்கும்படியாக.. இன்றைய தினத்தை ஒரு தொலைக்காட்சி புத்தாண்டாகவும், அடுத்த தொலைக்காட்சி தனது பிறந்த தினமாகவும், மற்றொரு தொலைக்காட்சி திங்கள் பிறந்ததென்றும், இன்னுமொரு தொலைக்காட்சி ஏதுமில்லா நாளாகவும் கொண்டாடுகிறது. 

ஹூம்… இவைதானோ ‘வியப்பின் சரித்திரக் குறியீடு!?’

Tuesday, April 7, 2015

....தொடரும் முட்டாள்கள் தினம்!

எதற்கும் காரண காரியம் உண்டு. காரணம் இல்லாமல் எதைச் சொன்னாலும் சும்மா கதை விடாதே என்று சொல்லவார்களல்லவா? இருந்தாலும் சும்மா கதைவிடுதல் என்பது சாத்தியமே இல்லை. அதிலும் காலண்டர் கதைகள் என்று வந்துவிட்டால் சும்மா கதைவிடுதல் கதைக்கு ஆகாது எனக் கூறிக்கொண்டு, நாம தொடங்குன கதைக்கு வருவோம்.
கிரிகோரிஸ் காலண்டரை ஏற்றுக்கொள்ளாதாரை ‘ஏப்ரல் முட்;டாள்கள்’ என்றனர் என்பதைத் தவிரவும் முட்டாள்கள் தினத்தைக் கொண்டாட காரணம் ‘அறிவாளிகள்’தானாம். அது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன் ‘முட்டாள்கள்’ யார் என்பதை பார்க்கலாம்.
- ‘முட்டாள்கள்’ எனும் வார்த்தை தமிழின் இடைக்கால பயன்பாட்டுச் சேர்க்கை. ‘முட்டாள்தனம்’ எனும் வார்த்தைக்கு, இன்று நாம் பயன்படுத்தும் அர்த்தத்திற்கு உண்டான முதன்மையான தமிழ்ச்சொல் ‘பேதைமை’ என்பது. பேதைமை கொண்டோர் ‘பேதைகள்’ ஆவர். 
உண்மையில், ‘முட்டாள்’ என்போர் ‘பல்லக்கு பயணங்கள்’ நிறைந்திருந்த காலத்தில் பல்லக்கு தூக்கிகளாக இருந்தோராவர். பல்லக்கை தூக்குவது ‘முட்டுக் கொடுப்பது’ என்றழைக்கப் பட்டதால் முட்டுக் கொடுப்போர் முட்டு+ஆட்கள் ஆயினர். பின்னர் சுயசிந்தனையின்றி ஏவலுக்கு வேலை பார்ப்போர் முட்டாள்கள் ஆயினர். கொஞ்சம் கொஞ்சமாக சுயசிந்தனையின்றி செய்யும் காரியம் முட்டாத்தனமாயிற்று. செய்பவர்கள் முட்டாள்கள்.
- நமது இயக்குனர் பாக்கியராஜ் சிறந்த அறிவாளி. அவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்பதுடன் சிறந்த குட்டிக்கதை சொல்லி எனும் புகழும் அவருக்கு உண்டு. அவர் நடத்தும் பாக்யா இதழின் கேள்வி-பதில் பகுதியில் அவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு கேள்விக்கும் சிறு சிறு கதைகள் சொல்லி விடையளிப்பது சுவாரசியமாக இருப்பதோடு அறிவுக்கும் விருந்தளிக்கும். 
ஒரு முறை முட்டாள்கள் யார்? அறிவாளி யார்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவாளி என்றெல்லாம் யாரும் கிடையாது. உலகில் மூன்று வகை முட்டாள்கள் தான் இருக்கிறார்கள். முதல்வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என அவர்களுக்கு தெரியாது, ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் தெரியும். இவர்கள் முட்டாள்கள். இரண்டாம் வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று அவர்களுக்கும் தெரியும், அடுத்தவர்களுக்கும் தெரியும் இவர்கள் பொதுவானவர்கள். இறுதிவகையானவர்கள் முட்டாள்கள் என தங்களுக்கு தாங்களே தெரிந்த வைத்திருப்பர். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்திருப்பர். இவர்கள் அறிவாளிகள் என்றழைக்கப்படுகின்றனர் என்று பதிலளித்திருந்தார்.
- பகுத்தறிவு மட்டுமின்றி சாதாஅறிவும் கூட பிறப்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனால்தான். கேள்வி-பதில் வடிவில்;தான் ‘கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்’ அவர்களின் தத்துவங்களை அவர்தம் சீடர் ‘பிளாட்டோ’ பரப்பினார். பிளாட்டோ எழுதிய ‘அரசியல்’ எனும் ‘அறிவு இயல் புத்தகம்’ நண்பர்களிடையே நெஞ்சு பொறுக்காமல் நேர்படப்பேசிய தத்துவ அரட்டைகளினூடே எழுந்த கேள்வி பதில்களின் தொகுப்பே. 
தத்துவ அரட்டைகள் என்று வந்துவிட்டால் நண்பர்களிடையே கூட ‘அதுவா? இதுவா?’ என்பது போய் ‘நீயா? நானா?’ என்றாகிவிடும். இதுவே எதிரிகள் என்று வந்துவிட்டால் கேட்கவா வேண்டும்? 
- ஆரம்பகால ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டே இருந்தன என்பதைக் கண்டோம். இத்தகு ஆயுதப்போர்கள் மெல்ல... மெல்ல.. தத்துவமும், கண்டுபிடிப்புகளும் வளர வளர.. அறிவுப் போர்களாவும் மாறின. ஒருவர் கண்டுபிடித்த ‘அறிவியல் உண்மைகளை’ பிறர் தவறு என்று நிரூபித்தனர். மற்றவர் கண்டுபிடித்த ‘விஞ்ஞான மெய்யை’ இவர்கள் சுத்த டூபாக்கூர் என்று சொல்லினர். இப்போட்டிகள் ஒருவருக்கொருவர் அறிவாளி ஆவதின் வேகத்தைக் கூட்டவும், பிறரை முட்டாள்கள் ஆக்கியதின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வைத்தன. அப்படி கொண்டாடிய தினத்தை ‘முட்டாள்கள் தினம்’ என்றனர்; என்ற கதையும் உண்டு.

