முன்னோர்களின் பகல் சிறியது. இரவு பெரியது. பகலில் உணவுத்தேவைக்காக
உழைத்த மனிதன் இரவில் சிந்தித்தான். இரவு நீண்டு பெருத்தது. மாலை மயங்கியதும் மற்ற
விலங்கினங்கள் உறங்க.. மனிதனின் சிந்தனை விழித்துக்கொண்டது. தான் பகலில் கண்ட
ஒவ்வொன்றையும் மறுயோசனை செய்ய ஆரம்பித்தான். புதிதாக தான் கண்ட ஒவ்வொன்றும் அவனை
ஆச்சரியப்படுத்தியது. மனதின் ஆச்சர்யத்தை, உணர்வை அவனால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க
முடியவில்லை. ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டான். மொழி அவனுக்கு உதவியது.
மனித வளர்ச்சியானது அவன் நிமிர்ந்து நடக்க ஆரம்பிக்கையில்
துவங்கியது என்கிறார்கள். உண்மையில் அவன் சிந்திக்கத்துவங்கிய கணத்தில் தான்
துவங்கியது. அந்த சிந்திக்கத்துவங்கிய கணம் என்பது இரவுதான். மாலை மங்கியதும்
மனிதனின் உடலுக்கான வேலை நின்றுவிடுகிறது. அவன் படுக்கைக்குச் செல்கிறான். மனிதன்
படுத்தவுடன் தூங்கிவிடுவதில்லை. அவன் படுத்தவுடன் அவன் சிந்தனை
விழிக்கத்துவங்குகிறது. தூக்கமற்ற மனிதன்தான் தன் தேவைக்கேற்ப புதுப்புது
கண்டுபிடிப்புகளைத் துவங்கினான். புதுப்புது சிந்தனைகளை முன்வைத்தான். இப்போதும்
புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் இசையை இரவில் அமைப்பதை காண்கிறோமே!
இப்படி இரவில் யோசிக்கத்துவங்கிய மனிதன் அவன் கண்ணெதிரே விரிந்து
பரந்து கிடக்கும் வானத்தைக் கூர்ந்து நோக்க தவறினான் இல்லை. அதன் அசைவுகளை
கவனித்தான். ஒவ்வொன்றையும் குறிப்பெடுக்கும் பழக்கமும் அவனுக்கு அதிக வலிமை
சேர்த்தது. அதிசயங்கள் நிறைந்த வானமண்டலம் மனிதனிக் குறிப்புகளில்
பதிவேறத்துவங்கியது.
சுமேரியர்களும், விவசாயத்தைக் கண்டனர். கட்டிடங்களைக் கண்டனர்.
வாழ்கை நடைமுறைகளைக் கண்டடைந்தனர். எழுத்தையும் கணக்கையும் கண்டனர் என்பதையும்
தாண்டி அவர்கள் வான சாஸ்திரத்திலும் தங்கள் பங்கை உலகிற்கு அளிக்கத் தவறவில்லை.
அவர்கள் சூரியனின் சுற்றுப்பாதையைக் கணக்கில் கொண்டு ஒரு மண் பாட்டித்தில்
குறிப்பேற்றப்பட்ட ஏடுகளைக் கொண்டிருந்தனர்.
கி.மு.1330 வாக்கில் ஏழுத்துருவாக்கப்பட்ட ஒரு சுமேரியர்களின்
சூரியநாட்காட்டி இப்போதைய ஈரான் ஈராக் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரியனின் சுற்றுப்பாதை, அதன் வெய்யில்
பாதிக்கும் பகுதியின் நீளம் வெய்யிலின் கோணம் போன்றவற்றை துல்லியமாக கணித்து
குறிப்பெடுத்திருக்கின்றனர்.
இது அவர்களின் சூரியனின் பாதைகளைப் பற்றிய குறிப்புத்தானே தவிர
அவர்கள் அதனைக் முறையானா நாட்காட்டியாக பயன்படுத்தினார்களா? என்பதைப் பற்றிய
தெளிவான குறிப்புக்கள் காணப்படவில்லை. அவர்கள் சூரிய வழிபாட்டு முறைகளும்
சந்திரவழிபாட்டை விட குறைவாகவே காணப்படுகிறது.
நாம் முன்பே பார்த்ததுமாதிரி “நன்னா“ என்னும் சந்திரக்கோவிலைக்
கட்டி வழிபட்டனர். இந்த சந்திரனின் வளர்ச்சி மற்றும் தேய்வின் அடிப்படையில்
மாதங்களைக் கணக்கிட்டனர். அவர்களின் மாதத்தின் துவக்கமானது அம்மாவாசைக்குப்பிறகு
முதலில் பிறை தெரியும் நாளில் துவங்குகிறது. சந்திரப்பிறையின் அடுத்த சுற்று
வரும்வரை ஒரு மாதம். அதுவும் சுமேரியர்களின் மாதங்களுக்கான பெயர்களும்
*குறிப்பில்லை. பொதுவாக சுமேரியர்களின் பெரும் பண்பாட்டைப் பின்பற்றியவர்கள் பாபிலோனியர்கள்.
அவர்களின் காலண்டர் மாதங்களே சுமேரியர்களின் காலண்டர் மாதப்பெயர்களாக கருதுவதற்கு
இடமிருக்கிறது.
ஆண்டுகள், மாதங்கள் பற்றிய சுமேரியர்களின் கணக்குகள் இவ்வாறு
இருக்க, வாரங்கள் கிழமைகள் பற்றிய அவர்களின் பதிவுகள் ஆச்சர்யமளிக்கின்றன.
உண்மையில் பதியப்பட்ட அனைத்து பழங்கால நாகரீக ஆவணங்களில் மிகப்பழமையானதாக இப்போது
கருதப்படுவது சுமேரியன் நாகரீக படிமங்கள்தான்.
அவர்களின் அந்த ஆச்சர்யமான வாரச்செய்தி அவர்கள் 5 கிரகங்களை
அறிந்து இருந்ததுதான். அவர்கள் மெர்குரி, வீனஸ், மார்ஸ், ஜுப்பிடர் மற்றும்
சாட்டர் ஆகிய ஐந்து கிரகங்களையும் அறிந்து இருந்தனர். ஆனால், இவற்றின்
இயக்கங்களைப் பொருத்து இவர்கள் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. இந்த கிரகங்கள்
அனைத்தும் பூமியைச் சுற்றிவருவதாக அவர்கள் கருதினர். இந்த ஐந்து கோள்களுடன்
சேர்த்து அவர்களின் நம்பிக்கையின் படி பூமியைச் சுற்றி வரும் சந்திரனும்,
சூரியனையும் சேர்த்து ஏழுநாட்கள் கொண்ட வாரத்தை முதன்முதலில் சுமேரியர்களே
உருவாக்கினர்.
மற்றபடி அவர்களின் முழுமையான காலண்டர் கணக்குகள், இன்னபிற பெயர்கள்
எல்லாம் சுமேரியர்களைப் பின்தொடர்ந்த பாபிலோனிய நாகரீகத்தில் இருந்துதான் நாம்
அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment