நமது காலண்டர் கட்டுரைத்தொடர்.. தொடர்ந்து இப்போது சீனத்தில் ஆய்ந்து கொண்டிருக்கிறது.
இன்று ஆடி முதல் நாள். ஆடி என்றாலே தமிழகத்தில் பல விசேசங்கள் களைகட்டும்…
- ஆடி தள்ளுபடி விற்பனை
- ஆடி கூழ் ஊத்துதல்
- ஆடிக்கு புதுப்பெண்னை தாய்வீட்டுக்கு அழைத்தல்
- ஆடி பதினெட்டு
- ஆடி அம்மாவாசை
ஆடிக்காத்தில் அம்மியும் பறத்தல் - போன்ற பல விசயங்கள் உங்கள் கவனத்தில் ஆடி.. ஆடி.. உங்களை அசர வைத்திருக்கும். இதற்கான காரணத்தை, ஆடி மாதத்தில் அப்படி என்ன கூடுதல் விசேசம் என்பதை.. ‘காலண்டர்கள் கதைகள்’ உங்களுக்கு எடுத்தியம்பக் கடமைப்பட்டுள்ளதால் அடுத்தவாரம் வரை உங்களைக் காக்கச்செய்யாமல் வழக்கமான கட்டுரைக்கு கூடுதலாக ஒரு ‘ஆடி ஆஃபர்’ கட்டுரை.
முதலில் இந்த ஆடி முதல் நாளைப்பற்றிக் காண்போம்.
நாம் ஏற்கெனவே மகரசங்கராந்தி என்றால் என்ன என்பதையும், மகர சங்கராந்தி அன்றுதான் அதாவது தை முதல் நாள் அன்றுதான் உத்திராயனத் துவக்கநாள் என்றும் பார்த்துள்ளோம். அவற்றைப் பார்க்கும் பொழுதே ஆடி முதல் நாள் கடகசங்கராந்தி அல்ல.. ‘தட்சினாயண புனித கால துவக்க நாள்’ என்று கண்டோம். அதுவரை வடக்கு நோக்கி பயணித்த சூரிய ஒளி இன்றுமுதல் அதாவது ஆடி ஒன்று முதல் தெற்கு நோக்கி பயணிக்க துவங்கும் நாள் என்பது நமக்குத் தெரியும்.
இதுவே இந்த நாளின் சிறப்பு. இது தவிர என்னவென்று பார்த்தால்… பொதுவாக ஆண்டிற்கு நான்கு பருவங்கள். வசந்தகாலம், வெய்யில்காலம், குளிர்காலம், இலையுதிர்காலம் என்பதுதான் அது. இவற்றில் உத்திராயனத்தில் வசந்தமும் வெய்யில்காலமும் முடிந்துவிடும். எஞ்சிய காலங்கள் தட்சினாயனத்தில்.
நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தட்சிணாயன காலம் விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற காலம். கர்நாடகமே தடுத்தாலும் காவிரியில் வெள்ளம் வரும் மழைக்காலம். தூர்வாரப்படாத எரிகளிலும் நீர்தங்கும் கார்காலம். எனவே காற்றடிக்காலம் ஆரம்பிக்கையில் நடவு செய்தால் மழைக்காலத்தில் வளர்ந்தோங்கி, மழைமுடிந்து.. குளிர் துவங்க அறுவடைக்கு வந்துவிடும். எனவே மாமழை போற்றி வாழ்ந்த தமிழ்ச்சமுதாயம் ‘ஆடிப்பட்டம் தேடி விதைத்தது’. உழுதுண்டு வாழ்வாரும் அவரைத் தொழுதுண்டு வாழ்வாரும் ஆடிப்பட்டத்தை அடிபணிந்து மதித்தனர்.