கி.பி.1562 ஆண்டளவில் கிரிகோரியன் காலண்டர் வந்தது. அதற்கு முன்னரே 1500 வாக்கிலேயே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கு சான்றுகள் உண்டு எனவும், இதே காலகட்ட ‘டச்சு மொழி’ இலக்கியங்களில் கூட முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டதற்கான குறிப்புகளும் உண்டு எனவும், 1466ல் மன்னர் பிலிப்பை அவரது அரசவை அமைச்சர் ஒருவர் சொற்போரில் வென்று முட்டாளாக்கிய தினமும் ஏப்ரல் ஒன்று எனவும்,இவை யெல்லாம் முட்டாள் தினத்திற்கான காரணங்கள் எனவும் கதைகள் சொல்லப்படுகிறது. 
கதைகள் என்னவாயிருந்தாலும்... எதையும் கொண்டாடவும் ஒரு குடுப்பினை வேண்டும். ஜனநாயகத்தின் மன்னர்களை, அமைச்சர்கள் நாள்தோறும் முட்டாளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் நாம் கொண்டாடிக் கொண்டா இருக்கிறோம்?!!

Wednesday, April 1, 2015

காலண்டர் கதைகள் - முட்டாள்கள் தினம்

ஆரம்ப கால இலண்டனில் ஒரு முக்கிய நாளினை மையமாகக் கொண்டு மற்ற நாட்களைக் குறிப்பிட்டனர் எனக் கண்டோம். நம் கிராமங்களிலும் அதே பழக்கம் இன்றும் ஒரு இயல்பாக இருப்பது ஒரு ஆச்சர்ய ஒற்றுமை.
இரவின் இருட்டில் முழுக்க கதவடைத்த படுக்கையறையின்; மேற்கூறையில் ரேடியம் ஓவியங்களாய் ஒளிரும் நட்சத்திரங்களையும், வளர்ந்து தேயாத நிலவின் அழகையும் ரசித்துக் கொண்டு உறங்கச் செல்லாமல், நிஜமாகவே வான் நிலவிற்கு நெருக்கமாக வாழும் நம் மக்களுக்கு அம்மாவாசையும், பௌர்ணமியும் மாதத்தின் முக்கிய நாட்கள். அதற்கும் மேலாக உள்ளூர் விழா நாட்கள், வீட்டு விசேச நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் ரம்ஜான், கிரிஸ்மஸ் போன்ற பொதுப் பண்டிகைகளும் முக்கிய நாளாகின்றன.
இம்முக்கிய நாட்களைக் கொண்டு, “போன பௌர்ணமிக்கு ரெண்டு நாள் இருக்க மாடு கன்று போட்டுச்சு” என்றோ.. “ அம்மாவாசக்கு மறுநா பெரியாத்தா செத்துப்போச்சு” என்றோ.. “ரெண்டு வருசத்துக்கு முன்ன தீபாவளிக்கு பெஞ்ச மழ.. அதுக்கப்பறம்.. அந்த மாதிரி மழ இல்லியேப்பா” என்றோ.. “வர்ற பொங்கலுக்கு மறுவாராம் என் பொன்னுக்கு கல்யாணம் வச்சிரலாம்னு இருக்கேன்”; என்றோ.. வெகு இயல்பாக சொல்வதை கவனித்திருக்கலாம்.
இத்தகு சொல்லாடலில், தேதி, கிழமை பற்றிய பிரக்ஞை பெரும்பாலும் இருப்பதில்லை. பேசுவோர்க்கு.. ஒரு நினைவிற் கொள்ளத்தக்க முக்கிய தினமும், அதனை ஒட்டிய தங்கள் வாழ்வின் நிகழ்வும் உணர்வோடு ஒன்றி அவர்கள் வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத நினைவுகளாகின்றன. இவர் போல் அல்லாமல், தேதியைக் குறித்துக் கொள்ளுவோர் சம்பவங்களை நினைக்க தாங்கள் எழுதிவைத்த குறிப்பேடுகளை தேட வேண்டியிருக்கிறது.
எந்த ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவே தன்முன்னிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நினைவிற்கொள்ள ஏதுவாய் இருக்கிறது என்பது  மட்டுமின்றி, அவர்கள் வாழ்வை, உணர்வை இத்தகைய சொல்லாடல்கள் தாங்கி நிற்கின்றன. மேலும் இன்றும் கிராமத்து மக்களின் புழங்கும் ஒரு வழக்கத்திற்கும் அன்றைய ஆங்கில சம்பிரதாயத்திற்குமான தொடர்பு சிலவற்றை உணர்த்துகிறது. வரலாற்றினை ஆய்ந்து உரைக்கையில், பதிவுபெற்ற ஆவணங்களின் அடிப்படையில் தான் அனைத்து தெரிவுகளும் தெரிவிக்கப்படுகிறது என்பதில்லை. சிலவை உணர்வுகளைச் சார்ந்தும் யூக அடிப்படையில் நிறுவப்படுகிறது. இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், நமது கட்டுரையிலும் இவையெல்லாம் பின்னர் தேவைப்படுகிறது என்பதால்தான்.
இப்போதைக்கு, கொண்டாட்டதினங்கள் மறப்பதிற்கில்லை என்பதையும், அதை ஒட்டிச் சொல்லப்படும் நிகழ்வுகளும் மறப்பதற்கில்லை என்பதையும் எடுத்துக் கொள்வோம். இன்றைக்குக் கூட ஒரு கொண்டாட்ட தினம்தான் “ஏப்ரல் முட்டாள்கள் தினம்”. திட்டமிட்ட எவ்வித அரசு அல்லது மதம் சார்ந்த கொண்டாட்ட தினமாக இது இல்லாவிட்டாலும் பள்ளிப்பருவத்தில் நமக்கு அறிமுகமான இந்த தினத்தில் நண்பனின் சட்டையில் இங்க் அடித்து நமது சட்டையில் இங்க் வாங்கி கொண்டாடப்பட்டது எப்படி மறக்கும்.
எனக்கு ஒரு பழைய ஜெமினி கணேசன் படம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அப்படத்தில் ஜெமினிக்கு இரு தாரங்கள். ஒருவர் வீட்டிற்குச் ஜெமினி செல்வது மற்றொருவருக்குத் தெரியாது. இருதாரங்களுக்கும் ஆளுக்கொரு பிள்ளைகள். இருவரும் நண்பர்கள். ஒருவன் வீட்டிற்கு மற்றவன் செல்லும் நாளன்று ‘ஏப்ரல் ஒன்று’ எனும் முத்திரையை மற்றொரு நண்பன் குத்திவிடுவான். பின்னர் வரும் ஜெமினியின் முதுகிலும் குத்திவிடுவான். இரண்டு சட்டையிலும் விழுந்த முத்திரையின் ஒற்றுமையையும் துவைக்கையில் மனைவி பார்த்துவிட்டு ஜெமினியையும் கேள்விகேட்டு துவைப்பது போல் காட்சி வரும்.
நமது தமிழ்ச் சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் இருக்கும் வரை ஏப்ரல் ஒன்று கலகலத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதெல்லாம் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் ஞாபகத்திற்கு வருகின்றன. இன்னொரு நகைச்சுவையான முரண் என்னவென்றால், ஏப்ரல் ஒன்று அன்றுதான் அனைத்துக் வியாபார ஸ்தாபனங்களிலும் தங்கள் ஆண்டு வரவு செலவிற்கான கணக்குப்பதிவினைத் தொடங்குகிறார்கள் என்பதுதான். யாரை முட்டாளாக்கப் பாக்குறாங்களோ?
- நாம முட்டாள் தினத்தின் ஆரம்ப வரலாற்றைப் பார்த்தோமானல், அது கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டில் தொடங்குகிறது. ஸ்காட்லாந்து கி.பி. 1660லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700 வாக்கிலும், இங்கிலாந்து 1752லும் ‘போதகர் கிரிகோரிஸின்’ காலண்டரை அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னரே இறுதியில் பிரான்ஸ் 1852ல் ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் அதுவரை புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்த ‘ஏப்ரல் 1’ கைவிடப்பட்டு ‘ஜனவரி 1’ புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது. அரசாங்கங்கள் இதை ஏற்றுக் கொண்ட சூழ்நிலையிலும் இதனை எற்காத சிலர் தொடர்ந்து ‘ஏப்ரல் 1’ஐ யே புத்தாண்டு தினமாக கொண்டாடினர், அந்த ஜீவிகளை “ஏப்ரல் முட்டாள்கள்” என்றும் அத்தினத்தை “முட்டாள்கள் தினமா”கவும் கொண்டாடுகின்றனர்.
‘தீபாவளி’க்கு காரணமாக, அன்று நரகாசுரனைக் வதம் செய்த தினம் என்ற கதை இருப்பது மட்டுமல்லாமல், வேறு சில கதைகளும் உலவுவது போல் முட்டாள்கள் தினத்திற்கும் மேற்சொன்னதை தவிர இன்னும் சில கதைகளும் உலவுகின்றன. அது...

