Friday, October 23, 2015

அமாவாசையும் அப்துல்காதரும்

“இறக்கும் நாள் தெரிந்து விட்டால், வாழும் நாள் நரகமாகிவிடும்“ என்று சொல்வார்கள். அதனால்தானோ? என்னவோ? ஆண்டவன் நாம் இறக்கும்நாள் எது என்பதை நாம் இருக்கும்நாள் வரை தெரியவிடாமலே வைத்திருக்கிறான்.

ஆனாலும், இறக்கும் நாள் பற்றியும்.. இந்த உலகின் இறுதிபற்றியும் நாம் கேள்விப்படும் விஷயங்களில் மனம் லயிக்கத்தான் செய்கிறது. நமது காலண்டர்கதைகளும் மாயன்காலண்டரைத் தொடர்ந்து இப்போது இஸ்லாமியக் காலண்டரைப் பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்து விட்ட போதிலும்.. “இறுதித்தீர்ப்பினைப் பற்றிய விஷயங்களையே கடந்த ஓரிரு வாரங்களாகவே பேசிக்கொண்டேயிருக்கிறோம். ஆன போதிலும் இறுதித்தீர்ப்பின் விஷயங்கள் இறுதியாகி விடுவதில்லை. இன்னும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

இஸ்லாமிய காலண்டருக்கு வருவோம்.

உலக வரைபடத்தின் மிகச்சரியான மையப் புள்ளியில் அமைந்துள்ளது மெக்கா நகரம். உலகெங்கும் இருக்கும் இஸ்லாத்தை தழுவியவர்களின் புன்னியஸ்தலம். இஸ்லாமிய கோட்பாடுகளின் மையம். இந்த புன்னிய தேசத்தை சுற்றிலும் அமைந்திருக்கும் அரபு நாடுகள் தான் இன்றைய இஸ்லாமிய மார்க்கத்தின் தொட்டில். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து மக்களை நல்வழிப்படுத்தி – காஃபீர்களின் (இஸ்லாத்திற்கும் அல்லாஹ்விற்கும் எதிரானவர்கள்) வசமிருந்து மக்களைக் காப்பாற்றி – இறைவனை அடையும் நல்மார்க்கத்தை உருவாக்கிய திவ்ய பிரதேசம்.

இன்றைக்கு இந்த அரபு நாடுகளிடமிருந்து உலகின் பிற நாடுகள் எல்லாம் பெட்ரோல் வாங்கி கடன் கணக்கு வைத்திருக்கின்றன என்பது மட்டுமில்லாமல் கைமாறு செய்ய இயலாத கணக்குக்கடனும் வைத்திருக்கின்றன. ஆம், இன்றைக்கு நாம் உட்பட உலகமெங்கும் மக்கள் செய்யும் எந்தக்கணக்கிலும் பயன்படும் எண்களின் வடிவத்தை அளித்தது அரபு நாடுகளாகும்.

தமிழ் மட்டுமல்லாது நமது இந்தியாவில் இருக்கும் மொழிகளின் பயன்பாட்டு எண் வடிவங்களும் – உலகின் நாடுகளில் இருக்கும் எண் வடிவங்களும் எளிதில் தத்தம் மொழிக்காரர்களாலேயே புழங்க முடியாத கடின வடிவம் கொண்டவை. 

தமிழ் முறைப்படி எண்களை நாம் “க-ச-ஞ“ என்றுதான் துவங்கி எழுதவேண்டும். அப்படி எழுத நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும். எழுத்தத்தெரியும், தெரியாதது என்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழின் எண் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்றுகூட பலருக்குத் தெரியாத சூழ்நிலைதான் நிலவுகிறது. 


ஆங்கில முறையோ ஆரம்பகாலத்தில் நாம் இப்போது ரோமன் லெட்டர் என்று சொல்லப்படும் I, II, III, IV, V.. எனத்தான் குறிப்பிடப்பட்டு வந்தது. ஐரோப்பிய முழுமைக்கும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். 


அமெரிக்க ஆதிகுடிகளின் எண்களையும்தான் பார்த்தோமே.. இருபதின் அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்துக்களாக! 


சீனம் உட்பட்ட மேற்காசிய நாடுகளும் போன்று விசித்திர சித்திர எழுத்துக்களே இருக்கின்றன.


அரபு எண்கள்தான் 1,2,3.. என்ற வடிவம் கொண்டது. இந்த அரபு எண்கள்தான் இன்று உலகம் முழுக்க பயன்படுத்தி வருகிறோம். 1, 2, 3 என்கின்ற இந்த வடிவத்தில்தான் நமக்கு எண்கள் அறிமுகமாகி – அன்யோன்யமாக உள்ளது. இந்த வடிவத்தைத் தவிர்த்த வேறு உருவத்தில் நமக்கு எண்கள் என்பது அன்னியம் தானே? 

எண்களின் ஆரம்ப காலம் தொட்டு, டிஜிட்டல் டிஸ்ப்ளே காலம் வரை அரபுஎண்களே எல்லாவகையிலும் எளிமையானதாகவும் இயல்பானதாகவும் உலகம் முழுவதும் பயன்படுகிறது. இப்போது மனதினுள் எண்ணிப்பாருங்கள், விரல்விட்டு எண்ணியும் பாருங்கள்.. அரபு நாடுகள் – கணக்கு உலகிற்கு அளித்த பங்களிப்பு எத்துனை அளப்பரியது என்று. 