அதன் விளைவே.. ஆடிக்கு அம்மனுக்கு ‘கூழ் ஊற்றும்’ நோன்பும். அதெப்படி என்றால், ஆடி துவங்கினால் விவசாயத்தில் கடும் உழைப்பைச் சிந்தத் துவங்கிவிடுவான் தமிழன். அவனது உழைப்பிற்கு ஈடுகட்ட எக்ஸ்ரா ஊட்டச்சத்து மிக்க பாணம் தேவைப்பட்டது. அதை வீடு வீட்டிற்கு காய்ச்சிக்குடிப்பது ஏற்கெனவே இருக்கும் வேலைப்பளுவில் இன்னும் கொஞ்சம் சேர்ப்பது போலாகிவிடும். எல்லோருக்கும்; தேவைப்படுமென்றால் ஏதேனும் ஒரு கம்பெனி ஆரம்பித்து பாட்டிலில் ‘கூழை’ அடைத்து விற்பனை செய்யலாம் என்ற ‘வணிகஅறிவு!’ தமிழனுக்கு இல்லை.
அவனின் உழைப்பையும், உயர்வையும், கொண்டாட்த்தையும், திண்டாடட்டத்தையும் சாமியின் பெயரால் செய்வது தமிழனுக்கு கைவந்த கலை. எச்செயல் செய்யினும் அதை காரண காரியத்தோடு செய்யும் தமிழனின் சாலச்சிறந்த ஏற்ப்பாடு. எனவே, உழைக்கும் மக்களின் ஊட்டச்சத்து பானமான கூழையும் கடவுளின் பெயரால் குடுக்கலானான். ஆதனால், தவறாது தரமிக்க கூழும் தடையின்றிக் கிடைத்தது. தெய்வ சிந்தனையுடன் கிடைத்ததால் விவசாயியின் மனமும் உழைப்பில் ஒருமிக்கவும் ஏதுவாக இருந்தது.
ஆடிக்கு ஏன் அழைக்கிறார்கள் என்பதும் இந்த விவசாய நடைமுறையின் பாற்பட்டே. விவசாயமே தலையாய தொழில். புதுமாப்பிள்ளையின் மனசு கூட அகசுகங்களில் சிக்கி, அடிப்படை வேலையிலிருந்து பிசகக்கூடும் என்பதால்.. ஆடியில் பெண்களைப் பிரித்து, மாப்பிள்ளையை மாட்டோடு அனுப்பி, வயக்காட்டோடு உழைக்க வைத்துப் பின்னர் வீட்டோடு சேர்த்தனர். ( ஆடியில் பெண்ணை வீட்டிற்கு அழைக்க, ஆடியில் பிள்ளைக் கருவானால் சித்திரையில் பிறந்து சிரமப்படும் என்பதும் ஒரு காரணம்தான் )
ஆடி பதினெட்டும் அப்படித்தான். ஆடி துவக்கத்திலிருந்து இருக்கும் நிலம் ஓழுங்கு செய்து விவசாய வேலைகளைப் பார்க்கத்துவங்கும் விவசாயி.. ஆரம்பக் கட்ட வேலைகளை முடித்து அடுத்துவரும் வேலைக்கு நீர் எதிர்பாக்க.. பதினெட்டாம் நாள் வருகிறது. அந்த பதினெட்டாம் நாளில் புதுப்புனல் வயல்புக மகிழ்வுறும் உழவன் அன்று கொண்டாடி.. அடுத்தும் உழைக்க ஓடுகிறான். இந்த ஆடிப்புனல் தேடிவரும் நாளே ஆடிபதினெட்டு.
நிலவோடு சேர்ந்து தன் காலண்டரை உருவாக்கிய மனிதன்.. நிலத்தோடு அதிகம் சேர்ந்து வாழும் மாதம் ஆடி. இந்த ஆடியில் வரும் அம்மாவாசையை அவன் அதிகம் கவனித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லையல்லவா?
அதெல்லாம் சரி.. ஆடித்தள்ளுபடி விற்பனைக்கும்.. இந்த விவசாயப் பாரம்பரியத்துக்கும் என்ன சம்மந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்?
அதாவது, ஆடியில் விவசாயம், விவசாயம் என்பதே கண்ணும் கருத்துமாக இருந்த தமிழன் ஆடியில் விவசாயம் தவிர பிற எல்லாக்காரியத்தையும் நிறுத்தி வைத்தான். சொத்துக்கள் வாங்குவதில்லை. விற்பதில்லை. கல்யாணம் காய்ச்சிகள் செய்வதில்லை. சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை. நகை நட்டுக்கள் வாங்குவதில்லை. கைப்பொருளை உழவுக்குத்தவிர வேறு எதற்றும் செலவழிப்பதில்லை. ஆடி ஆகாத மாதமில்லை. ஆடியில் விவசாயம் தவிர வேறு காரியங்கள் செய்வதில்லை அவ்வளவுதான்.
இதைச் சொல்லி வரும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு சேய் ஒட்டகம், தன் தாயிடம் சில கேள்விகள் கேட்டது.
“அம்மா.. நமக்கு ஏன் முதுகில் இவ்வளவு பெரிய மலைபோன்று அசிங்கமாக இருக்கிறது?”
“நாம் பாலைவனத்தில் பயணிக்கும் போது.. நீண்ட நாட்கள் இடைவெளியில் கூட குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். அதற்காக கிடைக்கும் போது தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக்கொள்ள அத்தகைய அமைப்பு இருக்கிறது குழந்தாய்”; தாய் பதிலிறுத்தது.
“சரியம்மா.. நமக்கு ஏன் கால்கள் குதிரைபோல் வனப்பில்லாமலும், பாதங்கள் சப்பென்று அகன்றும் உள்ளது?”
“பாலைவனத்தில் புதைமணலில் நடக்க ஏதுவாகவே அப்படி அமைந்துள்ளது”
“ஏன் நமக்கு காளைகளைப் போல் கவின் மிகுந்ததாய் இல்லாமல் மூக்கின் சவ்வு மூக்குத்துவாரத்தையே மூடும் அளவு வளர்ந்து கவலை தரும்படி இருக்கிறது?”
“பாலைவனத்தின் புழுதிப்புயல் மூக்கில் நுழைந்து நமக்கு இன்னல் தரா வண்ணம் அவ்வாறு அமைந்துள்ளது. பிள்ளாய்”; என தாய் இதற்கும் பதிலளித்தது.
கடைசியாக குழந்தை ஒட்டகம் “அதெல்லாம் சரி அம்மா! நாம் ஏன் பாலைவனத்தில் இல்லாமல் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறோம்?” என்று கேட்டது..
தாய் பதில் சொல்லத்தெரியாமல் முழித்தது..
இந்த நிலைதான் தமிழனுக்கும் ஆடிக்கும் இப்பொழுது. எல்லாமே விவசாயம் சார்ந்து பழக்கத்திற்கு கொண்டு வந்த மனிதன் கொஞ்ச காலமாய் விவசாயத்தையே பழக்கத்திற்கு கொண்டு வராமல் போனான்.
ஆடியில் விவசாயம் தவிர பிற காரியங்களில் கவனம் செலுத்தாதே என்பது காலப்போக்கில்.. ஆடியில் எந்தக் காரியத்திலும் கவனம் செலுத்தாதே என்பதாகிவிட்டது. ஆடியில் பிற செலவுகள் செய்யாதே என்பது.. ஆடியில் செலவு செய்யாதே என்பதாகிவிட்டது.
இப்படிச் செலவு செய்யாமல் இருந்தால் சும்மாவிடுமா வியாபார உலகம்? ஆடியில் ஆஃபரைக் கொண்டுவந்தது. அதிகமாய் கூட்டிய விலையை சற்றுக் கூட்டிக் குறைத்து சரக்குகளை விற்று ஆடியின் அதிர்ஷ்டக்காற்றை அனுபவத்துக் கொண்டிருக்கிறது.
super
ReplyDelete