Thursday, March 26, 2015

காலண்டர் கதைகள் - பெயர்க்காரணம்

நாம் காணும் எல்லாவற்றையும் பெயரிட்டழைக்கிறோம். பெயரில்லாத ஒன்றை நான் சந்தித்ததாக எனக்கு நினைவில்லை. பெயருக்கும் - பெயரிடப்பட்டவற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒன்றின் தோற்றம், குணம், செயல் போன்ற காரணிகளில் இருந்தோ அல்லது அவற்றைக் குறிக்கும் பொருட்டோதான் பெயரிடப்படுகிறது. 
“எங்க ஊர்ல ‘சிரஞ்சீவி’ன்னு ஒருத்தர் இருந்தாரு.. சின்ன வயசிலயே செத்துப்போயிட்டாரு, இதுக்கு என்ன சொல்றன்னு எல்லாம் நீங்க கேட்கக்கூடாது – (அவர் இன்னும் உங்கள் நினைவறையில் சிரஞ்சீவியாக இருக்கிறார் அல்லவா?) ” அது போக, கருப்பாயிருப்பவருக்கு வெள்ளச்சாமி என்ற பெயர், என்பன போன்ற முரண்கள் இங்கு பேசு பொருள் அல்ல. அவர்கள் அனைவருக்கும் சேர்த்து மனிதன் என்று பெயர். இங்கு மனிதன் அல்லாதவற்றின் பெயர்களைப் பேசுவோம். அவற்றின் பெயர்களுக்கு மேற்சொன்ன காரணிகளே, காரணங்கள்! அது போல்தான் காலண்டருக்கும்.
இக்கட்டுரைத் தொடரில் நாட்காட்டி என்பதிற்குப் பதிலாக காலண்டர் என்ற பதத்தை பயன்படுத்தியதைப் பற்றிப் பேசுவோம் என்றிருந்தேன். அதாகப்பட்டது, நாட்காட்டி என்ற பதம் வெறுமனே ‘நாட்களை சுட்டும் பட்டியல்’ என்பதாகப் படுகிறது. ஆனால், காலண்டர் என்பது - மணித்துளி, நாழிகை, ஓரை, குளிகை, பொழுது, யோகம், நோக்கு, லக்னம், சூலம், கரணம், பட்சம், நாள் (அ) திகதி, திதி, நாள்மீன் (நட்சத்திரம்), பிறை, வாரம், மாதம் மற்றும் ஆண்டு உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது. ஆகவேதான் ‘தமிழ் நாட்காட்டி’ என்பதற்கு பதிலாக ‘தமிழ்க்காலண்டர்’ என்ற பதத்தை பயன்படுத்துகிறேன்.
காலண்டர் - என்பது ஆங்கிலச் சொல்லும் அல்ல. அது ‘காலண்ட்’ kalend எனப்படும் இலத்தீன் மொழிச்சொல்லாகும். ‘காலண்ட்’ என்றால், ‘கணக்கில் எடுத்துக் கொள்வது’ எனவும் ‘ஆரம்பம்’ எனவும்; பொருள். ஆரம்பகால காலண்டரின் முதல் தேதிக்கும் ‘காலண்ட்’ என்பதே பெயராகும். சுலபமாக சொல்வோமானால் End என்றால் முடிவு. Kalend என்றால் ஆரம்பம். ஆக, ‘காலண்ட்’ ல் துவங்குவதே காலண்டர். 
மாதத்தில் முக்கிய நாட்கள் மூன்று. –(உடனே, அந்த மூன்று நாட்களை நினைக்கக் கூடாது. இது வேறு)– அதாவது, ‘காலண்ட்’ Kalend , ‘நோநஸ்’ Nonus மற்றும் ‘இடஸ்’ Idas.
1. ‘காலண்ட்’ என்பது மாதத்தின் முதல் நாள்.
2. ‘நோநஸ்’ என்றால் இலத்தின் மொழியில் ‘ஒன்பது’ Nine(9) என்பதைக் குறிக்கும். காலண்டர் நடைமுறையில், 30 நாட்களைக் கொண்ட மாதங்களில், 6-ம் தேதியையும், 31 நாட்களைக் கொண்ட மாதத்தில் 7-ம் தேதியையும் குறிக்கும்.
3. 30 நாட்களைக் கொண்ட மாதத்தில் 15-ம் தேதியும், 31 நாட்களைக் கொண்ட மாதத்தில் 16-ம் தேதியும் - ‘இடஸ்’ என்னும் இடை நாள். கணக்கின்படி, ‘இடஸ்’க்கு முந்தைய 9ம் நாள் ‘நோநஸ்’. 
இம்மூன்று நாட்களைக் கொண்டுதான் மீதி நாட்களையும் குறிப்பிட்டனர். நிகழ்வுகளைப் பதிந்து கொண்டனர். ஷேக்ஸ்பியரின் ‘ஜுலியஸ் சீசர்’ காவியத்தில், ‘சீசருக்கான இறுதி எச்சரிக்கை’ ஒரு மார்ச் மாத நோநஸ் தினத்தில் வரும் என்பது குறிப்பிடத் தகுந்த காட்சி. 