அப்படியெல்லாம் கணக்குலகிற்கு பங்களித்த அரபு நாடுகள் காலண்டர் விசயத்திலும் கைவிட்டுவிடுமா என்ன? கிரிகோரிஸ் காலண்டருக்கு அடுத்த படியாக உலகெங்கும்.. எல்லாத்தரப்பு மக்களாலும்.. எல்லா மொழி பேசும் மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு காலண்டர் உண்டென்றால் அது அரபுகளின் உலகக்கொடையான இஸ்லாமியக் காலண்டரே!




இஸ்லாம் மதத்தில் பின்பற்றப்படும் காலண்டர் இறைவன் அல்லாஹ் - இறைத்தூதர் நபிகள் (ஸல்) அவர்களின் மூலமாக “உம்மத்“ (உம்மத் - உலகமக்கள்) உயர்வுற வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகத்தின் காலத்திற்கு அப்பால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி. 639ல் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இஸ்லாத்தின் காலண்டர். இதன்படி நபிகள் நாயகத்தின் வாழ்கைக்காலத்தின் பின் அக்காலத்தை மையமாகக் கொண்டு அதிலும் குறிப்பாக.. நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த காலம் தொட்டு ( கிரிகோரிஸ் காலண்டரில் கிருஸ்துவின் பிறப்பை கணக்கில் எடுத்துக் கொள்வது போல) துவங்குகிறது இக்காலண்டர். இஸ்லாமிய காலண்டருக்கு ஹிஜ்ரத் காலண்டர் எனவும் பெயர் உண்டு. ஹிஜ்ரத் என்றாலே புலம்பெயர்வு என்றுதான் அர்த்தம். 


இஸ்லாமியக் காலண்டர் நிலவினை அடிப்படையாகக் கொண்டது. உலககெங்கும் சூரிய அடிப்படையானதும், சூரியன் மற்றும் சந்திரன் இரண்டு ஒளிரும் கிரகங்களையும் அனுசரித்து வருவதுமான பல்வேறு காலண்டர்கள் இயக்கத்தில் உள்ளன. முழுக்க முழுக்க சந்திரனின் அடிப்படையில் ஆன நிலவு காலண்டர் என்பது இஸ்லாத் காலண்டர் மட்டும் தான்.


அல்லாஹ் ஆணைப்படி இஸ்லாத் காலண்டர்கள் 12 மாதங்களையும், 7 நாட்களைக் கொண்ட வாரங்களையும்.. இரவில் ஆரம்பிக்கும் நாளையும் கொண்டது.


நமது தமிழ் நாட்காட்டியின் படி நாள் என்பது காலையில் சூரிய உதயத்துடன் ஆரம்பிக்கிறது. முதலில் பகலும் தொடரும் இரவும் சேர்ந்த ஒரு நாள். கிரிகோரிஸ் காலண்டரின் நாள்.. நள்ளிரவில் ஆரம்பிக்கிறது. இரவு பன்னிரண்டு மணியில் இருந்து மருநாள் இரவு பன்னிரண்டு மணிவரையிருக்கும் இருபத்துநான்கு மணிநேரம் ஒரு நாள். இஸ்லாத்தின் நாளோ.. இரவு நிலவு உதித்தவுடன் மாலை நேரத்தில் ஆரம்பிக்கிறது. முதலில் வரும் முழுமையான இரவும் தொடரும் பகலும் சேர்ந்து ஒரு நாள் என்ற கணக்கில் வருகிறது. 


அதனால்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.. நாளின் தொடக்கத்தில் தூய இஸ்லாமியர்கள் “தக்பீர்“ சொல்ல வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். “தக்பீர்“ என்னும் துவக்க இறைவணக்கமானது சூரிய அஸ்தமனித்தின் போது சந்திர உதயகாலத்தில்.. அதாவது அரபு நாளின் துவக்கத்தில்.. சொல்லப்பட வேண்டும்.


அரபு மாதங்களைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. நிலவின் தேய்தல் வளர்தனில் அடிப்படையில்தால் மாதங்கள் அமைந்திருக்கின்றன. நிலவின் அடிப்படையில் வரும் மாறுதல்களைப் பொறுத்தே நிகழ்மாற்று தகவமைப்புடன் ( Changeable according to current events) இஸ்லாமிய மாதங்கள் பிறக்கின்றன. நிலவின் வளர்ச்சியும் தேய்தலும் நேரடியாக இஸ்லாத்தின் மாதங்களை பாதிக்கின்றன. அமாவாசையும் பௌர்ணமியும்தான் அவர்தம் அன்றாட வாழ்வியலையும், வாழ்வின் கொண்டாட்டங்களையும், விழா நாட்களையும் தீர்மானிகின்றன. நிலவுக்கும் முசல்மான்களுக்குமான பிரிக்கமுடியாத பிணைப்பை உணர்ந்த நம்மவர்கள்தான் “அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் பார்த்தாயா?“ எனச்சொல்லி சொல்லி வியந்தார்கள்.

2 comments:

  1. நிலவின் தேய்பிறை வளர்பிறையோடு ஒன்றிவரும் இசுலாம். ஏற்கனவே தெரிந்தவற்றின் கூடுதல் புதிய அறியாத தகவல். கொஞ்சம் சுவாரசியம் கூட்டுகிறது.

    ReplyDelete
  2. நிலவின் தேய்பிறை வளர்பிறையோடு ஒன்றிவரும் இசுலாம். ஏற்கனவே தெரிந்தவற்றின் கூடுதல் புதிய அறியாத தகவல். கொஞ்சம் சுவாரசியம் கூட்டுகிறது.

    ReplyDelete