அந்தக்கால ஆங்கிலேயர்கள், நாட்களையோ நேரத்தையோ குறிப்பிட, அதன் முக்கிய பிரிவிலிருந்து.. இவ்வளவு தூரத்தில் உள்ளது எனக் குறிப்பிடுவது சம்பிரதாயம். உதாரணமாக, தற்பொழுது 11.30 மணியை Eleven Thirty என்று கூறுகிறோம். அவர்களோ, Half Past Eleven என்று குறிப்பிடுவார்கள். 11.45 மணிக்கு Eleven Fortyfive என்று குறிப்பிடாமல்  Quarter to Noon என்றோ Quarter to Midnight என்றோதான் குறிப்பிடுவார்கள். பள்ளிப்பாடத்தில் ஆங்கிலத்தில் நேரங்களைப் பற்றிப் படித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே வழக்கப்படி நாட்களையும்..
-முதல் தேதியை காலண்ட் என்றும்
-இரண்டாம் தேதியை நோநஸ்க்கு முந்தைய 5ம் நாள் என்றும்
-மூன்றாம் தேதியை நோநஸ்க்கு முந்தைய 4ம் நாள் என்றும்
….
-ஆறாம் தேதியை நோநஸ் என்றும்
-ஏழாம் தேதியை இடஸ்க்கு முந்தைய எட்டாம் நாள் என்றும்
-புதினாறாம் தேதியை இடஸ் என்றும்
பதினேழாம் தேதியை காலண்டிற்கு முந்தைய பதினைந்தாம் நாள் என வரிசையாக தொடர்ந்து மீண்டும் காலண்ட் இல் ஆரம்பமாகும் இப் பட்டிலை ‘காலண்டர்’ எனவும் குறிப்பிட்டனர்.

Friday, March 20, 2015

காலெண்டர் கதைகள் - ஆங்கில காலெண்டர்

காலண்டர்களைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆரம்பிக்கையில், நாம் முதலிலும் முக்கியமாவுகம் தெரிந்து கொள்ள வேண்டியது, நாம் முக்காலே முழுவீதம் அன்றாடம் புழங்கும் ஆங்கிலக்காலண்டர்கள் தானல்லவா?
மாநகரத்தின் பிரதான சாலையாகட்டும்.. மாநில நெடுஞ்சாலையிலிருந்து கிளைத்து நீளும் மண்சாலையின் முடிவில், தனித்திருக்கும் குறுங்கிராமமாகட்டும்.. இரவெல்லாம் விழித்திருந்து.. நேரம்பார்த்து.. என் இனிய தமிழ் மக்கள் அனைவரும் Happy New Year சொல்லி வரவேற்று வாழ்த்துப்பாடி ஜனவரி முதல் தேதியில் துவங்கும் ஆங்கிலப்புத்தாண்டு துவங்கியது கிரேக்கத்தில்.
கிரேக்கர்கள் பயன்படுத்திவந்த ஆரம்பகால காலண்டர்களில் பல்வேறு சீர்திருத்தங்களைப் புகுத்தி.. தற்போது நடைமுறையில் இருக்கும் காலண்டர்களுக்கு நெருங்கிய வடிவத்தில் கொண்டு வந்தவர்கள் ரோமானியர்கள். கிரேக்கர்களின் கடவுள் பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்த மாதங்களுடன் ரோம சாம்ராஜ்யத்தின் மாமன்னர்களான அகஸ்டஸ் சீசரும், ஜுலியஸ் சீசரும் உள் நுழைந்ததெல்லாம் அவர்களின் தாங்களே அமைத்துக்கொண்ட சீர்திருத்தங்களினால்தான்.
தத்துவ விசாரங்களிலும், வீரத்திலும் மேம்பட்டிருந்த கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்த காலண்டரின் ஆரம்பவேர் உண்மையில்… அதிசயமான கட்டுமானங்களையும், வியத்தகு வானியல் அறிவையும், மனிதன் இறந்தும் கூட ஆயிரம் ஆண்டுகளாய் உடல் கெடாமல் ‘மம்மி’யாக வைத்து காக்குமளவிற்கு அறிவியலும், மருத்துவ அறிவையும் பெற்றிருந்த எகிப்திய நாகரீகத்தில் தான்.
நமது சிந்துவும், சீனாவின் மஞ்சளாற்று நாகரீகமும் இருந்த காலத்தில் தோன்றி.. இன்றளவும் நிலைத்து நிற்கும் ஸ்பிங்ஸ், பிரமிடு என பிரமிக்க வைக்கும் கட்டுமானங்களை நமக்களித்த எகிப்து நாகரீகம்தான், பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட காலண்டரின் ஆரம்ப வித்தை விதைத்தது.
எகிப்து நாகரீகத்தின் அடிப்படை வாழ்வாதாரமான நைல் நதி, மிகுந்த வெள்ளத்தை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் எகிப்தியர்கள் வாழிடங்களில் பெருக்கி.. வாழ்வின் சோதனைக் கலனாகவும் விளங்கியது.  இதனை உணர்ந்த எகிப்தியர்கள் நதி பெருக்கெடுக்கும் கால கட்டங்களில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பருவகாலங்களை குறித்துக் கொண்டார்கள். பருவ காலங்கள்; சுழற்சியில் வருவதை உணர்ந்து குறித்துக்கொண்ட எகிப்தியர்கள் ஆரம்பகால காலண்டர்களை நமக்கு வழங்கினர். இக்காலண்டர்கள் நான்கு பருவங்கள் கொண்டதாகவும் சூரியனை அடிப்படையாக (Solar Calendars) கொண்டதாகவும் ஆகும்.
கடவுள் நம்பிக்கையும், யூக அறிவும், வலிமையும் பெற்றிருந்த கிரேக்கர்கள் தற்போதைய நாற்காட்டியின் வழிகாட்டியாக இருந்ததில் வியப்பில்லைத்தானே! நாம் தற்போது பயன்படுத்தி வரும் காலண்டருக்கு சற்றேரக்குறைய ஒரே மாதிரியான காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தனர்.  ஏகிப்தியர்களின் சூரிய காலண்டரை கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தாலும் அவர்களின் காலண்டரில் பருவகாலங்கள் மட்டுமின்றி, மாதங்களும் இருந்தன.
‘மார்ட்டியஸ்’ என்பதில் துவங்கி ‘பிப்ரவோரியஸ்’ மாதத்தில் முடிவடைந்த ஒவ்வொரு மாதத்திற்கும் கடவுளரின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன.
ரோமானியர்களும், கிரேக்கர்களும் - கி.மு. 146 இல் 'ரோமர்' முழுவதுமாக கிரேக்கத்தை கைப்பற்றும் வரை - அடிக்கடி போரிட்டுக்கொண்டனர். போர் பெரும்பாலும் ஆண்டு முழுவதும் நடந்தது. பருவகாலங்களின் அடிப்படையில் போரிடும் முறையில் மாற்றங்களும் ஏற்பட்டன. போர்முறைகளில் தந்திரங்களும் பெருகிவந்தன. அவற்றில் தலையாயது காலங்கருதி போரிடுவதுதான். இதனால் பல நுட்பான குறிப்புகளும் கால அட்டவனையில் ஏறின. வானியல் சாஸ்திர அறிவும் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் அதிகரித்து வந்த காலத்தில் அதன் அனைத்து மாற்றங்களையும் காலண்டர் ஏற்றிக்கொண்டது.
ரோம சாம்ராஜ்யம் ஐரோப்பா முழுமையையும் தன் ஆளுமைக்கு உட்படுத்தியிருந்த காலகட்டத்தில் இப்போதைய காலண்டரின் இறுதிவடிவம் எட்டியது எனலாம். தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் தங்களின் அனைத்து சம்பிரதாயங்களையும் நடைமுறைப்படுத்திய ரோமானியர்கள் தாங்கள் உருவாக்கிய காலண்டரையும் அன்றாட மக்களின் புழக்கத்தில் வழக்கப்படுத்தினர். ரோமானியர்களே ஜெருசலம், பெத்தகேமில் தோன்றிய புதிய மதமான கிருஸ்தவ மதத்தையும் ஐரோப்பா முழுவதும் பரப்பியது.
கிருஸ்தவமதம் காலண்டர் கணக்குகளையும் தனது வழிபாடுகளையும் ஒரு சேர கணித்துக்கொண்டது. இயேசு கிருஸ்து வாழ்ந்த காலத்தை கொண்டு கி.மு., கி.பி. என ஆண்டினை குறியிடத்துவங்கியது. காலண்டரின் வளர்ந்து வரும் போக்கினை எல்லாம் உள்வாங்கி ஒரு இறுதி வடிவம் தந்தது. தற்போதைய திருத்தப்பட்ட காலண்டரை அறிவித்தது கிறிகோறிஸ் என்ற பாதிரியார் தான். தற்போது நாம் பயன்படுத்தி வரும் ஆங்கில காலண்டருக்கு ‘கிறிகோறிஸ் காலண்டர்’ என்ற பெயரும் உண்டு. ரோம் பரப்பிய கிருஸ்தவம் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும், பிறகு உலகெங்கும் வியாபித்தது போல காலண்டரும் பரவி நமது பயன்பாட்டிற்கு வந்தடைந்தது.

Wednesday, March 11, 2015

காலண்டர் கதைகள் - அறிமுகம் 2

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு.. அப்போதைய முதல்வர் கலைஞர் சட்டப்பேரவையில் தமிழர்களின் ஆண்டுத் துவக்கம் தை மாதமே. சித்திரை மாதமல்ல என அறிவித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களும் விவாதங்களும் மேடை தோறும் நிறைவேறின. தையே என்போரும் சித்திரையே என்போரும் மாறிமாறிச் சொற்போர் தொடுத்துவந்த சூழலில், நாமும் சும்மா நிற்போர் என்றிராமல், ஏற்போர் ஏற்க்கட்டும் எனத்துணிந்து, எளிமையாய்க் கற்போரும் உணர இவ்விவாதங்களை ஆதாரங்களுடன் அடுக்கி அளிக்கலாம் என்ற எண்ணத்தின் விளைவே இக்கட்டுரை. 
பொதுவாக, தினம் தினம் எதைக் கிழிக்கிறோமோ இல்லையோ காலண்டர் தாளைக் கிழிக்கிறோம். அதற்கு ஈடாக காலண்டரும் நம் வாழ்வின் சிறு பகுதியை நாள்தோறும் கிழித்து விடுகிறது. 
- சூரியன் மற்றும் சந்திரனின் அடிப்படையில் கொண்ட நாள் காட்டிகள், மக்கள் தங்கள் ஆதிகாலப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட நாள்காட்டிகள், இதர இயற்கை மற்றும் வானியல் குறிப்புகளை உடைய நாள்காட்டிகள் என உலகெங்கிலும் மக்கள் தங்கள் தங்கள் சூழல்களுக்கும் தேவைகளுக்கேற்ப பல்வேறு விதமான காலண்டர்களைப் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டைப் பொருத்த மட்டிலோ சொல்ல வேண்டியதே இல்லை. வேற்றுமையிலும் ஒற்றுமை என விந்தை பொங்கும் எந்தையர் நாட்டில் மொழிக்கு ஒரு காலண்டர். இனத்திற்கு ஓரு காலண்டர். தினத்திற்கு ஒரு காலண்டர். பயன்பாட்டின் அடிப்படையில் பேர் பெற்ற காலண்டர்களும் உண்டு. பேருக்கு என்றிருக்கும் காலண்டர்களும் உண்டு.
நமது வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளும் காலண்டர் எண்களுடன் பின்னிப் பினைந்தே இருக்கின்றன. ஒரு நன்நாளில் தான் குழந்தை பிறக்கிறது. அடுத்தடுத்த தேதியின் படியே பெற்றெடுத்த குழந்தையின் வளர்ச்சிப் படி. பள்ளி செல்வதும் நல்லதொரு நாளில். கல்லூரிக் காலமும், வேலையில் சேருவதுவும் சுபவேளையில் அல்லவா? சுபயோக சுபதினத்தில் தானே திருமணம்? பின் யாதொரு நிகழ்வையும் காலண்டர் கணக்கில் காட்டாமல் குறிப்பிட இயலாதல்லவா? மரணித்துப் போவதையும் மார்க் செய்து கொள்கிறது காலண்டர். 
விஞ்ஞானமும், விவசாயமும் காலண்டரை விட்டு விட்டா கணக்குத் துவங்குகிறது? மழை மாரியும், மறிகடற் சீற்றமும், மண்ணுள்ள பிறவும் காலண்டரின் கட்டங்களுக்குள் தானே நாம் கட்டி வைத்துக் கொள்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு அசைவிலும் இசைவாயுள்ள காலண்டரைப் பற்றித்தான் என்னென்ன கதைகள்? என்னென்ன செய்திகள்? 
அத்தகு கதைகளில், செய்திகளில் தான் என்னென்ன சுவாரசியங்கள்? 
நம்ஊர் காலண்டரில் துவக்கப் பிரச்சனை என்றால்.. அமெரிக்க ஆதி வாசிகளான மாயன் இனத்தவரின் காலண்டரில் முடிவதில் பிரச்சனை. 
ஐரோப்பியர்கள் செல்ல விலங்குகளுக்கு நாட்களின் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்றால்.. சீனர்களோ வருடங்களுக்கு விலங்குகளின் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
உலகெங்கும் ஒரே காலண்டர் பயன்படுத்தபட்டு வரும் அதே வேளையில்.. தனி ஒரு மனிதருக்கான செயல்பாட்டுச் சுழற்சிக் காலண்டரும் உண்டு.
இன்னும் இன்னும் விழி விரிய சுவாரசியங்களை விவரித்துக்கொண்டே போகலாம்.. ‘ஏப்ரல் ஃபூல்’  முதல் ‘டிசம்பர் கூல்’ வரை ஏராளமாக சரக்கிருக்கிறது இக் காலண்டர் கதைகளின் ஊடே.  அவற்றையெல்லாம் இனி ஒவ்வொன்றாக இறக்கிவைக்கிறேன். தொடர்ந்து நீங்களும் நன்றென்றால் தட்டிக்கொடுத்தும், தவறென்றால் சுட்டிக்கொடுத்தும் என்னோடும் இக்கட்டுரை முழுக்க பயணிப்பீர்கள் எனும் நம்பிக்கையில்..

Wednesday, March 4, 2015

காலண்டர் கதைகள் - அறிமுகம் 1



நன்றி கூறி முடிப்பதுதான் வழக்கமென்றாலும்.. வழக்கமானதைச் செய்வதுதான் நமக்கு வழக்கமில்லையே! எனவே நன்றி கூறி ஆரம்பிக்கிறேன். நான் நன்றி கூறுவது திரு.வதிலைபிரபா அவர்களுக்கு. அவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.
நான் என்னைக் கண்டுபிடிக்க வைத்தவர் பிரபா அவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பன் ஆனந்தபிரகாஷ்  மூலம் அறிமுகமாகிய தினம் முதல் பல்வேறு காலகட்டங்களிலும் எனது தொய்விலும், எழுச்சியிலும் இன்று வரை உடன் இருப்பவர். எனக்கு சமகால சிற்றிதழ்கள் உலகில் மெல்லிய அறிமுகம் இருக்குமென்றால் அதற்கு முழுமுழுக் காரணம் வதிலைபிரபா அவர்கள் தான்.
பல்வேறு கருத்து வேறுபாடுகளும், சிறுஊடல்களும் எங்களின் நட்பு வெளியில் நட்சத்திரங்களாய்ச் சிதறிக்கிடந்தாலும், அவர் மீதான அன்பெனும் சூரியன் முன் அவை எம்மாத்திரம்?
அது இருக்க, இந்த உரை நான் இனி தொடந்து இங்கே எழுதப்போகும் காலண்டர் கதைகளின் அறிமுக உரை.
காலண்டர் கதைகள் ஏற்கெனவெ 2010 வாக்கில் மகாகவி மாத இதழில் தொடர் கட்டுரையாய் வந்தவைதாம். அதுவும் ஒருமுறை திரு.வதிலைபிரபா அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் நான் கூறிய விசயங்களைக் கொண்டு, இதை ஏன் நீங்கள் தொடர் கட்டுரையாக எழுக்கூடாது எனக்கேட்டு அதற்கு தளமும் அமைத்துக் கொடுத்து, மாத மாதம் நான் எழுதத் தாமதிக்கும் போதெல்லாம் தாயன்புடன் பொறுத்திருந்து அன்பாய் அவர் வெளியிட்ட கட்டுரை தொடர்.
எனவே, நானும் எழுதுவேன் என நம்பிக்கைதந்து, எழுத பயிற்சியும் தந்து, எழுதவும் வைத்து, எழுதியதை வெளியீடும் செய்தளித்த திரு.வதிலைபிரபா அவர்களுக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறேன்.
காலண்டர் கதைகள் தொடர் கட்டுரையாக வந்தது என்று சொன்னேன். பல்வேறு காரணங்களாய் ஏழு எட்டு கட்டுரைகளுக்குப்பிறகு அது தொடர்ந்து மகாகவி மாத இதழில் வரவில்லை. சிற்றிதழ்களுக்கான பெருமையே அது விட்டு விட்டு வந்தாலும் ஒரேடியாக விட்டுவிடாமல் இருப்பதுதான். அப்பெருமையே நீண்ட காலம் விட்டு இனி இணையம் வாயிலாக தொடரப் போகும் இக்கட்டுரையும் ஏற்கிறது.
காலண்டர் கதைகள் என்பது, உலகலாவிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரப் பிரிவினரிடையே புழக்கத்தில் இருந்த, இருக்கும் காலண்டர்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றிக் கிடையேயான தொடர்புகளைப் பற்றிய ஆய்வும், நமது தமிழ்க்காலண்டரின் ( நாள்காட்டி தான் அய்யாக்களே.. காலண்டர் என்னும் சொல்லின் பொருள் நாட்காட்டி என்பதைக் காட்டிலும் சற்று விசாலமாக இருப்பதாக தோன்றுவதாலும் ( எவ்வாறு காலண்டர் நாட்;காட்டியை விட விசாலம் என்று கட்டுரையினுள் கண்டிப்பாக ஆயப்படும், அய்யா!)  பெரும்பாண்மை சாமாண்யர்களின் புழக்கத்தில் உள்ளதாலும் - தமிழ்க்காலண்டர் ) ஆண்டு துவங்கும் மாதத்தைப் சர்ச்சையின் ஆழமான.. அறிவியல் ரீதியான.. ஆதாரப்பூர்வமான.. தீர்விற்கான தேடல்; நிகழ்த்தும் தொடர் கட்டுரைகள் ஆகும்.
வதிலைபிரபா போன்றோர் தரும் நம்பிக்கையினாலும், எனது ஆர்வமிகுதியினாலும், சிறிதுகாலம் இது குறித்து கொஞ்சம் அறிதல்களுடன் இருந்த காரணத்தினாலும் இக்கட்டுரைத் தொடரை மீண்டும் இணைத்தில் வாயிலாக எழுத ஆரம்பிக்கிறேன்.

எனது தவறுகள் ஏதுமிருப்பின் அதைத் திருத்தும் முகமாகவும், நான் எழுதியதைக்காட்டிலும் அதிகத்தகவல் இருப்பின் அதனைத் தெரிவிக்கும் முகமாகவும் நீங்கள் இடும் கருத்துரைகளை ஆவலுடன் எதிர்பார்த்து ஆரம்பிக்கிறேன்.